மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Wednesday, July 27, 2005

கொங்கர் புளியங்குளம்

மதுரையில் இருந்து மேற்கு நோக்கி தேனிக்குச் செல்லும் வழியில் தெக்கானூர் என்ற ஊர் கழிந்தவுடன் சிறிதளவு தூரத்தில் ஒரு பெரிய எரிபொருள் நிரப்பும் நிலயமொன்று(பெற்றோல் பாங்கு) இப்போது புதிதாகத் திறந்து வைத்திருக்கிறார்கள்.
வீதியின் எதிர்ப்புறத்தே இருக்கும் மரத்தடியில் புத்தம் புதிதாக விநாயகர்சிலை ஒன்று முளைத்திருக்கின்றது. வாகனங்களின் வேகத்தைக் குறைக்கவும் வாடிக்கையாளர்களைக் கூட்டவும் பக்தர்கள் வசதிக்கும் ஏற்ப இது நல்ல ஏற்பாடுதான். இப்படியாக சித்தன் ஒண்ணுக்கிருக்க அந்த வீதியில் ஒதுங்கிய வேளை நட்டகல் ஒன்று நானிருக்கிறேன் என்று பேசியது. கொங்கர் புளியங்குளம் என்ற அந்தக் கிராமத்தின் வீதியில் ஒருமுறை திருமலை நாயக்கர் உலாப்போனாராம்.நிரந்தர நிலமற்ற அந்த ஊர் மக்கள் அட்டாங்கமாகத் தடாலென விழுந்து திருமலை நாயக்கரை வணங்கினராம். நாயக்கரும் மகிழ்ந்து வீதியின் ஒரு மருங்கை மேலைத்தெருவாகவும், மறு மருங்கைக் கீழைத்தெருவாகவும் மக்களுக்கே பகிர்ந்தளித்தாராம். நானூறு வருடங்களுக்கு முந்திய அந்தச் சரிதை சொல்லும் கற்சிலையே இப்போது நாய்கள் ஒண்ணுக்கிருக்க, பார்ப்பாரும் எடுப்பாரும் அற்று அய்தான செடிக்களுக்கிடையில் மறைந்து கிடக்கிறது. அந்தக் கற்சிலைதான் நீங்கள் அருகே பார்ப்பது.

கொங்கர் புளியங்குளத்தின் கீழைதெருவுக்கு அப்பால் ஒரு மலை நீண்டு கிடக்கிறது. அந்த மலையின் நடுவில் இருக்கும் குகைவெட்டில் அய்ம்பதுக்கும் அதிகமான சமணப் படுக்கைகள் இருக்கின்றன. வெளியே கொழுத்தும் வெயிலில் அந்தக் குகைக்குள் புகுந்த போதுதான் புரிந்தது ஏன் சமணர்கள் இந்த இடத்தைத் தேர்ந்தனர் என்று. உள்ளிருக்கும் போது அவ்வளவு இதமாக இருக்கிறது. சமணப் பள்ளிகள் இருக்கும் இடத்தின் வரவேற்பு மலையில் எப்போதும் மகாவீரர் செதுக்கப்பட்டிருப்பார்.
உள்ளே போனால் பெரிய கல் ஒன்று நேர்த்தியாக வைக்கப்பட்டிருக்கும். மருந்து அரைப்பதற்கோ அல்லது அதில் குரு ஏறியிருந்து பிரசங்கம் பண்ணுவதற்கோ பயன் பட்டிருக்கலாம். இந்தக் கொங்கர்புளியங்குளத்தில் இருந்து கோட்டையூர் என்ற ஒரு குக்கிராமத்துக்குப் போய் கருப்பணசாமி கோயில் பார்த்தேன்.

3 Kommentare:

 1. இது போன்ற, பெரிதும் அறியப்படாத இடங்களைப் பற்றி பதிவது மிகவும் அவசியம். தகவல்களுக்கு நன்றி!

  ReplyDelete
 2. //மதுரைக்கு மேற்கே//
  எந்த ஊருக்குப் போகும் வழியில் என்பது போன்ற இட விபரங்களையும் இட்டால் உதவியாக இருக்கலாம்.
  //அறியப்படாத இடங்களைப் பற்றி பதிவது மிகவும் அவசியம்.// வ.மொ.

  ReplyDelete
 3. அன்பு சுதர்சன்,சுந்தரவடிவேல்
  மிகவும் நன்றி. மதுரையில் இருந்து தேனி செல்லும் வழியில் தெக்கானூருக்குப் பக்கத்தில் இருக்கின்றது கொங்கர் புளியங்குளம்.

  ReplyDelete