மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

தலைப்பு

விபரம்

தலைப்பு

விபரம்

தலைப்பு

விபரம்

தலைப்பு

விபரம்

தலைப்பு

விபரம்

தலைப்பு

விபரம்

Thursday, April 30, 2015

நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்:

மொழிபெயர்புக் கட்டுரை, மூலம்: ஆங்கிலம் 

  ‘நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்: 

இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை’ 
மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு வெளியீடு, 2013 
ISBN: 1-56432-993-3,(சுமார் 130 பக்கங்களுக்கு மேல்) 


 இந்த ஆவணத்தை வாசிப்பது என்பது மிகவும் மனச்சங்கடமானது. சேக்ஸ்பியரின் மக்பெத் நாடகத்தில் மக்பெத் “நான் அளவுக்கு அதிகமாகவே கொடூரங்களைத் தின்றவன்” என்று ஒரு குறியீடாகவே சொல்லுவான். இவ்வகை வாக்குமூலங்களை படிக்கின்ற போதும் அப்படித்தான் ஒன்றை விஞ்சியது மற்றொன்றாக அடுத்தடுத்துக் கொடூரங்களையே நாம் விழுங்கவேண்டியிருக்கின்றது. மனதை உறுத்தும் அதிர்ச்சியும் வெறுப்புமான உணர்வுகளின் ஆக்கிரமிப்பும், விட்டு விலகித் தப்பிக்க முடியாதபடிக்கு மனத்தளவிலாவது தூரவிலகி ஓடிவிடவேண்டும் என்ற விருப்பும் ஏற்பட்டுவிடுகின்றது. மனிதர்களின் ஆண்குறிகளுக்குள் கூரிய ஊசி செலுத்தப்படுகின்றது என்று அறிந்து கொள்ளுகின்ற போது அறங்கள் நோயில் இருப்பதையும் நோயில் இருப்பவற்றவற்றின் மீது அளவற்ற வெறுப்பும் தவிர்ப்பும் மேலோங்கி அழகியலின் மீதும் நமக்கு வெறுப்பே உருவாகின்றது.

ஒருவரின் வாக்கு மூலம் இப்படி இருக்கின்றது: ”சிறிய உலோகக் குண்டுமணிகள் ஆண்குறியின் சலத் துவாரத்தினுள் செலுத்தப்பட்டன. [...]வெளிநாட்டிற்கு வந்த பின்னரே இந்தக் குண்டுமணிகள் அறுவை சிகிச்சை மூலம் வெளிநாட்டு மருத்துவர்களால் அகற்றப்பட்டன. (பக்கம்4) யோகலிங்கம் விஜிதா என்ற 27 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் சித்திரவதை செய்யப்பட்டு கடினமான, கூம்புவடிவ வாழைப் பொத்திகள் பெண்குறிக்குள் திணிக்கப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றாள். (பக்கம்19) 1997 ஆம் ஆண்டு மட்டக்களப்பைச் சேர்ந்த முருகேசபிள்ளை கோணேஸ்வரி என்பவர் பொலிஸாரால் அவரது வீட்டில் வைத்து கும்பலாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கொலைசெய்து அவரது பெண்குறியில் வெடிகுண்டை வெடிக்கவைத்து கும்பல் வன்புணர்வு செய்யப்பட்ட எல்லாவகைத் தடயங்களையும் அழித்துவிட்டனர். (அதே பக்கம்)

 “சுப்பிரமணியம் கண்ணன் என்ற வவுனியாவைச் சேர்ந்த […] நபரது மலவாசலூடாக முள்ளுக்கம்பி செலுத்தப்பட்டது” (பக். 21) மிகவும் கூரூரமானதும் மிக கொடூரமானதுமான இந்த நிகழ்வுகளின் விபரத்தை நான் இங்கே எடுத்துக்காட்டுவதற்கு வாசகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஆனால் இவற்றை சர்வ உலகத்திற்கும் வெளிப்படுத்தி, அவர்களின் தார்மீக ஆதரவையும் அதன்மூலம் இவற்றுக்கு எதிராகச் ஏதாவது செய்யப்படவேண்டுமென்ற அவாவையும் பெறவேண்டுமானால் இவற்றைப் பகிரங்கமாக வெளியிட்டுத்தான் ஆகவேண்டும். அதுவே மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவினரின் (Human Rights Watch) இந்த அறிக்கையின் நோக்கமுமாகும். வாசிப்பதை நிறுத்தி, இந்த ஆவணத்தை மூடிவிட்டு, கண்ணில் படாமலும் மனதை உறுத்தாமலும் எங்கேயாவது தூர எறிந்துவிட வேண்டுமென்ற உணர்வு ஏற்படலாம் என்பதும் ஜதார்த்தமானதும், புரிந்துகொள்ளக்கூடியதும்தான். ஆனால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்த மனித ஜீவிகள் தொடர்ந்தும் தங்களுக்கு நேர்ந்த பயங்கரங்கள் ஏற்படுத்திய அதிர்ச்சிகளுடனும் மனப்பலவீனங்களுடனும் எங்களுக்கு மத்தியில் வாழவேண்டுமே. இந்த ஆவணத்தை நாம் தூர வீசிவிட நினைப்பது போல் பாதிக்கபட்டவர்களும் தங்களுக்கு நேர்ந்த இரத்தமும் சதையுமாக அனுபவப்பட்ட இவ்வகைப் பயங்கரங்களை தூரவீசிவிட ஒருபோதும் முடியாது. இயலவே இயலாது. சித்திரவதைக்குள்ளனவர்கள், அவ்வாறு பயங்கரக் கொடூரங்களை அனுபவித்தவர்கள் ஒருபோதும் மீண்டதில்லை. இவ்வகை அனுபவங்களுக்கு முன்னர் இருந்த நான் என்ற தானை அவர்கள் ஒருபோதும் மீட்டெடுக்கமுடியாது. அவர்கள் இனி என்றென்றைக்கும் சித்திரவதை செய்யப்பட்டவர்களாக, வன்புணர்வு செய்யப்பட்டவர்களாகவே எஞ்சியிருப்பார்கள். நடந்துவிட்ட ஒரு தனித்த நிகழ்வு என்பது உண்மையில் வாழ்நாள் முழுவதற்குமான நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தி விடுகின்றது. 

 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி, டில்லி பஸ் ஒன்றில் வைத்து இருபத்தி மூன்று வயதான ஜோதி சிங் பாண்டே என்ற யுவதி கும்பல் வன்புணர்வுக்கு ஆளானதும் அதனால் ஏற்பட்ட காயங்களில் அவர் பின்னர் இறந்து போனதுமான கொடுஞ்செயல் தேசிய அளவிலும் உலக அளவிலும் நீதிகோரி நின்றதற்கு பலவேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு காரணம் அவர், தான், தன் பெற்றோர், தன் வீடு என்ற வாழ்ந்த தனிநபராக அவர் எங்களுக்குத் தெரிவதுமாகும். அவருக்கு நடந்த கொடூரத்தை, வாழ்ந்துகொண்டிருந்த மனிதஜீவனுக்கு ஏற்பட்ட துயரமாக நாமும் அதில் நம்மை இணைத்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்த ஆவணப் பதிவில் வருகின்ற நபர்கள் இலங்கையில் தன்மீதும் தனது குடும்பத்தினர் மீதும் கட்டவிழ்த்து விடக்கூடிய ஒடுக்குமுறைக்கும் வன்முறைக்கும் பயந்து முன்னெச்சரிக்கையாக முகமற்றுப்போனவர்கள், பெயரற்றுப்போனவர்கள். இந்த அறிக்கையின் நோக்கம் உண்மைகளைப் பேசுவதே. எனவே உண்மைகள் திட்டமிட்டவாறு ஈவிரக்கம், அலங்காரங்கள் எதுவுமற்றுப் பதிவாகியிருக்கின்றன. மனிதர்கள் இதற்குக் கொடுக்கும் விலை பற்றி வாசகர்கள் உணர்ந்துகொள்ளவதுடன் அறச்சீற்றம், அனுதாபம் மற்றும் எதிர்ப்புணர்வு போன்றவற்றையும் அவர்களிடத்தில் வேண்டி நிற்கின்றது. ”அதிர்ச்சிக்குப் பின்னான மனஅழுத்தமும் மனக்குழப்பமும்” என்ற சொற்தொடர் மருத்துவம் மற்றும் மன அமைதி தேவை என்பதைச் சுட்டி நிற்பினும் அது வாழ்வில் பட்ட அனுபவப் பாடுகளைச் வெளிப்படுத்துவதற்குப் பதிலாக மறைத்தே விடுகின்றது. 

 இந்த ஆவணத்தின் அறிமுகத்தில், இதில் வாக்குமூலம் கொடுப்பவர்கள் யாவரும் இலங்கையின் தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருந்து இப்போது வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள். சுமார் 12 மாத காலத்தில் பல்வேறு நாடுகளுக்கும், அதாவது அவுஸ்திரேலியா, பெரிய பிரித்தானியா, இந்தியா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களே இவை. இந்தப் பதிவில் இடம்பெற்றிருக்கும் சம்பவங்கள் யாவும் 2006 இல் இருந்து 2012 வரையான காலப்பகுதியில் இடம்பெற்றவை. இவற்றில் 75 பாலியல் வல்லுறவுகள் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றன. அதில் 31 ஆண்கள் மீதும், 41 பெண்கள் மீதும், மற்றும் 3 இளம்பராயத்தினர் மீதும் நடத்தப்பட்டவை.(பக்கம்2). இவற்றில் 67 விடயங்களில் பாதிக்கப்பட்டவர்களின் ஒப்புதலுடன் சுதந்திரமான வைத்திய சாட்சியங்களும் அத்தாட்சிகளும் பெறப்பட்டிருக்கின்றன. 

 பாலியல் ரீதியான வன்முறைகள் பொதுவாகவே பாலியல் ரீதியான மானபங்கப் படுத்தல்களுடன் தொடங்குகின்றன. பலாத்காரமாக நிர்வாணப்படுத்துதல், வெருட்டியும், மிரட்டியும், ஏசியும் அச்சங்கொள்ளவைத்தல், கேலி செய்தல், பெண்கள் குளிக்கும் போதோ அல்லது மலசலகூடம் செல்லும் போதோ அவர்களது அந்தரங்க சுதந்திரத்திற்கு இடையூறாக இருத்தல் போன்றவையே அவை. இவற்றின் உள்நோக்கம் மோசமாக இழிநிலைப்படுத்தி அவமானப்படுத்துவதாகும். நாங்கள் உனக்கு ஒரு பாடம் புகட்டுவோம் (புகட்டுவோம் என்ற வார்த்தை இங்கே வதைப்பதும் தண்டனை வழங்குவதும்: பாதிக்கப்படுபவரை இவ்வாறு கொடுமைப் படுத்துவதே சரியானதும் சட்டரீதியானதும் என்பவற்றைச் சுட்டிநிற்கின்றது. அவ்வாறெனில் வஞ்சம் தீர்க்கும் இனமோக நீதியை நிறைவேறும் வெறுங் கருவிகளாகவே வதைப்பவர்கள் தம்மை வரித்துக்கொண்டு, தாம் உள்ளூர மகிழ்ச்சியடைவதற்கும் பாதிக்கப்படுபவரை அதிர்ச்சிதரும் காட்டுமிராண்டித் தனமான கொடூரச் சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தி, பாலியல் வல்லுறவு செய்யும் தமது கொடுஞ்செயல்களையிட்டுப் பெருமிதமுங் கொள்ளலாம். வதைப்பவர்களல்ல, மாறாக பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகள் என்று சுட்டப்படவேண்டியவர்கள்.) பாலியல் துன்புறுத்தல்கள் “அடிக்கடி ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால், பலதரப்பட்ட பார்வையார்கள் முன்னிலையில் இன்னும் சொல்லப்போனால் பாதுகாப்புப் படையில் அங்கம் வகிக்கும் பெண் சிப்பாய்களும் பார்த்திருக்க நடத்தப்படுகின்றன”.(பக்.33) சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவும் அப்பாவிகளை வாழ்க்கையில் ஒரு போதுமே கண்டிராதவர்களையும் அறிந்திராதவர்களையும்கூட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே இவர்கள் என்று அடையாளம் காட்டவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கிவிடுகின்றன. ஆனாலும் அவ்வாறு அடையாளங் காட்டுதலும் ஒப்புதலளிப்பதும் கூட அவர்களை கொடுஞ் சித்திரவதைகளிலிருந்தும் பாலியல் வல்லுறவிலிருந்தும் காப்பாற்றிவிடுவதில்லை. சில நேரங்களில் பாதிக்கப்படுபவரின் குடும்பத்தினர் காசு கொடுத்தால் மட்டுமே பாதிக்கப்படுபவர் ”தப்பிச்” சென்றுவிட அனுமதிக்கப்படுவார். 

இலங்கை நாட்டில் பொலிஸ் படைப்பிரிவும் கூட மிகுந்த இராணுவமயப்பட்டிருக்கின்றது. அதுபோலவே இராணுவத்தினர் பொலிஸாருக்குரிய அதிகாரங்களை இலகுவாகத் தம் கைகளில் எடுத்துச் செயற்படுகின்றனர். இரண்டு படைத்தரப்பினரும் சட்டம், நீதி போன்ற எவ்வித கட்டுப்பாடுகளுமற்று முழுச் சுதந்திரமாக, சட்டப் பாதுகாப்புடன் பாதுகாப்பற்ற அப்பாவி வெகுஜனங்கள் மீது அதிகாரஞ் செலுத்துகின்றனர். தமக்கேற்படும் பிரச்சினைகளை இவர்களிடம் சென்று முறையிட்டால் தம் மீது மேலும் அடக்குமுறைகளும் அநீதியும் கட்டவிழ்த்து விடப்படும் என்ற பயப்பீதியோடுதான் மக்கள் வாழ்கின்றனர். இது நரிகளினதும் ஓநாய்களினதும் குற்றச் செயல்களை வேறு வழியின்றி அவற்றிடமே சென்று முறையிட்டுக்கொள்ளும் ஆடுகளின் தலைவிதியையொத்தது. கைதாகும் ஒருவர் பெருந்தொகைப் பணம் கொடுக்கும் வசதிகளுடன் அல்லது மேலிடத்தில் அலுவல் பார்க்கத் தெரிந்த செல்வாக்குள்ள சிங்களவர்களைத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது போனால் கைது செய்யப்படும் தமிழர்கள் பாலியல் வல்லுறவுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகமாட்டார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. (பக். 36) தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்பது அறவே இல்லை என்று ஒவ்வொரு தமிழரும் உணர்ந்துகொள்ளும்படியாகத்தான் ”பாதுகாப்புப் படையினர்” என்று சொல்லப்படுபவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன. 

 பாலியல் வன்முறையின் பிரயோகம் என்பது ஒரு ”குறித்த பொருட்டற்ற நிகழ்வென்றோ அல்லது அயோக்கியச் சிப்பாய் ஒருவனின் ஒழுங்குமீறல்” என்றோ ஒதுக்கிவிடமுடியாது. ஆனால் பலமுறை முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும் இவ்வகைக் குற்றச் செயலுக்காக ஒரு உயர் அதிகாரிதானும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டதில்லை. மறுபக்கத்தில் தமிழ்ச் சமூகத்தில் நிலவும் பிற்போக்குத்தனங்களினாலும் பாலியல் தொந்தரவுகளைப் பற்றியும் பாலியல் வல்லுறவு பற்றியும் வெளிப்படையாகப் பேசுவதற்கு தயக்கம் காட்டப்படுகின்றது. ”ஆண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வல்லுறவும் ஆண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலகளும் வெளிக்கொண்டுவரப்படுவதுமில்லை அது பற்றிப் பேசப்படுவதுமில்லை.” இவை பாதிக்கப்பட்டவர்களாலும் வெளியே சொல்லப்படுவதில்லை அவற்றின் சூத்திர தாரிகளாலும் மறைக்கப்பட்டுவிடுகின்றன. மேலும் இவை வெளியே பேசப்படக்கூடாத மூடுபொருளாகவே இருந்துவிடுகின்றன. (பக். 45) 

இறுதியாக, இவற்றைப் பற்றிப் பக்கச் சார்பற்ற சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ள முடியாது இலங்கை அரச தரப்பு முட்டுக்கட்டைகள் போடுகின்றது. இங்கே இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை சமுத்திரத்தின் அதலபாதாளம்வரை பரந்திருக்கும் பனிப்பாறையின் வெளித்தெரியும் சிறு நுனிபோன்றவைதான்: அனேகமானவை இன்னமும் சுவர்க்கத்தீவின் மூடிய எல்லைகளுக்குள் மௌனத்தில் புதைந்து அழுந்துகின்றன. இன்னமும் சிறையில் வதைபடும் மனிதர்களை எண்ணிப்பார்க்கும் போது நடுங்குகின்றது. அவர்கள் முகமற்றவர்கள், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வெளித்தெரிவதில்லை. அவர்களைச் சூழ நிற்பவர்களுக்கு மட்டுமே கேட்கும் அவர்களது முனகல்களும் ஓலங்களும் வேறொருவர் செவிகளுக்கும் எட்டுவதில்லை. ஒரு கொஞ்சம் பேர் தாம் பட்ட பாடுகளை இந்த அறிக்கையில் ஆவணப்படுத்தும் போது இருவகை உணர்வுகளுக்குள் தள்ளப்படுகின்றனர். ஒன்று அவர்கள் வெளிநாடொன்றில் இருப்பதால் உருவாகும் பாதுகாப்பு உணர்வு மற்றையது அவர்களது அனுபவத்தை விபரிக்கும் போது ஏற்படும் அதே பயங்கரத்தை மீண்டும் பெறும் உணர்வு. “முறைசார்ந்த மற்றும் முறை சாரா புனர்வாழ்வு முகாம்களில் தொடர்ந்தும் பாலியல் வல்லுறவு என்பது நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது. (பக். 29, அழுத்தமாக) “பாதுகாப்புப் படையினர் நடாத்தும் பாலியல் வல்லுறவுகள் பற்றிய குற்றச் சாட்டுக்களை இலங்கை அரசு முரட்டுத் திமிர்தனத்துடன் மறுத்தே வருகின்றது. (பக். 43) 


குடிநீர், உணவு, மற்றும் மருந்துகளுக்கு மிகவும் பற்றாக்குறை நிலைவிய, போர் உக்கிரமாக நடைப்பெற்ற பகுதிகளில் 2009 ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்களைத் கட்டாயமாகத் தடுத்து வைத்து அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர் என்றும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் இருந்து மக்கள் வெளியேற முயற்சித்தபோது அவர்கள் மீது தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பலமக்கள் கொல்லபட்டிருக்கின்றனர் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அவர்கள் மீது குற்றஞ் சுமத்துகின்றது.(பக்13) மேலும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் இந்த அறிக்கையின் நடுநிலை பற்றி ஒருசிலர் கேள்வி எழுப்பக்கூடும். இவ்வறிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவினர் தெரிவிக்கும் விபரங்கள் யாவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மேற்குலகத்தவர்களுக்கு தெரிவிக்கும் பொய்த் தகவல்களின் அடிப்படையில் எழுந்தவை என்று நிராகரித்து விடவும் கூடும். ஜார்ஜ் ஆர்வெல் என்ற எழுத்தாளர் “எழுத்தாளர்களும் கடற்பூதமும்” என்ற கட்டுரையில் “ஒரு பிரதியினை நாம் வாசிக்கும் போது ஏற்படும் எமது உணர்வுகளை அப் பிரதியோடு தொடர்பற்ற நாம் வரித்துக்கொண்டிருக்கும் விசுவாசங்களே தீர்மானிக்கின்றன” என்று எழுதியுள்ளார். நடைபெற்றதும் தொடர்ந்து நடைபெறுவதுமான இக் கொடுஞ்செயல்கள் பற்றி அனேக சிங்கள மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள் என்பதும் இந்த ஆவணம் அவர்களின் கவனத்தை ஈர்த்து, இக் கொடுஞ்செயல்களுக்கு எதிராக அவர்கள் செயற்பாடில் இறங்குவார்கள் என்பதும், அதன்போது அவர்களின் சுலோகம் “எங்களின் பெயரால் இந்த அநியாங்களை அனுமதிக்கமாட்டோம்” என்றிருக்கும் என்பதும் எமது நம்பிக்கை.

 “இவ்வளவு அறிந்த பின்னரும் என்ன மன்னிப்பு?”
(“After such knowledge, what forgiveness?”)
 -டி.எஸ்.எலியட், முதிர்வு (Grontion)என்ற கவிதையில் 


 (தமிழில்: ந.சுசீந்திரன்) 
South Asia Analysis Group: Paper No. 5904. 2 April 2015
 Colombo Telegraph: 3 April 2015

Tuesday, October 29, 2013


அன்பு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவருக்கும்,

எங்கள் அப்பா இராமநாதர் சின்னதம்பி நடராசா (04.02.1930-29.09.2013) அவர்கள் இறந்து 31 ஆவது நாள் அண்மிக்கின்றது. அந்த நாளை, இறுதிக் கிரிகைகளில் கலந்து கொண்டோர், நேரில் வந்து துக்கத்தில் பங்கெடுத்தோர், வரமுடியாது தொலைபேசி, மின் செய்தி, மின் அஞ்சல்,முகநூல் மற்றும் நட்புக்களின் தூது போன்றவற்றால் தங்கள் அன்பை வெளிப்படுத்திய அனைவரையும் அழைத்து சேர்ந்து உணவுண்டு, ஒரு சில வழி வழி முறைமைகளின் மூலம் கழிக்கவேண்டும் என அம்மாவும் குடும்பத்தினரும் எண்ணியிருகின்றனர். இந் நிகழ்வு
 
ஞாயிற்றுக்கிழமை, 03.11.2013 அன்று 11:00 மணி தொடக்கம் 14:00 மணிவரை

80-82 Lythalls lane,
Holbrook,
Coventry CV6 6PT
United Kingdom
 
என்ற முகவரியில் நடைபெறும். உங்கள் அனைவரையும் காண ஆவலோடிருக்கின்றோம். உங்கள் தொடர்புகள், வரவுகள், குசலங்கள் எங்களை ஆறுதல் படுத்தின என்பதையும் சொல்லிவைக்க விரும்புகிறோம். நன்றி!
 தொடர்பு தொலைபேசி இலக்கம்: 0044-2477673113

Sunday, October 27, 2013


                                       திரு சின்னத்தம்பி நடராசா (04.02.1930 — 29.09.2013)

நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இலங்கை ஒட்டங்குளம், கொழும்பு,  கனடா  ரொரன்ரோ, இங்கிலாந்து கொவன்றி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதர் சின்னத்தம்பி நடராசா அவர்கள் 29.09.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தில் காலமானார்.
இவர், விஸ்வநாதர் இராமநாதர்(பொக்கட்டியார்) அவர்களின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற சின்னத்தம்பி(நீளியார்) -வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை-தையல்முத்து தம்பதிகளின் மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுசீந்திரன், கலைச்செல்வி, சுசீஸ்வரன், சோதீஸ்வரன், கலையரசி, இராஜசுசீந்திரன், சுசீஆனந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சேதுப்பிள்ளை, காலஞ்சென்ற கதிரவேலு(பொலிஸ்), காலஞ்சென்ற குமாரசாமி, மனோன்மணி(ஓய்வுபெற்ற தாதி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இன்பராணி, சச்சிதானந்தம், தயாரஞ்சினி, நவரஞ்சினி, துறைவன், சுதர்சினி, தாருணி ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற சண்முகம், நடராசா(சின்னத்தம்பி), விஜயரத்தினம்(நல்லையா), பத்மநாதன்(பழனி), விமலா, ரவீந்திரன், கலா, ஜெகதீஸ்வரன்(குழந்தை), ஈஸ்வரன் ஆகியோரின் தாய் மாமனாரும்,
காலஞ்சென்ற தம்பையா, காலஞ்சென்ற ஏரம்பு, கண்மணி, காலஞ்சென்ற கண்மணி, காலஞ்சென்ற பங்கராசா, காலஞ்சென்ற இரத்தினசிங்கம், காலஞ்சென்ற மணியம், கனகேஸ்வரி(சின்னக்கிளி) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கனகம்மா இரத்தினசிங்கம், கணபதிப்பிள்ளை பரராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
இந்திரா, பூபதிராசா, காலஞ்சென்ற சந்திரா, தவராசா, ராணி, காலஞ்சென்றவர்களான சித்திரா, திருக்குமார், மற்றும் வனிதா, பாமா, பரமேஸ்வரி, நாகலிங்கம் ஆகியோரின் அன்புக் குஞ்சியய்யாவும்,
டினோ, அன்புருவன், வேனில், செவ்வந்தி, கார்த்திகா, மானசி, மாசிலன், சுபீட்சன், முகூர்த்தா, ரட்சிகா, நேத்திரன், கோபிகா, பிறிநிதா, அபிஷா, அபூர்வன், மிதுலா, நிலா, அமிர்தா ஆகியோரின் செல்லப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி195, Belgrave Road, Coventry, CV2 5BL
இறுதிக் கிரிகைகள் கடந்த 10.10.2013 வியாழக்கிழமை அன்று Canley Crematorium & Garden Cemetery, Cannon Hill Road, Coventry CV4 7DF என்ற முகவரியில் நடைபெற்றது.

 

 


Wednesday, April 17, 2013

இலக்கியச்சந்திப்பில் என் அனுபவங்கள்

இலக்கியச் சந்திப்பில் என் அனுபவங்கள்

- நடராசா சுசீந்திரன்


இலண்டனில் ஏப்றில் 6ஆம் 7ஆம் தேதிகளில் நடைபெற்ற 40 ஆவது இலக்கியச் சந்திப்பில் நானும் கலந்து கொண்டேன். இலக்கியச் சந்திப்பு என்பது உண்மையில் புகலிட சிவில் சமூகத்தின் ஓர் வெகுஜன அமைப்பு. அது இதுகால வரை எந்த மரபு சார் நிர்வாக அமைப்பையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன் சட்டரீதியாக எங்கும் பதிவுசெய்யப்படவுமில்லை. சமூகம், இலக்கியம், அரசியல் போன்ற விடயங்களில் ஆர்வமுடைய தனி நபர்களின் சந்திப்பாக இது நகர்ந்து கொண்டிருக்கொண்டிருக்கின்ற அதேவேளை, சிறுபத்திரிகை ஆசிரியர்கள், ஆக்கதாரகள், வாசகர்கள் போன்றோர் ஒன்றாகச் சந்தித்து, காத்திரமான பல விடயங்களைக் கலந்துரையாடும் ஓர் அரங்காகவே இது தோற்றம் பெற்றது என்பதயும் நாம் மனங்கொள்ளவேண்டும்.

இன்று இலக்கியச் சந்திப்பு எதிர் நோக்கியுள்ள பிரச்சினை


சமூகம், இலக்கியம், அரசியல் போன்ற விடயங்களில் ஆர்வமுடையவர்கள் தவிர்க்க முடியாதபடி மனித உரிமை மீறல்கள், மாற்றுக் கருத்தின் மீதான அச்சுறுத்தல்கள், புலம்பெயர்ந்த பின்பும் தொடரும் சமூக பிற்போக்குத் தனங்கள், கலாசாரக் காவல் என்ற தொனியின் பெயரால் நடைபெறும் அடக்குமுறைகள், ஆயுத கலாசாரத்தின் ஆக்கிரமிப்பு போன்றவற்றுக் கெதிராகவும் பேசவும், செயற்படவும் தொடங்கினார்கள்., முள்ளிவாய்க்கால் துயருக்குப்பின் இலக்கியச் சந்திப்பில் இயங்கிய சிலர் இந்தச் சந்திப்பை இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடாத்தவேண்டும் என்று விரும்புகின்றனர். சிலர் இதனை இலங்கையின் அரசியல் நிகழ்வுகளை முன்னிறுத்தி எதிர்க்கின்றனர். இச் சந்திப்பின் தொடரை இலங்கையில் நடத்தவேண்டும் என்று கோருபவர்களில் ஒரு சிலர் பாரிஸில் இயங்கும் தலித் மேம்பட்டு முன்ணணியினைச் சேர்ந்தவர்கள், இதனால் அதை ஏற்பவர்கள் , எதிர்ப்பவர்கள் என்பதனை தலித்துக்கள் எதிர் வெள்ளாளர்கள் என்றவாறு இரு கன்னை அரசியல், இலக்கியச் சந்திப்புக்கு வெளியிலும் பொதுப்பரப்பிலும் பரப்பப்படுகின்றது. இலங்கையில் நடாத்த வேண்டுமென்று விரும்பியவர்கள் இதுவரை காலமும் இலக்கியச் சந்திப்பு கடைப்பிடித்துவரும் நடைமுறைகளுக்கு மதிப்பளிக்காமலும் நாடிழந்து வாழும் புகலிடத்து மனிதர்களின் மன உணர்வுகளைப் புரிந்து கொள்லாமலும் மிகவும் ஏதேச்சையாகவும், யாரும் கேள்வியழுப்பாதபடிக்கும் ஆயத்தங்களையும் பிரச்சாரங்களையும் அறிக்கைகளையும் தயார் செய்வதுடன், எதிர்ப்பவர்கள் மீது பலவேறு வழிகளிலும், மிகக் குறிப்பாக தலித்தியம், பெண்ணியம் போன்றவற்றை முன்னிறுத்தி வஞ்சம் தீர்த்துக் கொண்டிருகின்றனர். இதுவே இன்று நாம் எதிர்நோகியுள்ள பிரச்சினை.

நடந்து முடிந்த இலண்டன் இலக்கியச் சந்திப்பில், அதன் சுமூக ஓட்டத்தைக் குழப்பி, இரண்டாவது நாள், அடுத்த இலக்கியச் சந்திப்பு எங்கே நடாத்துவது என்ற முடிவெடுக்கின்ற தருணம் பார்த்து அந் நிகழ்வுக்குத் தலைமைவகுத்து, இலக்கியச் சந்திப்பின் நீண்ட 25 வருட வரலாற்றில் இதுநாள்வரை எவ்வித சம்பந்தமுமேயில்லாத பார்வையாளர்களை திட்டமிட்டுக் கொண்டுவந்து கையுயர்த்தக் கோரி, இனிமேலும் பொருத்த முடியாதபடி இலக்கியச் சந்திப்பினை உடைத்து, உற்சாகமாக இயங்கும் பலரது அரசியல் சமூக அக்கறைகளைத் தகர்த்தெறிந்து மகிழ்கின்றவர்களாக சிலரைக் காணமுடிகிறது. இந்த முனைப்பும் மகிழ்ச்சியும் அடகுமுறையை எதிர்கொள்ளும் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கு மிக ஆபத்தைத் தரக்கூடிய உட்கூறுகளைக் கொண்டிருகின்றது.
வஞ்சகத் தனமாகவும், அநாகரிகமாகவும் இலக்கியச் சந்திப்பு அபகரிக்கப் பட்டுள்ளது. கடந்த 24 வருட கால இலக்கியச் சந்திப்பின் போக்கில் இடம்பெறாத பலவற்றை நாம் நோர்வே ஒஸ்லோவில் நடைபெற்ற 37வது தொடரில் இருந்து இனங் காண்பதன் மூலம் எவ்வாறு ஒரு அபகரிப்பு கருதுகோளில் இருந்து செயலூக்கம் பெறுகின்றது என்று கண்டு கொள்ளலாம். பெருமளவிலான சந்தர்ப்பங்களில் இலங்கையரசைக் கேள்விக்குட்படுத்த விரும்பாத தலித் மேம்பட்டு முன்னணியின் அங்கத்தவர்களே தொடர்ந்த இலக்கியச் சந்திப்பின் ஏற்பாட்டுகுழு உறுப்பினர்களாகவும், இலக்கியச் சந்திப்பினை அடுத்தடுத்து நடத்துபவர்களாகவும் காணப்படுகின்றனர். அவர்களிடமிருந்தே இலங்கைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற விடாப்பிடியான போக்கும், அதனை மறுபரிசீலனை செய்ய எந்தத் தயார் நிலையுமற்ற போக்கும் கடைப்பிடிக்கப்பட்டதுடன். சர்ச்சைகள் எழுந்தவுடன் அதனை இன்னும் மூர்க்கமாகத் தடாலடி அறிக்கைகளும், எதேச்சையான ஆயத்தங்களும் செய்து, மறு கருத்துக் கொண்டவர்கள் மீது பொறுப்பற்ற அவதூறுகளும், பொய்யான குற்றச் சாட்டுக்களும் பொது வெளியெங்கும் விதைக்கப்படுகின்றன.

இலங்கையில் நடத்தியே தீரவேண்டும் என்ற பிடிவாதம் கொண்டவர்களின் ஒருபகுதியினர் இலங்கையில் நடத்தவிருக்கின்ற இலக்கியச் சந்திப்பு, இயக்கம்-, அமைப்பு-, நிறுவனம்-, கட்சி- என்பவற்றின் தலையீடற்ற, அவை சார்பான உள்நோக்கற்ற, அவற்றுக்கும் அப்பால் தனி மனிதர்களின் வெறும் அப்பாவிதனமான கோரிக்கை என்று பாசங்கு செய்கின்ற அதேவேளை, அக்குழுவின் இன்னொரு தொகுதி அங்கத்தவர்கள் குறிப்பாக யோகரத்தினம், முரளி, தமயந்தி, பானுபாரதி போன்றவர்கள் அதன் மறைமுக உள்நோக்கத்தைப் போட்டுடைக்கின்றனர். இந்த அபகரிப்பைப் புத்திசாதுரியமாக மேற்கொள்ள வேண்டுமென்கிற கபடத்தனமாக நீண்டகால நோக்குக்கொண்டிருந்த ஷோபாசக்தி போன்றவர்கள் மேற்கொள்கின்றனர்.

'இலக்கியச் சந்திப்பு தொடர்ந்தும் புகலிட நாடுகளிலேயே நடைபெற வேண்டும்' என்ற எமது விண்ணப்பம் இரு வகைக் காரணங்களில் இருந்து முன்வைக்கப்படுகின்றது. ஒன்று, சுமார் இருபத்து நான்கு வருடங்கள் வரை நடந்த இலக்கியச் சந்திப்பின் ஒரு 37 தொடர்களில் இருந்து பெற்ற அனுபவங்களின் அடிப்படையிலானது. புகலிட வரலாற்றில் அதன் இடம் ஊறுபடுத்தப்படாதிருக்கவேண்டும் என்ற அக்கறையின்பாற்பட்டது. சிலவேளைகளில் புகலிடத்தில் எமது அகதியாகிப்போன தனிப்பட்ட வாழ்வுகூட அர்த்தமற்றுப் போய்விடலாம். ஆனால் நமது சுமார் 30 வருட கால புகலிட சமூக வாழ்வு என்பதற்கு ஒரு அர்த்தம் இருகின்றது. புகலிடத்தில் முதலாவது தலைமுறை, புகலிட வாழ்வு, எதிர்ப்பு இலக்கியம், எதிர்ப்பு இயக்கம் என்பவை இலக்கியச் சந்திப்புடன் தவிர்க்கமுடியாத கூறுகளாய்ப் பின்னிப் பிணைந்து இருக்கின்றன. இவற்றின் தாற்பரியம் உணரப்படாது, மக்கள்விரோத அரசியலின் பாற்பட்டும் வெறும் மலினமான கேளிக்கை மனப்பாங்கிலும் இலக்கியச் சந்திப்பினை இடமாற்றஞ் செய்து அதன் எதிர்ப்பிலக்கியப் பண்புகளையும் வரலாற்றில் அதன் பாத்திரத்தையும் கேலிக்குரியதாக்கிவிட முடியாது. ஆனால் இன்று அது நடந்துவிட்டதோ என்ற அச்சம் பெரும்பன்மையான் புகலிடச் செயற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இரண்டு, இலங்கையின் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் இன்றைய ராஜபக்ஷ குடும்ப அரசியற் சூழலும் மற்றும் வடக்குக் கிழக்கில் நிலவும் ஜனநாயக மறுப்பும் மற்றும் தென்னிலங்கையில் அரசால் திட்டமிட்டு வளர்க்கப்படும் முஸ்ஸிம் மக்களுக்கு எதிரான பௌத்த தீவிரவாதம், சிங்கள கலைஞர்கள், மனித உரிமை வாதிகள், பத்திரிகையாளர்கள், மாற்றுக் கருத்தாளர்கள், அரசியல் விமர்சகர்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கும் கொலை அச்சுறுத்தல்கள், இடப்பெயர்வுகள் இன்னும் கூறவேண்டுமானால் குறிப்பாக வடக்கில் இராணுவக் கண்காணிப்பின் கீழ் வாழ்க்கை நடத்தும் துர்ப்பாக்கிய மக்களின் நிலை, பத்திரிகைக் காரியாலயம், அச்சகம் எரிப்பு போன்ற இன்னபிறவான, இலங்கை மீதான ஒரு விரிந்த பார்வையில், அங்கே இலக்கியச் சந்திப்னை நடாத்துவதற்கான அமைவான சூழல் இல்லையென்பதும் நாம் அகதிகளாக வாழுகின்ற நாடுகள் பல இலங்கையில் நடைபெறப் போகும் சர்வதேச மகாநாடுகளையே பகிஸ்கரிக்கக் கோரும் இந்த சந்தர்ப்பத்தில், இலக்கியச் சந்திப்பை அங்கு நடாத்துவது இலங்கை அரசின் இன்றைய போக்குக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமைந்துவிடும் என்றும் நாம் சொல்லிவருகின்றோம்.

உண்மையில் எமது இந்த விண்ணப்பம் நீண்டகாலம் பங்குகொள்பவர்கள்; அதிக இலக்கியச் சந்திப்புக்களை நடத்தியவர்கள்; அதிக சந்திப்புக்களில் கலந்து கொண்டவர்கள் என்கின்ற தார்மீக அடிப்படையிலான உணர்வினாலேயே முன்வைக்கப்படுகின்றது, இலக்கியச் சந்திப்பு எங்கள் உடமை, உரிமை என்ற வகையிற் கோரப்படவில்லை.

இலங்கையில் நடைபெறும் இன்றைய நிலைமைகளை எதிர்த்து இயங்குவதற்கு சிறு வெளிகள் இருக்கின்றன என்பதை அரசியல் அவதானிகளும் மற்றும் சிவில் சமூகச் செயற்பட்டார்களும் குறிப்பிடுகின்றனர்."காலி இலக்கிய விழா- 2012" காலியில்- இலங்கையில் இடம்பெற்ற நாட்களில் பிரகீத் எக்னாலிகொட(அரச படையினரால் கடத்திக் கொலைசெய்யபட்ட கலைஞன், காட்டூனிஸ்ட்) அவர்களின் மனைவி சந்தியா எக்னாலிகொட போன்றவர்கள் தமது எதிர்ப்பினைப் பதிவுசெய்ய முடிந்துள்ளது. ஆனால் இன்று இதே "காலி இலக்கிய விழா-2013" என்ற நிகழ்வு அடுத்த வருடம் வரை பின்போடப்பட்டுள்ளது. எதிர்த்து இயங்குவதற்கு உருவாகிவரும் சிறு வெளிகளை உரியமுறையில் சிவில் சமூகத்தினர் பயன்படுத்தவேண்டும் என்பதும் அதற்கு நாங்கள் அவர்களுடன் ஒன்றிணைந்து இயங்கவேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வாதமே எனினும், அந்த இடைவெளியை புலம்பெயர் நாடுகளில் இருந்துகொண்டு இலங்கை அரசை ஆதரித்த் நிலைப்பாட்டை எடுப்பவர்கள், ஆக்கிரமித்துவிடக் கூடாது. புகலிடத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆயிரம் செயற்பாடுகள் இன்னமும் நிலுவையில் தான் இருக்கின்றன. இங்கிருந்து இயங்குவது அங்கிருப்பவர்களுக்கும் மேலும் பலம் கொடுக்கும் என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். எனவே அங்கே கிடைக்கப்பெறும் சிறு அரசியற் குறுவெளியில் இயங்குவது அங்குள்ள உள்ளகக் குழுக்களுக்கானதே தவிர, வெளியில் இருந்து வலிந்து சென்று பயன்படுத்துவதற்காகவல்ல. அப்படிக் கதையளப்பது மிக மோசடியானது.

எமக்கு மத்தியில் தோன்றிய ஆயுதக்குழுக்கள், மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த காலத்தில் உலகெங்கும் வெகுஜன அமைப்புக்களைக் கைப்பற்றிவந்தமை நாம் பெற்ற உயிர்கொல்லி அனுபவங்களில் ஒன்று. பின்னர் புலிகள் உலக நாடுகளில் தடைசெய்யப்பட்டபோது அதற்கெதிராகத் தன்னிச்சையாகக் குரல் கொடுக்க சாதாரண வெகுஜனப் பொது அமைப்புக்கள் இருக்கவில்லை. அவற்றுக்கும் இலக்கியச் சந்திப்பினை அபகரித்த இன்றைய செயற்பட்டிற்கும் வேறுபாடும் அதிகம் இல்லை. மேலும் தலித் மேம்பட்டு முன்னணியினரும் மற்றும் இக்குழுவில் இடம்பெறும் பலரும் இலங்கையரசின் ஆதரவாளர்கள் என்பதும் ஒன்றும் இரகசியமான விடயமுமல்ல. அதன் பல அங்கத்தவர்களின் தொலைக்காட்சி, ரேடியோ நேர்காணல்கள் இதற்கு எடுத்துக்காட்டு.
இலக்கியச் சந்திப்பு அனைத்து அதிகாரங்களையும் போரினையும் எதிர்த்தே வந்திருகின்றது. ஆனால் காலத்திற்கு காலம் ஒரு சிலர் தங்களது அரசியல் நலன்களை முன்னிறுத்தி இலக்கியச் சந்திப்புக்கு வேறு முகங்களைக் காட்ட முயற்சித்து வந்திருக்கின்றனர்.

ஒரு குறித்த காலவரைக்கும் ஒரு நிரந்தர நிர்வாகமே இல்லாத, எந்த அரசியற் குழுவினதும் அணி வலுத்துவிடாது (அணிகள் சாராது), மனிதர்களை மனிதர்களாகவே ஏற்றுக்கொள்கின்ற, பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளபோது அது மோதும் களமாகவும் அதன் பின்னர் அது நட்பின் தளமாகவும் இது காலவரை செயற்பட்டு வந்த இந்த இலக்கியச் சந்திப்பு, இந்த 40 ஆவது இலக்கியச் சந்திப்பில், அந்தத் தடயங்களுக்கே இடம் வைக்காது முடிந்து போனது மிக அவலமானது. 40 ஆவது இலக்கியச் சந்திப்பு சுமூகமாக நடைபெற்றுவிடக்கூடாது என்ற பழிவாங்கும் போக்குக்கு ஏற்ப திட்டமிட்ட சூழ்ச்சிகள் பின்னணியினரால் மேற்கொள்ளப்பட்டதை இலக்கியச் சந்திப்பு நடந்த இரண்டு நாட்களிலும் மிக வெளிப்படையாக அவதானிக்க முடிந்தது. இந் நிலைமைகளை அவதானித்தவர்களுக்கு நடந்தவைகளும் நடத்தப்பட்டவைகளும் வெட்ட வெளிச்சமானவையே. இலங்கைக்கு இலக்கியச் சந்திப்பை எடுத்துச் செலும் சர்ச்சை கிளம்பிய நாளில் இருந்து இறுதி நிமிடங்கள் வரை இலண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டிருந்த திரு ராகவன் அவர்கள் நடந்து கொண்ட விதம் விகாரமானது; விசனத்துக்குரியது; இலக்கியச் சந்திப்பு தன்னளவிலேனும் உருவாக்கி வைத்திருக்கும் விழுமியங்களை அவை கேலிக்குள்ளாக்கியது. இந்தளவு ஜனநாயக விரோதமாக இதுவரை இலக்கியச் சந்திப்பில் யாருமே நடந்துகொண்டதில்லை என்று சொல்வது மிகையானதல்ல.

இவர்களின் இந்தப் பொறுப்பற்ற, அடாவாடித்தனமான நடத்தைகளினால், சுயாதீனமாக முன்வந்து ஒன்றை நடத்துவதற்குப் பின்னால் உள்ள தனி மனிதர்களின் கடும் உழைப்பும், பொருட்செலவும் மலினப்படுத்தப்பட்டதுடன், இன்னும் மோசமாக அவர்களைச் சர்வதேச அளவில் குற்றவாளிகளாக்கிய மோசடியான செயலும் நடாத்திக்காட்டப்பட்டது. உண்மையில் இன்று இலக்கியச் சந்திப்பின் மீதும், அதனோடு தொடர்புடையவர்கள்மீதும் மிக மலினமான வார்தைப்பிரயோகங்களை அள்ளிவீசிக் கொண்டிருக்கும் பானுபாரதி என்பவர் ஒரேயொரு இலக்கியச் சந்திப்ப்பில் மட்டுமே கலந்துகொண்டுள்ளார். அதுவும் நோர்வேயில் பேர்கன் என்ற இடத்தில் நடந்த சந்திப்பில் மட்டுமே. ஆனால் வெகு அனாசயமாக அவர் சுட்டும் வீம்புச் சொற்கள் மனிதர்களை ஆத்திரமூட்டுவன.

நடந்து முடிந்த 40ஆவது இலக்கியச் சந்திப்பில் அடுத்த இலக்கியச் சந்திப்பினை இலங்கையில் நடத்துவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் முழுக்க முழுக்க அநியாயமானது. எந்த ஜனநாயகக் கோட்பாட்டின் பெயராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நடுநிலையாளன் என்று தன்னைப் பிரகடனப்படுத்தும் குறித்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய தலைவரின் முதல் வசனமே 'இறுதிவெற்றி எமக்கே' என்று, தான் சார்ந்த அணியினரை பிரதிநிதித்துவம் செய்தார். ஆரம்பத்தில் இருந்தே இந்த 40ஆவது இலக்கியச் சந்திப்பினை அதிரடி நடவடிக்கைகளின் மூலம் குலைத்துவிட முயற்சிப்பதாகவே இருந்தது குறித்த அணியினரின் நடவடிக்கைகள். இது இலக்கியச் சந்திப்பின் சுமூகமான சுழலை அச்சுறுத்துவதாகவும், மிகுந்த அசௌகரியங்களைக் கலந்து கொண்டோருக்கு ஏற்படுத்துவதுமாகவே அமைந்திருந்திருந்தன. இறுதியில் எல்லோருக்கும் தெட்டத் தெளிவாகத் தெரிந்த இலக்கியச் சந்திப்பின் நிர்வாக பலவீனங்களைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, வெற்றி தோல்வி மனப்போக்கிலேயே யாவும் நடந்தேறியது. இறுதி நிகழ்வுக்கு திடீரென மண்டபம் நிறைந்த மக்கள் வந்துசேர்ந்தது தற்செயலானது என்று கொள்வதற்கில்லை. இறுக்கமான நிர்வாக சபையினைக் கொண்டிருந்த பொது அமைப்புக்கள், கோவில்கள், தமிழ் மொழிப் பாடசாலைகள் போன்றவற்றை கையகப்படுத்தும் போது எவ்வாறு சர்வதேசமெங்கும் புலிகள் செயற்பட்டார்களோ அச்சொட்டாக அப்படியே அமைந்திருதது இந்த நகைப்புக்கிடமான வாக்கெடுப்பு நாடகம்.

இலக்கியச் சந்திப்பில் உற்சாகமாக இயங்கியவர்கள் பலர் இன்று இறந்து விட்டார்கள், சபாலிங்கம் சுடப்பட்டார். புலிகள் இலக்கியச் சந்திப்பின் மீது மிகுந்த வன்மத்துடன் இருந்தார்கள். (கிளிநொச்சி நந்த வனத்தில் எனக்கும் என் மனைவிக்கும் அப்படியொரு அனுபவம் ஏற்பட்டது) கலைஞர்கள், எழுத்தாளர்கள் பலர் தங்கள் அரசியற் சார்பு நிலைகளினால் இலக்கியச் சந்திப்பினைப் புறக்கணித்தார்கள். கவிஞர்கள் அ. யேசுராசா, சு.வில்வரத்தினம் போன்றோர் அழைக்கப்பட்டபோது இலக்கியச் சந்திப்பு இப்போது புலிகளுடன் அய்க்கியமாகிவிட்டது என்று ஒரு சாராரும், இது மார்க்ஸிய விரோதக் கும்பல் என்று இன்னொரு சாராரும். ஒட்டுக்குழுக்கள், துரோகிகள் துணைப்படைகளின் சங்கமம் என்று வேறொரு சாராரும் காலத்திற்கு காலம் வெளியில் இருந்தபடி இலக்கியச் சந்திப்புக்குப் பெயர்கள் சூட்டினர்.
இலக்கியச் சந்திப்பின் வரலாறு நெடுக ஆர்வத்தோடு கலந்து கொள்ள வந்தவர்கள் பலர் அவர்கள் மனம் நொந்து, சோர்வடைந்து ஒதுங்கிச் செல்லும் வரை விரட்டியடிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைகளை இலக்கியச் சந்திப்பில் அக்கறை கொண்டவர்கள் தொடர்ந்தும் எதிர்த்து வந்திருக்கின்றோம். சமூகச் சிக்கல்கள், அது எவ்வளவு பெரியதாயினும் சிறியதாயினும் அதற்கு நாம் மதிப்பளித்துச் செயற்பட்டோம். எந்த மனிதர்களையும் தள்ளிவைத்து, ஒரே கருத்துடையவர்கள் மட்டுமே சந்தித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் முதுகுசொறியும் ஒரு கூட்டத்தின் மட்டதிற்கு நாம் இந்த இலக்கியச் சந்திப்பினைக் கொண்டுவந்துவிடக்கூடாது என்பதுவும் எமது அக்கறைகளில் முதன்மையானது.

இலக்கியச் சந்திப்பு இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவே என்றும் செயற்பட்டுள்ளது. இந்திய இராணுவம் இலங்கையில் நிலை கொண்டபோது அதனை எதிர்த்தும், இலங்கையில் முஸ்ஸிம் மக்கள் புலிகளின் ஆட்சிப் பிரதேசத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டபோது அதனை எதிர்த்தும் ஆயுதக் குழுக்களினால் அபகரிக்கப்பட்ட மனித ஜனநாயக விழுமியங்களை மீட்டெடுக்கவும் சிறிய அளவிலேனும் இலக்கியச் சந்திப்பு முயற்சித்திருகின்றது. நிறவாத எதிர்ப்பு, தலித்திலக்கியம், மலையக இலக்கியம், முஸ்லிம்கள், பெண்ணியம் போன்றவை இந்த இருபத்தைந்து வருடகால இலக்கியச் சந்திப்பின் நிகழ்ச்சி நிரல்களில் அதிகம் இடம்பிடித்துக் கொண்டவை. உண்மையில் இன்றைய எங்கள் பொது அடையாளம் வெறும் இனம் சார்ந்ததல்ல மாறாக நாம் அகதிகள் என்பதும் எமது அடையாளங்களில் ஒன்றே. மற்றும் இலக்கியச் சந்திப்பு என்பது இலங்கைத் தமிழ் இலக்கியச் சந்திப்பு அல்ல. அவ்வாறு அதனைக் குறுக்கும் எண்ணங்களுக்கு இடமளிக்காமல் இலக்கியச் சந்திப்பினை புகலிட சிவில் சமூகத்தின் பரந்து பட்ட பிற்போக்குத்தனங்களுக்கு எதிரான, ஆரோக்கியமான குரலாக வளர்த்துச் செல்லவேண்டும் என்பதே எமது உறுதியான நம்பிக்கையாகும்.
Facebook entry-I
Facebook entry-II

Tuesday, December 20, 2011

வரலாற்றின் விளைபொருள்: ”கசகறணம்” - விமல் குழந்தைவேலின் நாவல்ந.சுசீந்திரன்
"...வழி வழிவரும் ஏனைய இலக்கிய வடிவங்களைப் போலவே, நாவலும் வரலாற்றின் விளைபொருளாகும்…”

விமல் குழந்தைவேல் அவர்களின் மூன்றாவது நாவல் கசகறணம், 2011 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளியாகியிருக்கின்றது. நூலின் முன்னுரையின் குறிப்புக்களில் இருந்து இந் நாவல் இலங்கையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட 2002 இற்குப் பின்னர் 2006 வரை நான்கு வருடங்கள் நிலவிய தற்காலிக அமைதியின் போது இலங்கையில் சுனாமிப் பேரலையின் அழிவுக் காலமான 2004 இன் இறுதி தொடக்கம் போர் முற்றாக முடிவுக்கு வந்த 2009 க்கும் இடைப்பட்ட 5 வருட காலத்தில் எழுதப்பட்டிருக்கின்றது என்று கொள்ளலாம். காலம், ஆன்மா, நாடு, இனங்கள், உறவு போன்றவற்றை சிதைத்துச் சிதிலங்களாக்கி விட்டெறிந்த ஒரு களப்புலத்தில், அதிகாரம், வன்முறை, ஆயுதக் கலாசாரம், போரின் ஆரவாரம், சமாதானம், அனர்த்தனங்கள், போன்ற பெருங்கதைச் சமாச்சாரங்கள் மனிதர்களைப் பிடித்துக்கொள்ளும்போது, தெருத்தூசிகளாக மதிப்பிழந்து மறக்கடிக்கப்பட்ட மிகச் சாதாரண மனிதர்களின் வாழ்வும் இருப்பும் மனோநிலையும் எப்படிச் சின்னாபின்னமாக்கப்பட்டது என்பதை அவர்களது அன்றன்றான சோலிகள், யோசனைகள், உணர்வுகள், பேச்சுக்கள், உறவாடல்கள் மூலம் ஒரு நல்ல நாவலாக உருமாற்றியிருக்கின்றர் விமல் குழந்தைவேல் அவர்கள். வரலாற்றின் விளைபொருளாக, காலத்தின் தவிர்க்க முடியாத அசலான அர்த்தம் மிக்க பதிவாகவும் இந் நவீனம் இருக்கின்றது.

இந் நாவலின் கதையமைப்பு ஒரு திரைப்பட உத்தியிலானது. முதற்பாகத்தில் கணங்களும் பொழுதுகளும் அதனதன் பாதைகளில் உடன்பாடுகளோடும், முரண்பாடுகளோடும், அல்லது எதுவுமற்ற பாடுகளோடும் நடக்கின்றன. இரண்டாவது பாகம் ஒரு திரைப்படத்தில் இடைவேளைக்குப் பின்னர் போல, திருப்பங்களும் நிகழ்வுகளில் பாரிய மாற்றங்களும் ஏற்படுகின்றன. அக்கரைப்பற்றுச் சந்தை, அதிலிருந்து 5 கட்டை தொலைவிலுள்ள மொட்டையாபுரம், பத்தூடு, புதுக்குடியிருப்பு, புட்டம்பை போன்ற சில கிராமங்களின் எல்லைகளுக்குள்ளே இதில் வரும் சனங்களின் போக்கும் வாழ்வும் முடிந்துவிடுன்றன.அவர்கள் சிந்திக்கின்ற, பேசகின்ற பிராந்திய மொழியும், மொழிப்பிரயோகம், நிலம், காலம், வாழ்வு போன்றவற்றுடன் பின்னிப்பிணைந்த அதன் உள்ளடக்கமும் இந்தக் கதைச் சனங்களை ஒரு ஓவியனுக்கு முன்னமரும் உயிர்ப்பொருளாக வார்த்துக்காட்டியிருகின்றார் நாவலாசிரியர்.
நாவலில் அடிக்கடி வந்து போகும் முக்கிய சனங்களின் மனோவிம்பங்கள் வாசகர்களின் மனங்களில் அழியாத நிரந்தரமான, அல்லது குறைந்தது ஒரு நீண்டகாலம் வாழும் தன்மைத்தவையாக இருக்கின்றன. இதில் வரும் அவர்களது கவலைகள் உலகின் சிறந்த கதாசிரியர்களின் பாத்திரங்களோடு ஒப்பிடுமளவுக்கு நன்றாகவே படைக்கப்படுள்ளனர். ஹெமிங்வேயின் கிழவனும் பாலமும் என்ற ஒரு சிறுகதையில் ஸ்பானியப் போரின்போது இடப்பெயர்வுக்குள் அகப்பட்டுக்கொள்ளும் கிழவனின் கவலைகள் யாவும் தான் வளர்த்த ஆடு, பூனை பற்றியதாகவே இருந்தது போலவே இங்கேயும் மனிதர்கள் தத்தமது பிணைப்புக்கள் பற்றிய அக்கறைகளை வெளிப்படுத்துகின்றனர்.
இனமுரண்பாட்டின் குரூரவிளைவு 1983இல் நடந்த இனக்கலவரம். அதன் பின்னர் திடீர் வளச்சியடந்த உணர்ச்சி மேலோங்கிய தமிழர் தேசிய வாதம் உள்முரண்பாடுகளையும் கூர்மையடைய வைத்தது. கிழக்கில் ஒருதாய் பிள்ளைகளாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமான சமூகவாழ்வின் அதிக தளங்களில் பின்னிப்பிணைந்த உறவு 1983க்குப் பின்னர் சந்தேகங்களாகவும், குரோதங்கள், கடத்தல்கள் , கொலைகளாகவும் விரிசலடைகின்றது. இந்த விரிசல்களுக்குள் அகப்பட்டு தம்மியல்பிழந்து அரசியல் பேசும் இளைஞர்கள், நன்வழமையையும், நல்லுறவையும் கிழித்து வெளிப்படுத்தப்படும் இன, மத பேதங்களை, ஏன் என்று புரிந்துகொள்ளமுடியாது, அவற்றுக்குத் தத்தம் இயலுமைக்கு ஏற்ப எதிர்ப்புணர்வுகாட்டி நிற்கும் முதியவர்கள், இந்தப் பாழாய்ப்போன விரிசலுக்குள் அகப்பட்டுப் பாரிய விலைகொடுத்துப் போகும் பெண்கள், அன்பும் அறமும் கருணையும் தொலைத்துவிட்டு கொலைமுகங்காட்டும் ஒரு காலப் பிழையாக அமைந்துவிட்டகலாசாரம் போன்றவையே இந் நாவலின் கதாபாதிரங்கள். இலங்கையின் கிழக்கு மண்டலத்தின்தமிழ் , முஸ்லிம் சமூகங்களின் பின்னிப் பிணைந்த சமூகவாழ்வின் இழைகளைக் குலைத்து நாசஞ்செய்யும் போது இரண்டு சமூகங்களும் அதற்குக் கொடுக்கின்ற காவு மீட்கப்படமுடியாதது. உறவின் வலுவை, கலப்பின் மகிமையை, பிரித்தலின் குரூரத்தை, வாழ்வின் அர்த்தத்தினை எடுத்து சொல்லும் பேச்சுமொழிப் பிரதி ஒன்று இலக்கிய அழகியலாக ஆகிவிட்டிருக்கின்றது.
சந்தை, குடில், மலைப்பரப்பு, சுரப் பந்தல், மூன்று இடங்களில் வைக்கப்பப்டிருக்கும் திரைப்பட விளம்பரத் தட்டிகள், வம்மி மரங்கள், சந்தை நாய்கள் என்ற சேதனங்கள், அசேதனங்கள் எல்லாமே வாசகர்களின் மனதில் ஏற்படும் காட்சிகளில் இன்றியமையாதபடி சேர்ந்து இயங்குகின்றன. மனிதர்களின் நிர்வாண மித்திரமான நேய இதயங்களே உரையாடலாக வெளிப்படுகின்றன. அன்பு நிரம்பி வழியும் சுரக்குடுவைகளாக அவர்களது அங்க அசைவும், பேச்சும் மூச்சும் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். `நினைவுகள் அழியும்போது` என்ற சிவானந்தனின் நாவலில் மூன்று தலைமுறைக் காலங்களும் மனிதர்களும் காட்டப்பட்டிருகின்றனர். அந்த . `நினைவுகள் அழியும்போது` என்ற நாவலில் கதா பாத்திரங்கள் பேசுகின்ற மொழியும் அதன் உள்ளடக்கமும் அறிவார்ந்த தளத்தில் இயங்குகின்றன. அதேவேளை, இங்கே கசகரணம் நாவலில் பாத்திரங்கள் சாதாரண மக்களின் அன்றாட ‚கொப்பனோழி‘ மொழியையே பேசுகின்றனர். அவர்களது குணங்கள், வெளிப்பாடுகள், உடல்மொழி யாவையும் பாசாங்கற்றவை, அறிவின் மெழுகுப்படையற்றவை. இந் நாவலில் வருகின்ற குறட்டைக்காக்காவின் அன்பின் இங்கித்தை அக்காலக் கிராம மனிதர்களிடம் கண்டிருப்போம். இங்கே நாம் பார்க்கின்றஎமக்கு மிகவும் நெருக்கமானவர்கள். நாம் அவர்களைச் சின்னஞ்சிறிய வியாபாரிகளாக சந்தை மூலைகளிலும், பஸ் நிலையங்களிலும், கோவில்களின் வெளிவீதிகளிலும் கூறு பிரித்து வைத்திருக்கும், மூலிகைகள், புளியங்காய், இலந்தைப்பழம், பிஞ்சுமிளகாய் போன்றவற்றின் முன்னிருக்கக்கண்டிருப்போம்.
இந்தக் கதை நீங்கள் விரும்பினால் மைலிப் பெத்தாவின் சோகக் கதையாகவோ அல்லது வீரம் விளையும் மனங்கள் என்ற பெண்விடுதலை நாவலாகவோகூடக் கொள்ளலாம். இன்னும் இங்கே கம்பீரம் நிறைந்த பெண்ணாக செதுக்கப்பட்டிருப்பவள் வெள்ளும்மா. இப் புதினத்தில் வருகின்ற வெள்ளும்மா போன்ற நிஜ மனிதர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருந்துகொண்டுதானிருக்கின்றனர். இவர்களிடம் காணப்படும் பண்புகள் வாழ்வின் அனுபவங்களாலும் ஊறுபடுத்தப்படாத மனித நேயத்தாலும் உருவானவை. அவர்களுக்குத் தோன்றுபவை இரத்தமும் சதையும் உணர்வும் கொண்ட மனிதர்களே தவிர அவர்களின் புறவழிப் பேதங்கள் அல்ல. அப்படித்தான் இக் கதையில் வரும் பெண்கள்மைலிப் பெத்தா, வெள்ளும்மா, குலத்தழகி, மலர், பொன்னம்மை போன்ற இருக்கின்றனர். குலத்தழகி என்ற பெண் பாத்திரம் ஒரு சினிமாப் பைத்தியமாகினும், சினிமாவில் வரும் பெண்பாத்திரங்களின் பாடுகளை தன் சாயலில் உள்வாங்கி உறக்கமற்று இருப்பதுவும் தன் கதைபோல் வெளிப்படுத்துவதும் கிராமத்தின், பெண்ணின் மெல்லிதயங்களைச் சுட்டி நிற்கின்றது
கிழக்கு மாகாணம் நாடார் வழக்காறுகளின் தோப்புக்காடு. நெய்தல் மற்றும் மருதத் திணை வாழ்வு இந்த வழக்காறுகளின் ஊற்று. அத்தோடு முஸ்லிம் மக்களுக்குள் விரவிக்கிடக்கும் கவிப் பண்பாட்டை கவிசொல்லுதல், ஏட்டிக்குப் போட்டியான பாட்டுக் கட்டுதல், நொடிபோடுதல் போன்றவை எவ்வாறு அவர்களின் வாழ்வுடனும் இரண்டறக் கலந்துள்ளதென்பதைப் பல ஆய்வாளர்கள் குறித்துள்ளனர். கசகறணம் நாவலில் மீரிசாக்காக்காவும் வெள்ளும்மாவும் சொல்லும் கவிகள் அனேகமானவை அகத்திணைக் கவிதைகள் என்று பிரிக்கப்படும் உள்ளுணர்வு,காதல் மற்றும் மென்ணுணர்வு கொண்டவை. இவை இந் நாவலில் கிராமியப் பண்பாட்டின் அழகுப்பரிமாணத்தைச் ஆர்ப்பாட்டமில்லாமல், வார்த்தை விபரிப்பு இல்லாமல் சொல்லிவிடப் பயன்பட்டிருக்கின்றன. ஆனாலும் „கிழக்கிலங்கை முஸ்லிம்கள் மத்தியில் வழங்கும் நாட்டார் இலக்கியத்தில் காதல் பாடல்கள் என்று வழங்கப்படுபவை உண்மை வாழ்க்கையில் காதலர்களால் பாடப்படுபவை அல்ல என்பதும் அவை வேளாண்மைத் தொழிலுடன் தொடர்புடையவை என்பதும், ஆண்களால் பாவனை முறையில் பாடப்படுபவை என்பதும், ஆண்களாலேயே படைக்கப்பட்ட புனைவியற் பாங்கான இலக்கியங்கள் என்பதும் தெளிவாகின்றது“ என்று இக் கவிகள் பற்றி எம். ஏ. நுஃமான் அவர்கள் சொல்வதை மனதில் கொள்ளவேண்டும். மேலும் முற்காலத்தில் குஜிலிப் பாடல்களில் சொல்லப்படும் அன்றன்றைய பரபரப்புச் செய்திகள் போலவும் நாவலில் பல இடங்களில் வெள்ளும்மா பாட்டுக்கட்டுகின்றாள்.


ஆறுமணி ஆகுதுகா
ஆமிக்காரன் வந்துட்டாங்கா
அண்ணாந்து பாருகா
அடமழையும் வருகுதுகா
கச்சான் சாக்கத் தூக்கிக்
கக்கத்துல வைடி மைலி
மிச்ச மீதீயெல்லாம்
நாளைக்குக் கதைப்போமடி


என்றும்

பட்டிமோடு தொட்டு
பனங்காட்டுப் பாலம்வரை
எட்டடிக்கு ஒரு ஆமி
ஒட்டியொட்டி நிண்டாண்டி
கிட்டவந்து அவன்
என்னுடம்பைத் தொட்டிருந்தா
ஒட்ட நறுக்கியிருப்பன்
அவன் உள்ளுறுப்பு அத்தினையும்.இக் கதா பாத்திரங்கள் காணும் கெட்ட சகுனங்கள், சமிச்சைகள், மற்றும் அவர்கள் கொண்டிருக்கும் பக்தி, நம்பிக்கைகள், பயங்கள் போன்றவை எளிதாக நிராகரித்துவிட்டுப் போக முடியாதபடி நிகழ்வுகளும் அமைந்துவிடுகின்றன. ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் ஏற்படுகின்ற அவரவர் தலைவிதிகளும் கூட தெரிவுகளற்று இயல்பாகவே ஏற்படுகின்றன. குண்டுகள் எவர் உடலையும் துளைத்துவிடலாம், மரணங்கள் யார் தலைமீதும் கவியலாம், தீகருக்கிய நாதியற்ற பிணங்களாய் இவர்கள் வீசப்பட்டுக் கிடக்கலாம். இப்படித்தானே இருந்தது எமது மக்களின் அண்மைய வாழ்வும் அவர் கண்ட காலங்களும்.
இந் நாவல் நிகழ்வுகளால் கதைநகர்த்திச் சொல்லப்படும் நாவல் என்று சொல்வதைவிட பாத்திரங்களின் சிந்தனைகளாலும் அதனையொட்டி அவர்களின் காரியங்களாலும் உருவாக்கப்படுகின்றது என்றும் கூறலாம். இந் நாவலில் கௌரவமாக உருவக்கப்பட்டுள்ள பாத்திரம் கனகவேல் என்ற திருநங்கை ஒருவரின் பாத்திரம். சு. சமுத்திரம் அவர்களின் வாடாமல்லி என்ற புதினம், மற்றும் அண்மையில் வெளியாகிய லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களின் நான் வித்தியா என்ற தன்வரலாறு போன்ற நூல்கள் தமிழ் மொழிச் சமூகங்களில் திருநங்கையர்களின் அடையாளதிற்கான போராட்டதின் கடினங்களையும் நியாயங்களையும் சொல்லிச்செல்கின்றன. இந் நாவலில் கனகவேல் சமூக ஒடுக்குமுறைகளுக்குத் துணிசலாக முகம் கொடுப்பதும் எதிர்த்துநிற்பதும் உற்சாகமளிக்கின்றது. ஏனெனில் சமூக முரண்பாடுகள், இன,மத வேறுபாடுகள், பெண்ணொடுக்குமுறை, ஜனநாயகமின்மை, இராணுவமயமாக்கம், பேணப்படவேண்டிய விழுமியங்கள், தொன்மங்கள்,மரபுகள் போன்றவற்றின் அழிவு, போன்றவை காணப்படும் நம் சமூகங்களில் இப் பாத்திரங்களின் வரவும், வகிபாகமும் குறிப்பிட்டுச் சொல்லபடவேண்டியவை.

"தமிழைத் தம் உயிராக மதிப்பவர்கள் கிழக்கிலங்கை முஸ்லிம்கள். அவர்களது பேச்சு மொழியே கவிதைபோல் இனிக்கும். „அந்த மறுகால் போய்க் கிறுகுகா என்று சாதாரணன் ஒருவன் பேசும் தமிழில் உள்ள மறுகு, கிறுகு என்பன சங்கத் தமிழடா சங்கத் தமிழ்!“என்று பல தசாப்தங்களுக்கு முன் தமிழ் கற்பித்த ஆசிரியர் கூறிப் பெருமைப்பட்டது எனக்கு இன்றும் நினைவில் இருக்கின்றது…“ என்று சொல்வார் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் அவர்கள்*(*றமீஸ் அப்துல்லாஹ், கிழக்கிலங்கை கிராமியம்,கொழும்பு 2001).

வண்ண நிலவனின் „கடல்புரத்தில்“ என்ற நல்ல நாவல் ஒன்றில் மணப்பாடு கிராமத்தின் மீனவ மக்கள் பேசுகின்ற மொழியே அந் நாவலின் பலம். கசகரணம் நாவலிலும் பாத்திரங்கள், தொழில், நிகழ்வுகள், பிரதேசம், காலம் என்பனவற்றோரு மிகுந்த ஒன்றிப்படைகின்றது பேசும் மொழியும், அதன் பிரயோகத்தில் வந்தடையும் உவமானங்கள், பழமொழிகள், கவிகள் என்பனவும். இவ்வாறு ஏற்படுகின்ற பொருத்தம் வலிந்து புகுத்தப்படாததாய், மிக இயல்பாக அமைந்து விடுதல் இந் நாவலின் சிறப்புக்கான இன்னுமொரு காரணி. கசகறணம் நாவலில் குறியீடுகள் அதிகம் இல்லை. ஏனெனில் இது கடந்துபோன அண்மைக்காலத்தின் ஒரு தசாப்த காலத்து சமூக, அரசியல் வடிவமாற்றங்களைப் பேசுகின்ற வரலாற்றின் சுவடுகளையும் தடயங்களையும் தன்னகத்தே பெருமளவு கொண்டியங்குகின்றது. கிழக்கிலங்கையின் வாழ்வியலை பல படைப்பாளிகள் அருள் சுப்பிரமணியம், வ.அ.இராசரத்தினம், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ஜோண் ராஜன், ஜூனைதா செரீப், சண்முகம் சிவலிங்கம், வை.அஹமது, திக்குவல்லை கமால், எஸ்.முத்துமீரான், அ.ஸ.அம்துல் ஸமது, மருதூர்க் கொத்தன், யுவன் கபூர், அண்ணல், புரட்சிக் கமால், ஓட்டமாவடி அறபாத் போன்றவர்கள் எழுத்துக்களில் காண்கின்ற நாம் பட்டணத்தின் தோரணையும் கிராமத்தின் உள்ளுடலாகவும் இருக்கின்ற அக்கரைப்பற்றையும் அதன் சுற்றுப் பிரதேசங்களையுமே கதைப்புலங்களாக கொண்ட இந்த நாவலில் அண்மைய வரலாறு, நிலவியல், இனமுரண்பாட்டின் குரூரமுகம், நேசங்கொண்ட மனிதர்களில் பட்டென்று பிறழும் மனங்கள் போன்றவற்றை தரிசிக்கின்றோம். பல்சமூகங்கள் வாழும் கீழைத்தேயங்களின் எந்த ஊருக்கும் இக் கதையைப் பொருத்திப் பார்க்கலாம். அந்நிய உணர்வற்று எமது பாட்டிகள், எமது மனிதர்கள் தான் கதைமுழுவதும் நடமாடுகின்றனர். இன்றைய ஈழத்தின் நாவல்களில் மிக முக்கிய நாவலாக இதனைக் காண்கிறோம்.

சபாலிங்கம்
[1994 ஆம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி ச. சபாலிங்கம் அவர்கள் பிரான்ஸ் தேசத்தின் தலைநகர் பாரிசில் அவரது இல்லத்தில் வைத்து புலிகளின் கொலைப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 12.05.1994 இல் சபாலிங்கத்தின் உடல் எரியூட்டப்பட்டது. அன்றைய தினத்தில் இறுதி அஞ்சலிக்காக மயானதில் சுமார் 500க்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். அங்கு நடந்த மயான இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் ந.சுசீந்திரன் ஆற்றிய உரை.]

காலத்தின் சாட்சிகளை அழித்துக் கொண்டே இருங்கள். நீங்கள் எழுதப்போகும் எங்கள் வரலாற்றை வாசிக்க இறுதியில் யார் இருக்கப் போகின்றார்கள்? தொடர்ந்தும் துப்பாக்கிகளின் கீழ்ப்படிவின் முன்னினையில் வரலாற்றைப் படிக்கவும் பாடமாக்கவும் சாம்பல் மேடுகளும் எலும்புத்தோட்டங்களும்…! இன்னும் போதாதா உங்களுக்கு?

தின்ற மண்ணில் அவன் செத்து, அவன் அழைந்த புழுதியில் அவனது குருதியோடி, அவன் அலம்பியதண்ணீரில் அவன் அஸ்தி கரைந்து போவதை தடுத்துவிட மட்டும் உங்களால் இன்று முடிந்திருக்கின்றது. இவன் பதித்த தடயங்களை உங்கள் துப்பாக்கிகள், துர்ப் பாக்கிகள் ஒன்றும் செய்துவிடமுடியாது. மாற்றுக் கருத்தின் சிறு பொறிகளைக்கூட கண்டு குலை நடுக்கங் கொள்ளும் கோழை எப்போதுமே கொடூரமானவனாகத்தான் இருப்பான்.

சரித்திரங்ளை அழித்துவிடலாம் என்று கனவு காணாதீர்கள்! நியாயங் கேட்கவும் அழிப்பின் தடயங்களைத் தேடவும் உங்களால் ஒடுக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும் ஒரு சிறுபான்மை இருந்துகொண்டே இருக்கும். உண்மை என்பது வெட்ட வெட்டத் தளைவது. நீங்கள் சுடச் சுடத் துலங்குவது. எங்களை அழிக்கும் வரை, எங்கள் எண்ணங்களிலும் எழுத்துக்களிலும் இவர்கள் வருவார்கள். ஒரு றிடாச் டி சொய்சா வருவான். ராஜனி திராணகம வருவாள்; சபாலிங்கம் வருவான். இன்னும் இன்னும் முகந்தெரியாத சிறுவர்களும் முகவரி இல்லாத மனிதருங்கூட இன்னொன்று சொல்ல வருவார்கள். உங்களைத் தொந்தரவு செய்ய வருவார்கள். உங்களாற் கொல்லப்பட வருவார்கள், வருவார்கள், வருவார்கள்!

மே மாதம் பத்தாம் நாளில் தான் ஜெர்மனியின் நாசிகள் தமக்கு விரும்பாத அறிவாளிகளின் நூல்களை எரித்தார்கள், தம் பெருங் கருத்துக்கு எதிரான புத்தகங்களை அள்ளித் தீயிலிட்டார்கள். அறிவும் மனிதரும் அழிந்தா போயினர்? இல்லை! இப்படித்தான் இவனைக் கொன்றதால் இன்னொரு பிரதியீடு இல்லாமலா போய்விடும்? சிலவேளை இல்லாமலே போய்விடவுங் கூடும். ஆனால் இந்தப் புகலிட வாழ்வின் அர்த்தமுள்ள காலத்திற்குள் நீ கரைந்திருக்கின்றாய் சபாலிங்கம்! அதற்கொரு பிரதியீடும் தேவையில்லை. புத்தகங்கள் சாட்சி சொல்லும்! புதுக்காலமொன்று நும் இறுதி சொல்லும்.

உங்கள் பயத்தினைக் கண்டு நாம் வலிமை பெறுகின்றோம். அச்சுறுத்துவதற்கும் உயிர் கொல்லும் கோழைகளே – மூளை முழுவதும் வெடிமருந்து அடைத்து வைத்திருக்கும் முட்டாள்களேஇன்று இவன், நாளை நான், அதற்கடுத்து இன்னொருவன் என்று கொன்று விடுவதால்நீங்கள் அதிகமாக ஒன்றும் பெற்றுவிடப் போவதில்லை. உணருங்கள்! உங்கள் பயத்தில் நாம் வலிமை பெறுவோம். மண்ணை , மனிதரை, விடுதலையை, நேசிக்கத் தெரிந்தவர்களிடம் பொறாமை கொள்ளும் உங்கள் போக்கை உலகம் என்றோ கண்டு, உங்கள் இறுதியை ஏற்கனவே எழுதிவைத்து விட்டது! எண்ணப்பட்டுக்கொண்டிருக்கும் நாட்கள் சபாலிங்கம் போன்ற தனிமனிதர்களினதல்ல. உங்கள் துப்பாக்கிக் கலாசாரத்தினதும், அதிகார ஆணவத்தினதும்நாட்களுந்தான்.

என் குழந்தையும் இவன் குழந்தையும் துள்ளி விளையாட ஒரு முற்றம் தேவை.பாலகரைப் போருக்கனுப்பிய வீரமா பேசுகிறாய் என்னருமைத் தமிழே? எவனோ உன்னை அடக்குவதற்காய் பாணந் தின்ற நெஞ்சு கண்டு பரவசமடைந்த தாயே, என் குழந்தையும் இவன் குழந்தையும் துள்ளிவிளையாட ஒரு முற்றந் தேவை; துவக்குகளுடன் ஒருவரை ஒருவர் சுட்டு மடிந்து மானுடத்தை மாய்ப்பதற்கல்ல, மாறாக இளமையின் யவ்வனங்களை இவர்கள் பெறவேண்டும். இன்று கோமதியின் வாழ்வை அழித்தீர்கள்; குழந்தை சேயோனின், அந்த இளங்தளிரின் யவ்வனந்தை அழித்தீர்கள். இவர்கள் மட்டுமா இன்னும் எத்தனை பிஞ்சுகளின்….!

இந்தத் தளிர்களின், இந்தத் தாய்களின், இந்த மனைவியரின் மௌனங்கள் பேசும் நாளொன்று தோன்றும். ஐரோப்பாவில் வளர்ந்து வரும் நிறவெறியா இவனைக் கொன்றது? புதிய நாசிகளா இவனைக் கொன்றார்கள்? பெரும்பான்மைத் திமிர்வெறியில் தமிழரை அழித்து வரும்இலங்கை அரசா இவனைக் கொன்றார்கள்?

இல்லை! இல்லை! சபாலிங்கம் ஒருகால் அடைக்கலம் கொடுத்த புலிகளே இவனைக் கொன்றார்கள். என்னே அவலம்! இந்த எல்லா அவலத்தின் காயங்களும்நிரந்தரமாக ஆறிவிடவேண்டும்! ஆறிவிடவேண்டும்!

Sunday, December 18, 2011

ஊடக அறிக்கை

உடனடியாக வெளியிடப்படலாம்!!
புலம்பெயர் இலங்கையர் சர்வதேச வலைப்பின்னல்


ஊடக அறிக்கை


மனித வரலாறு முழுவதும் பல்வேறு அர்ப்பணிப்புகள் மற்றும் செயற்பாடுகள் ஊடாக இன்னுயிர்களைத் தியாகம் செய்து, மனித இனத்தின் உரிமைகளையும் ஞாபக மூட்டி, மேலும் வென்றெடுக்க வேண்டிய உரிமைகள் சார்பில், புதிய உயிர்ப்புடன் செயற்பட, உலக மக்கள் மனித உரிமைகள் தினத்தை நினைவு கூருகின்றனர்.தமது உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டிய நிலைமைக்கு இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை நினைவு கூர்வதற்கும், அதே சமயம் மனித சுதந்திரத்தையும் உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக ஒரு பொதுக் கூட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்துவதற்கு, யாழ்ப்பாணத்திற்குச் சென்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள், பதாகைகள், சுலோக அட்டைகள் என்பவற்றைக் கிழித்தெறிந்தும் உடைத்தெறிந்தும் பறிமுதல் செய்தும், பாதுகாப்புப் படையினரும் பொலிசாரும் பெரும் அட்டகாசங்களை விளைவித்தனர். அதே சமயம, ஆர்ப்பாட்டத்தைத் தொடரவிடாது தடைசெய்தும் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல இம்சைகளை ஏற்படுத்தியமை குறித்தும் புலம்பெயர் இலங்கையர் சர்வதேச வலைப்பின்னலைச் சார்ந்த நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.அதே சமயம் இலங்கை அரசு தொடர்ச்சியாக மனித உரிமைகளை மீறுவது குறித்தும் , மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு இடையூறு விளைவிப்பது குறித்தும் ,எமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம்.

கடந்த காலத்தில் பல்வேறு வகையில் ஆட்களை காணாமற் போகச் செய்வது இலங்கை அரசியலின் ஓர் அங்கமாகியுள்ளது. இந்த அடக்குமுறையின் மற்றுமோர் அம்சமாக மக்கட் போராட்ட இயக்கத்தின் ஊடகக் கலந்துரையாடலை நடத்துவதற்குத் தேவையான ஒழுங்குகளை மேற்கொண்ட மேற்படி இயக்கத்தின் லலித்குமார் வீரராஜ் மற்றும் யாழ்ப்பாணத்தின் ஆவரங்கால் பிரதேசத்தில் வசிக்கும் குகன் முருகானந்தன் ஆகியோரை காணமற் போகச் செய்தமை குறித்தும் புலம் பெயர் இலங்கையர் சர்வதேச வலைப்பின்னல் வன்மையாகக் கண்டிப்பதோடு அவர்களை கண்டுபிடிப்பதற்கான புலனாய்வுப் பணிகளை மேற்கொண்டு உடனடியாகத் தேடித்தருமாறும் நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.


இலங்கை வாழ் எந்தவொரு பிரஜையும் தமது அரசியல் கருத்தைக் கொண்டிருக்கவும் , அதனை ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்தவும் , அக்கருத்திற்காகச் செயற்படவும் , சம உரிமை உண்டு. இச் செயற்பாடுகளை நசுக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் கொடூரமான அடக்கு முறைகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.மனித உரிமைகளை நினைவு கூரும் இச் சந்தர்ப்பத்தில் மனித உரிமைகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்களையும் அடக்குமுறைகளையும் இட்டு நாம் வெகு உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றோம்.

ரஞ்சித் ஹேனாயக்க ஆராச்சி, நடராசா சுசீந்திரன்
புலம்பெயர் இலங்கையர் சர்வதேச வலைப்பின்னலின் சார்பில்

*****************************************************


[N.B.: the Press release in Singala language may be uploaded as another note]

Tuesday, December 06, 2011

மாநிலங்களின் கூட்டுக் குடியரசு ஜெர்மனியின் தற்போதைய ஜனாதிபதி கிறிஸ்ரியான் வுல்வ் அவர்கள். பிரதம மந்திரி அங்கெலா மார்க்கல் அவர்களின் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியினைச் சேர்ந்தவர். இவர் முன்னர் நீடார்சக்சன் என்ற மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர். இவர் முதலமைச்சராக இருந்தபோது 2008 ஆம் ஆண்டு 415,000 € பெறுமதியான வீடு ஒன்றை வாங்குவதற்கு அவரது கோடீஸ்வர நண்பரின் மனைவியிடமிருந்து தனிப்பட்ட முறையில் 500,000 € தொகைப் பணத்தை 4% வட்டிக்கு அய்ந்து வருடக் கடனாக பெற்றிருந்தார். இது தனிபட்ட கடனா அல்லது அன்பளிப்பா அல்லது கடன்பெறுவதில் ஏதாவது சலுகைகள் பெற்றுக்கொண்டாரா அல்லது இது பரஸ்பர சலுகைகள் அனுபவிப்பதற்கான லஞ்சப் பணமா என்கிற ரீதியில் மாநில சட்டசபையில் எதிர்கட்சிகள் சந்தேகம் எழுப்பியதைத் தொடர்ந்தே மேற்காட்டப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆனால் இவரது கோடீஸ்வர நண்பர் பல தடவைகள் நிற்வாகப் பயணங்களின் போது இடம்பெற்ற சந்திப்புக்களில் கலந்து கொண்டதை ஆதாரங்காட்டியும், சட்டப்படி ஆட்சிப் பணியில் இருக்கும் அரசியல்வாதி ஒருவர் தனிப்பட்ட ரீதீயில் சலுகைகள் பெறுவது சட்டத்திற்கு முரணானது என்பதையும் காட்டி இன்று ஜெர்மனி மக்களைப் பிரிதிநிதித்துவம் செய்யும் இன்றைய ஜனாதிபதி நம்பிக்கைகுரியவரா என்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதனால் இவர் ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமாச் செய்யும்படி கோரும் குரல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆரவாரத்தில், கொலைகாரக் குழு அமைத்துப் புதிய நாசிகள் வெளிநாட்டவர்கள் பலரைக் கொலைசெய்ததுடன் அரச உளவுத்துறையின் பண உதவியும் பெற்று கொல்லப்பட்டவர்களே கொலைக்குக்காரணமானவர்கள் என்ற நம்பும்படி செய்தமையும் உளவுத்துறையின் கூற்றங்களும் அண்மையில் வெளியாகியமை மறந்துவிட அல்லது அதன் வலுவிழந்துவிடும் வாய்பும் அதிகமாகவே உள்ளது.

Tuesday, April 19, 2011

ஹ்யூஸ்டன், டெக்சாஸ் சட்டத்தரணி ஜார்ஜ் வில்லி அவர்களின் வரவேற்புரைஹ்யூஸ்டன், டெக்சாஸ் சட்டத்தரணி ஜார்ஜ் வில்லி அவர்களின் வரவேற்புரை:


மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே இப் பெருநகருக்கு உங்கள் வரவு நல்வரவாகுக. இங்கிருக்கும் ஓக் மரங்களையும் பிற பறவைகளைப் போல போலிக்குரல் எழுப்பும் பறவைகளையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இது இலங்கையோ என்று நீங்கள் இலகுவில் மயங்கிவிடலாம். நான் இலங்கையில் பிறந்தவன். என் தாயும் என் மனைவி சாந்தியின் தந்தையும் தாயும் மற்றும் எங்களது பாட்டன்கள் பாட்டிகள் யாவரும் அங்கேதான் என் அத் தாய்த்திரு நாட்டின் புனித மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளனர்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே நான் யாழ்ப்பாணத்தில் வளர்ந்து என் பத்தாவது வயதில்தான் கொழும்பு வந்தவன். என் மனைவி பதுளையைச் சேர்ந்தவள். அவள் தந்தை தியத்தலாவையில் மதிப்புமிக்கதொரு கப்டன் என்பதால் அவள் அங்கேயே வளர்ந்தவள். நான் யாழ்ப்பாணத்தின் வேப்பமரங்களின் இன்சுவை முகர்ந்தவன். கொழும்பில் பாடசாலை செல்லும் வழியில் செக்கச் சிவந்த ஜம்புப் பழம் தின்று அதன் சிவப்புக் கொட்டை விழுந்து என் சட்டை கறைபடிந்ததுண்டு. மரத்தில் பழுத்த பலாப்பழத்தை காக்கைகள் கொத்தித் திறந்துவிடுகையில் கவர்ந்திழுக்கும் நறுமணத்தை நன்றே தெரிந்தவன். வெசாக் திருநாளின் மிகைவர்ண அலங்காரப் பந்தல்கள் தோரணங்களைக் கண்டும் ஏழைகளுக்கு உணவிடும் அன்னசத்திரங்களில் கூச்சமின்றிச் சென்று உணவுண்டும் கோவில்களில் ஒலிக்கும் மந்திர உச்சாடனங்கள், தோத்திர பஜனைகள் கேட்டும் மல்லிகைப் பூக்களினதும் சந்தனக்குச்சிகளினதும் நறுமணங்களை அனுபவித்தும், சர்வ புனிதர்களின் தேவாலய மணியோசைகேட்டும் அங்கு நடைபெறும் திருப்பலிப் பூசையில் பங்குத்தந்தை வணக்கத்திற்குரிய ஹேரத் அவர்களுக்குத் திருப்பணிசெய்துமிருகிக்கிறேன்.

ஆனால் 1975 இல் நான் இலங்கையை விட்டு வெளியேறிய நாளில் இருந்து வேதனையும் துன்பமும் கொடூரமுமே அங்கே மிஞ்சின. வழக்கமாக நன்செய் நிலங்களின் நெல்வயல்களுக்கு தன் புனித நீர் பாச்சிய வலிய ஜீவநதி மகாவலி கங்கையில் சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் செங்குருதியோடியது. என் முந்தையோர் வாழ்ந்து மடிந்த தாய் நிலம் சுவர்க்கத்தில் இருந்து நரகத்தின் அதல பாதாளத்தில் வீழ்வதை அமெரிக்க ஐக்கிய ராச்சியத்தில் இங்கிருந்தபடி கண்ணுற வேண்டியவனானேன். இதற்கு யாரை நோவதென்று எவரும் அறுதியிட்டுச் சொல்லமுடியாதுள்ளது.அன்றியும் நொந்து குற்றங்காண்பற்கான காலமும் என்றோ கடந்துவிட்டது. மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே, நீங்களோ துட்ட கைமுனுவின் பரம்பரை. என் மக்கள் எல்லாளன் பரம்பரை. கந்துல என்ற தன் யானையில் இருந்து துட்ட கைமுனு எவ்வாறு எல்லாளனுடன் சண்டையிட்டு அவனைக் கொன்றான் என்பதை எண்ணிப்பாருங்கள். முதன் முதலில் அய்க்கிய இலங்கையொன்றினை உருவாகியதற்காக நிச்சயமாக துட்ட கைமுனு இன்றும் நினைவுகூரப்படுகின்றான். ஆனால் அவன் வேறொன்றுக்குமாகவும் நினைவுகொள்ளப்படுகின்றான். எல்லாளனைத் தோற்கடித்து அவனைக் கொன்றபின் அந்தச் சிறப்புமிக்க எதிரி எல்லாளனை மதித்து நினைவுச் சின்னம் எழுப்பியவன் அவன். அதன் முன்னே நாட்டு மக்கள் அனைவரும் நின்று சிரந்தாழ்த்தி மதிப்பளிக்க வேண்டுமென்று சட்டம் பிறப்பித்தவன். அதன் மூலம் தான் பெருங்கண்ணியவான் மட்டுமல்ல சிறந்த அரசியல் சாணக்கியன் என்பதயும் நிரூபித்துக் காட்டினான். எல்லாளனைத் தோற்கடித்தபின் தமிழர்களையும் தானே ஆளவேண்டுமென்பதை அவன் தெளிந்தே வைத்திருந்தான்.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே, வாய்ப்பும் விதியும் மற்றும் உங்களது மாபெரும் அரசியல் ஆளுமையும் வரலாற்றில் ஒர் தனித்துவமான இடத்திற்கு உங்களைக் கொண்டு சென்றிருக்கின்றது. முன்னே பலபேர் முறியடிக்க முயன்று தோற்ற 25 ஆண்டுகால அரசியற் கிளர்ச்சியினை இறுதியில் அடக்கியவன் மகிந்த ராஜபக்ஷ என்ற பெயருடைய மகாவீரன் என்று இனிவரும் எதிர்காலச் சிறார்கள் சரித்திர நூல்களில் தங்களது பாடம் படிப்பார்கள். 21 ஆம் நூற்றாண்டின் துட்ட கைமுனு என்று அவர்கள் உங்களைச் சொல்லக்கூடும். ஆனால் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே துட்டகைமுனுவின் அதே மேலாடையை நீங்கள் போர்த்திக்கொள்ள விரும்பினால் நீங்களும் நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும். அது டகோபாவாகவோ அல்லது வேறெந்தத் தூபிகளாகவோ அல்லாது நிறைவேற்றுச் சட்டவலுவுள்ள புதிய கொள்கையொன்றாக இருக்க வேண்டும். 58 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை மூட்டிய அதே தவறினை நீங்களும் செய்யவேண்டாம். பல்கலைக் கழகம் செல்ல நினைக்கும் தமிழ் இளைஞர்களை இனியும் தடுத்துவிட வேண்டாம். தமிழர்கள் தாம் இந்த நாட்டில் இரண்டாந்தரக் குடிமக்களாக எண்ணிக்கொண்டிருக்க இடந்தர வேண்டாம். அவர்களது மத நம்பிக்கையினைப் புண்படுத்தாது அவர்களது மொழியினை மதித்து நடவுங்கள். மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே தமிழர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய சிலவற்றை நான் உங்களுக்குச் சொல்லவேண்டும். அவர்களுக்கு அவர்களது மொழி வழிபடும் தெய்வம். உலகில் அவ்வாறு தம் மொழியை வழிபடும் கலாசாரங்கங்கள் மிகச் சிலவே. நீங்கள் ஒரு சட்டத்தரணியாகப் பயிற்றப்பட்டவர். உங்கள் ஆரம்பகாலத்தில் நீங்கள் ஒரு கடும் மனித உரிமைப் பாதுகாவலனாக கீர்த்தி பெற்றிருந்தீர்கள். இப்போது உங்களுக்குப் பேரும் புகழும் வந்துவிட்டது. படைநடத்திச்சென்று சமராடி ரோமாபுரிக்குத் திரும்பிவரும் ஜூலிய சீசரைப் போல அதிகாரம் படைத்த மகாவீரனாகிவிட்டீர்கள். நீங்கள் கேட்பதை மறுப்பவர் இல்லை. சட்டக் கல்லூரியில் படித்தபோது நீங்களும் நானும் கற்றுக்கொண்ட சோல்பரி அரசியல் யாப்பின் நீக்கப்பட்ட சரத்துக்களை மீண்டும் அங்கீகரிக்குமாறு பாராளுமன்றத்திடம் கேளுங்கள். என் உதவி வேண்டுமானால் இங்கே குழுமியிருக்கும் அனேகரைப்போல் நானும் இலவசமாகவே அதனைச் செய்து தருவேன். தங்களுக்கென்றொரு இடமிருக்கின்றது என்று நீங்கள் உறுதிமொழி சொல்வீர்கள் என்று தமிழர்கள் ஏதிலிகளாக உங்களிடம் எதிர்பார்த்து நிற்கின்றனர்.
'உங்களுக்கு அந்த இடம் இருக்கின்றது' என்பதை அவர்களுக்கு நீங்கள் உறுதிசெய்யுங்கள். ஒரு பிரபாகரனைக் கொன்றீர்கள். அப்படி இன்னொருவன் வளர இடம்வைக்கக்கூடாது. இன்னொருவன் தோன்றுவதை முற்காத்துக் கொள்ள வாளோடும் துப்பாக்கியோடும் உங்களால் முடியாது. மனதாலும் மகத்தான அறிவாலும் மட்டுமே அதனைத் தடுக்க முடியும். புத்தரிடமிருந்து கற்றுக்கொண்ட கருணை, உண்மை, நீதி என்ற ஆயுதங்கள் மட்டுமே அதற்குத் தேவை. தம்மபதத்தில் புத்தர் „பகைமையைப் பகைமையால் ஒருபோதும் அழிக்கமுடியாது. அன்பினால் மட்டுமே பகமையை இல்லாதொழிக்கலாம் என்பது ஒரு புராதன நியதி.“ என்று சொல்லியிருக்கின்றார்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே நீங்கள் இந்த அழகிய மாநகரைவிட்டு இலங்கைக்குத் திரும்பிச் செல்லும்போது, நாளை தன் பாடசாலைக்குச் செல்லும் பத்துவயதுச் சிறுவனின் வெள்ளைச் சட்டையின் சிவப்புக்கறை ஜம்புப்பழத்தின் கொட்டையால் அன்றி வேறொன்றாலுமில்லை என்பதையும், காலையின் காக்கையொன்று அங்கே கொத்திக் கிழிக்கப்போவது பலாப்பழத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்பதையும் வேப்பமரத்தில் தொங்குவது நான் முகர்ந்த வேப்பம் பழங்களல்லாது வேறொன்றுமில்லை என்பதையும் எனக்குச் சத்தியம் செய்து தாருங்கள். மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே எங்களை மீண்டும் சுவர்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்! எங்களை மீண்டும் சுவர்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்!

(தமிழில்: ந. சுசீந்திரன்)

Friday, November 05, 2010

Welcome speech by George R Willy to President RajapakseFull text:
Distinguished guests, Ladies and Gentlemen, welcome Your Excellency to this great city. If you can ignore the oak trees and the mocking birds you could easily mistake this for Sri Lanka.

It is in Sri Lanka that I was born, and my mother and the parents of my wife Shanthi, our grand fathers and grand mothers are all buried under the sacred soil of my motherland. I grew up Your Excellency, in Jaffna and moved to Colombo when I was only ten years old. My wife is from Badulla, grew up in Diyatalawa where her dad was a well a respected captain in the army.

I have smelt the sweetness of Margosa trees in Jaffna and taste of the Red Jumbu fruits that left red stains on my white shirt as I walked to school in Colombo. I know the allure of Jack fruits ripening on the trees as crows begin to break them open.

I have seen the bright colour of pandals during Wesak and shamelessly ate food at Dansala meant for the poor. And I have heard the chanting of Kovils and inhaled the smell of jasmine and Joss sticks. I’ve heard the bell of All Saint’s church as I assisted Father Herath during Mass.

But since I left Sri Lanka in 1975 there has been such pain, such sorrow and such agony. The mighty Mahaweli Ganga that usually brings its sacred waters to the paddy fields spat out blood. Both the Sinhalese and Tamils. From up here in the United States I have watched the land of my forefathers descend from paradise deep into hell. No one can say with certainty who is to blame but the time for blaming is long gone.

Your Excellency, your power be descended from Dutugemunu and my people from Elara. Remember how Dutugemunu fought Elara on his Elephant Kandula and killed Elara. Dutugemunu of course is still remembered for uniting Sri Lanka for the first time. But he is also remembered for something else. After defeating and killing Elara he built a monument for Elara out of respect for his worthy opponent. He ordered all the citizens of the land to stop, dismount and pay respect to Elara. In so doing he not only showed what a great noble man he was. But also proved to be a great politician. He knew that He had to rule the Tamil people too after the defeat of Elara.

Your Excellency, faith and fortune and your great political skills have placed you at a unique point in history.

Children years to come, will read in their history books, that a great leader, a great warrior by the name of Mahinda Rajapaksa finally defeated the rebellion after nearly 25 years when several before him failed. They may even say that you are Dutugamunu of the 21 century. But if you want to wear Gemunu’s mantle, Your Excellency, you will have to build a monument too. That monument does not have to be a Dagoba or a building. It will have to be new policy backed by laws with teeth to enforce.

Do not make the mistake that started 58 riots. Do not hold back Tamils who want to get into Universities. Do not make the Tamils feel like they are second class citizens. Respect their religion, and respect their language. There is something about the Tamil people you need to know Your Excellency. To them their language is God. There are only few cultures in the world which has such devotion to the language.

You were trained as a lawyer and in your early career you were a formidable defender of human rights.

Now you have the popularity, you have the power of a hero, like Julius Caeser, returning to Rome from his conquests. No one can deny what you ask. Ask the parliament to pass some entrenched clauses; you and I read in law school. Then we have had to study the Soulbury Constitution. If you need my help I will give it free like many in this audience would. The Tamil people are naked and hungry looking for you to assure them that there is a place for them.

Make sure they have one. You killed one Prabhakaran but do not let another grow. You cannot prevent another one with swords and guns. You can only do that with your heart and wisdom. Compassion, truth and justice, you learnt from Buddha are the only weapons you will need. According to Dhamma Pada, Buddha said that hatred does not cease by hatred at any time. Hatred cease by love. This is an old rule. That's what the Buddha said.

Your Excellency, as you leave this fair city and return to Sri Lanka, promise me that a 10 year boy walking to school tomorrow in his white shirt will have no other red stain than from the Jumbu fruits. The morning crow will not open anything other than the jackfruit. That there will be nothing else hanging from the Magosa trees, than the fruits I smelt.

Your Excellency return us to paradise, return us to paradise. Thank You!

Text in Tamil:
ஹ்யூஸ்டன், டெக்சாஸ் சட்டத்தரணி ஜார்ஜ் வில்லி அவர்களின் வரவேற்புரை:

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே இப் பெருநகருக்கு உங்கள் வரவு நல்வரவாகுக. இங்கிருக்கும் ஓக் மரங்களையும் பிற பறவைகளைப் போல போலிக்குரல் எழுப்பும் பறவைகளையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இது இலங்கையோ என்று நீங்கள் இலகுவில் மயங்கிவிடலாம்.
நான் இலங்கையில் பிறந்தவன். என் தாயும் என் மனைவி சாந்தியின் தந்தையும் தாயும் மற்றும் எங்களது பாட்டன்கள் பாட்டிகள் யாவரும் அங்கேதான் என் அத் தாய்த்திரு நாட்டின் புனித மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளனர்.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே நான் யாழ்ப்பாணத்தில் வளர்ந்து என் பத்தாவது வயதில்தான் கொழும்பு வந்தவன். என் மனைவி பதுளையைச் சேர்ந்தவள். அவள் தந்தை தியத்தலாவையில் மதிப்புமிக்கதொரு கப்டன் என்பதால் அவள் அங்கேயே வளர்ந்தவள். நான் யாழ்ப்பாணத்தின் வேப்பமரங்களின் இன்சுவை முகர்ந்தவன். கொழும்பில் பாடசாலை செல்லும் வழியில் செக்கச் சிவந்த ஜம்புப் பழம் தின்று அதன் சிவப்புக் கொட்டை விழுந்து என் சட்டை கறைபடிந்ததுண்டு. மரத்தில் பழுத்த பலாப்பழத்தை காக்கைகள் கொத்தித் திறந்துவிடுகையில் கவர்ந்திழுக்கும் நறுமணத்தை நன்றே தெரிந்தவன். வெசாக் திருநாளின் மிகைவர்ண அலங்காரப் பந்தல்கள் தோரணங்களைக் கண்டும் ஏழைகளுக்கு உணவிடும் அன்னசத்திரங்களில் கூச்சமின்றிச் சென்று உணவுண்டும் கோவில்களில் ஒலிக்கும் மந்திர உச்சாடனங்கள், தோத்திர பஜனைகள் கேட்டும் மல்லிகைப் பூக்களினதும் சந்தனக்குச்சிகளினதும் நறுமணங்களை அனுபவித்தும், சர்வ புனிதர்களின் தேவாலய மணியோசைகேட்டும் அங்கு நடைபெறும் திருப்பலிப் பூசையில் பங்குத்தந்தை வணக்கத்திற்குரிய ஹேரத் அவர்களுக்குத் திருப்பணிசெய்துமிருகிக்கிறேன்.

ஆனால் 1975 இல் நான் இலங்கையை விட்டு வெளியேறிய நாளில் இருந்து வேதனையும் துன்பமும் கொடூரமுமே அங்கே மிஞ்சின. வழக்கமாக நன்செய் நிலங்களின் நெல்வயல்களுக்கு தன் புனித நீர் பாச்சிய வலிய ஜீவநதி மகாவலி கங்கையில் சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் செங்குருதியோடியது. என் முந்தையோர் வாழ்ந்து மடிந்த தாய் நிலம் சுவர்க்கத்தில் இருந்து நரகத்தின் அதல பாதாளத்தில் வீழ்வதை அமெரிக்க ஐக்கிய ராச்சியத்தில் இங்கிருந்தபடி கண்ணுற வேண்டியவனானேன். இதற்கு யாரை நோவதென்று எவரும் அறுதியிட்டுச் சொல்லமுடியாதுள்ளது.அன்றியும் நொந்து குற்றங்காண்பற்கான காலமும் என்றோ கடந்துவிட்டது.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே, நீங்களோ துட்ட கைமுனுவின் பரம்பரை. என் மக்கள் எல்லாளன் பரம்பரை. கந்துல என்ற தன் யானையில் இருந்து துட்ட கைமுனு எவ்வாறு எல்லாளனுடன் சண்டையிட்டு அவனைக் கொன்றான் என்பதை எண்ணிப்பாருங்கள். முதன் முதலில் அய்க்கிய இலங்கையொன்றினை உருவாகியதற்காக நிச்சயமாக துட்ட கைமுனு இன்றும் நினைவுகூரப்படுகின்றான். ஆனால் அவன் வேறொன்றுக்குமாகவும் நினைவுகொள்ளப்படுகின்றான். எல்லாளனைத் தோற்கடித்து அவனைக் கொன்றபின் அந்தச் சிறப்புமிக்க எதிரி எல்லாளனை மதித்து நினைவுச் சின்னம் எழுப்பியவன் அவன். அதன் முன்னே நாட்டு மக்கள் அனைவரும் நின்று சிரந்தாழ்த்தி மதிப்பளிக்க வேண்டுமென்று சட்டம் பிறப்பித்தவன். அதன் மூலம் தான் பெருங்கண்ணியவான் மட்டுமல்ல சிறந்த அரசியல் சாணக்கியன் என்பதயும் நிரூபித்துக் காட்டினான். எல்லாளனைத் தோற்கடித்தபின் தமிழர்களையும் தானே ஆளவேண்டுமென்பதை அவன் தெளிந்தே வைத்திருந்தான்.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே, வாய்ப்பும் விதியும் மற்றும் உங்களது மாபெரும் அரசியல் ஆளுமையும் வரலாற்றில் ஒர் தனித்துவமான இடத்திற்கு உங்களைக் கொண்டு சென்றிருக்கின்றது. முன்னே பலபேர் முறியடிக்க முயன்று தோற்ற 25 ஆண்டுகால அரசியற் கிளர்ச்சியினை இறுதியில் அடக்கியவன் மகிந்த ராஜபக்ஷ என்ற பெயருடைய மகாவீரன் என்று இனிவரும் எதிர்காலச் சிறார்கள் சரித்திர நூல்களில் தங்களது பாடம் படிப்பார்கள். 21 ஆம் நூற்றாண்டின் துட்ட கைமுனு என்று அவர்கள் உங்களைச் சொல்லக்கூடும். ஆனால் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே துட்டகைமுனுவின் அதே மேலாடையை நீங்கள் போர்த்திக்கொள்ள விரும்பினால் நீங்களும் நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும். அது டகோபாவாகவோ அல்லது வேறெந்தத் தூபிகளாகவோ அல்லாது நிறைவேற்றுச் சட்டவலுவுள்ள புதிய கொள்கையொன்றாக இருக்க வேண்டும். 58 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை மூட்டிய அதே தவறினை நீங்களும் செய்யவேண்டாம். பல்கலைக் கழகம் செல்ல நினைக்கும் தமிழ் இளைஞர்களை இனியும் தடுத்துவிட வேண்டாம். தமிழர்கள் தாம் இந்த நாட்டில் இரண்டாந்தரக் குடிமக்களாக எண்ணிக்கொண்டிருக்க இடந்தர வேண்டாம். அவர்களது மத நம்பிக்கையினைப் புண்படுத்தாது அவர்களது மொழியினை மதித்து நடவுங்கள். மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே தமிழர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய சிலவற்றை நான் உங்களுக்குச் சொல்லவேண்டும். அவர்களுக்கு அவர்களது மொழி வழிபடும் தெய்வம். உலகில் அவ்வாறு தம் மொழியை வழிபடும் கலாசாரங்கங்கள் மிகச் சிலவே. நீங்கள் ஒரு சட்டத்தரணியாகப் பயிற்றப்பட்டவர். உங்கள் ஆரம்பகாலத்தில் நீங்கள் ஒரு கடும் மனித உரிமைப் பாதுகாவலனாக கீர்த்தி பெற்றிருந்தீர்கள். இப்போது உங்களுக்குப் பேரும் புகழும் வந்துவிட்டது. படைநடத்திச்சென்று சமராடி ரோமாபுரிக்குத் திரும்பிவரும் ஜூலிய சீசரைப் போல அதிகாரம் படைத்த மகாவீரனாகிவிட்டீர்கள். நீங்கள் கேட்பதை மறுப்பவர் இல்லை. சட்டக் கல்லூரியில் படித்தபோது நீங்களும் நானும் கற்றுக்கொண்ட சோல்பரி அரசியல் யாப்பின் நீக்கப்பட்ட சரத்துக்களை மீண்டும் அங்கீகரிக்குமாறு பாராளுமன்றத்திடம் கேளுங்கள். என் உதவி வேண்டுமானால் இங்கே குழுமியிருக்கும் அனேகரைப்போல் நானும் இலவசமாகவே அதனைச் செய்து தருவேன். தங்களுக்கென்றொரு இடமிருக்கின்றது என்று நீங்கள் உறுதிமொழி சொல்வீர்கள் என்று தமிழர்கள் ஏதிலிகளாக உங்களிடம் எதிர்பார்த்து நிற்கின்றனர். 'உங்களுக்கு அந்த இடம் இருக்கின்றது' என்பதை அவர்களுக்கு நீங்கள் உறுதிசெய்யுங்கள். ஒரு பிரபாகரனைக் கொன்றீர்கள். அப்படி இன்னொருவன் வளர இடம்வைக்கக்கூடாது. இன்னொருவன் தோன்றுவதை முற்காத்துக் கொள்ள வாளோடும் துப்பாக்கியோடும் உங்களால் முடியாது. மனதாலும் மகத்தான அறிவாலும் மட்டுமே அதனைத் தடுக்க முடியும். புத்தரிடமிருந்து கற்றுக்கொண்ட கருணை, உண்மை, நீதி என்ற ஆயுதங்கள் மட்டுமே அதற்குத் தேவை. தம்மபதத்தில் புத்தர்
„பகைமையைப் பகைமையால் ஒருபோதும் அழிக்கமுடியாது. அன்பினால் மட்டுமே பகமையை இல்லாதொழிக்கலாம் என்பது ஒரு புராதன நியதி.“ என்று சொல்லியிருக்கின்றார்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே நீங்கள் இந்த அழகிய மாநகரைவிட்டு இலங்கைக்குத் திரும்பிச் செல்லும்போது, நாளை தன் பாடசாலைக்குச் செல்லும் பத்துவயதுச் சிறுவனின் வெள்ளைச் சட்டையின் சிவப்புக்கறை ஜம்புப்பழத்தின் கொட்டையால் அன்றி வேறொன்றாலுமில்லை என்பதையும், காலையின் காக்கையொன்று அங்கே கொத்திக் கிழிக்கப்போவது பலாப்பழத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்பதையும் வேப்பமரத்தில் தொங்குவது நான் முகர்ந்த வேப்பம் பழங்களல்லாது வேறொன்றுமில்லை என்பதையும் எனக்குச் சத்தியம் செய்து தாருங்கள். மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே எங்களை மீண்டும் சுவர்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்!
எங்களை மீண்டும் சுவர்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்!

(தமிழில்: ந. சுசீந்திரன்)