மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Thursday, March 31, 2005

குறுந்தொகை
அந்தக் கடற்கரையின் மெல்லிய காற்றில் ஆடுவதற்கு ஒன்றுமில்லை. அவள் செவிகளுக்கு மட்டும் கேட்கும்படியாக அவள் மனம் மட்டும் ஆடியது. மாரிகாலத்தின் தூறல் மழையிலும் மணல் படு நிலத்தை மெல்லெனத் தழுவும் ஆசை அலைகளின் மெது வருடலிலும் பூமி நனைந்திருந்தது. அன்றைய புலவர்களால் ஆம்பல் எனச் செல்லமாக அழைக்கப்பட்ட அல்லித் தாமரையின் வெள்ளை மலர்கள் அவள் நினைவுக்குள் வந்து குவிந்தன. ஒற்றைக் கால் ஊன்றி ஒய்யாரமாக, ஓடுமீன் ஓடி உறுமீன் வருமளவும் வாடியிருக்கின்ற கொக்குகளைக் கண்ட மாத்திரத்தில் அந்த மலர்கள் அவள் நினைவில் வந்து குவிந்தன. ஆனால்
 
"எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுத்து
வட்டக் குடை பிடித்து வழக்கமாக வருகின்ற நண்டுகளை இன்று அந்தப் பொறுமையுடன் பார்க்க முடியவில்லை.தத்தமது அடிச்சுவடுகளை மட்டும் அந்த ஈர மண்ணில் அடையாளமாக விட்டு விட்டு ஓடிவிடுகின்றன நண்டுகள்.

நண்டுகளுக்கு எமனல்லவா அந்தக் ஒற்றைகாற் கொக்குகள். கட்டறுந்த காளையொன்றின் ஜல்லிக்கட்டு வேகத்தில் அவை ஓடி ஒளிகின்றன. தாழை மர வேர்களுக்குள் ஓடிப் பதுங்கி மறைகின்றன அந்த நண்டுகள். இந்த முனையில் அன்றைய நிலவில் "நான் விரைவில், சில நாட்களில் வந்துவிடுவேன்" என்று சொல்லிவிட்டுப் போனானே அந்த நெய்தல்நாடன். அவன் இன்றும் வரவில்லை. சரி, வராமலேயே இருந்துவிடட்டும். இளைத்துப் போகும் எனது கைகளுக்கு வளையல்கள் விற்கும் வியாபாரி ஒருவன் இல்லாமலா போய்விடுவான் என்று சலித்துக் கொண்டாள் அவள்.
          
குறுந்தொகை எமது காதல் இலக்கியத்தின் நிறைமுடி. அதன் குறுகிய வடிவமும் பொருள் விரிந்து செல்லும் காட்சிப் படிமங்களும் படிக்கப் படிக்க மகிழ்ச்சி தருபவை. ஆனால் அவை முற்காலத் தமிழில் இருப்பதால் அவற்றை ரசிக்கமுடியாமல் போய்விடுகிறது. அவற்றின் சுவையும் குன்றாமல் அதேவேளை அதில் வரும் சொற்களைக்கொண்டே இன்றைய கவிதை வடிவில் சொல்லிவிட முயன்றிருக்கின்றனர் சில அறிஞர்கள்.  ஆங்கிலத்தில் இவ்வாறு தான் "Canterbury Tales" நவீன ஆங்கிலத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளதாம். குறுந்தொகையின் 117 வது பாடலின் மூல வடிவமும் அதனை மீளுரைத்த ஒரு மு.ரா. பெருமாள் முதலியார் அவர்களின் நவீன வடிவமும் கீழே எழுதுகின்றேன். அந்தப் பாடலின் காட்சியைத் தான் என் எழுத்தில் நீங்கள் மேலே காண்பது.
 
மூல வடிவம்:
 
மாரியாம்பல் அன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்நெண்டு
கண்டல் வேரளைச் செலீஇயர் அண்டர்
கயிறரி எருத்திற் கதழுந் துறைவன்
வாரா தமையினும் அமைக
சிறியவும் உளவீண்டு விலைஞர் கை வளையே.
       
நவீன வடிவம்:
 
மாரி காலத்து ஆம்பல் மலர் நிற
கூரிய பார்வைக் கொக்குக்கு அஞ்சி
கயிறு அறுத்து ஓடும் காளையின் விரைந்து
தாழையின் வேரைச் சார்ந்த வளைக்குள்
பாய்ந்து மறைந்து பதுங்கும் நண்டு
செறிந்த கழிக்கரைச் சேர்ப்பன்*இன்றும்
வாராதிருப்பினும் வருந்தோம் நாமே
இளைத்த கைகளுக்கு ஏற்ற சிறிய
வளையலும் விற்கும் வணிகர் உளரே.


* சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்

0 Kommentare:

Post a Comment