மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Thursday, July 14, 2005

கலீல் கிப்ரானும்( Khalil Gibran) செங்கள்ளுச் சித்தனும்

கலீல் கிப்ரானும்( Khalil Gibran) செங்கள்ளுச் சித்தனும்

நடனப் பயிலகச் சிறுவர்களின் ஆண்டு விழா ஒன்றுக்கு என்னை ஒரு கௌரவ விருந்தினராக அழைத்துச் சிறப்புரையாற்றுமாறு கேட்டிருந்தார்கள். இப்படிச் சொல்வதால் நான் நாட்டியக்கலை பற்றி அறிந்தவனென்றோ அல்லது ஒரு நல்ல பேச்சாளர் என்றோ நினைத்துவிடாதீர்கள். அந்த நடனப் பள்ளி இயங்குவதற்கு வாடகை மண்டபம் ஒன்று பிடித்துக் கொடுத்ததுவே என்னை அவர்களின் அவ்வருடச் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக்கியது. நடனமாடியவர்கள் பெரும்பாலும் பெண்குழந்தைகளாகவே இருந்தார்கள். மண்பம் நிறைந்த கூட்டம். ஒரு முந்நூறு தொடக்கம் நானூறு பேர்கள், அனேகமாப் பெற்றோர்கள். இடம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் பெண்குழந்தைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் அவை ஏற்படாதிருக்க பெற்றோரின் அணுகுமுறை பற்றியும் இந்த சந்தர்ப்பத்தில் பேசலாமென்று திட்டமிட்டிருந்தேன்.
எனது பேச்சின் தொடக்கம் „கலீல் கிப்ரான்“ (Khalil Gibran) அவர்களின் புகழ்பெற்ற “ ...உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல...” ( “...Your children are not your children. They are the sons and daughters of Life's longing for itself. They come through you but not from you...” ) என்ற கவிதையுடன் ஆரம்பித்து, வளரும் குழந்தைகளின் முதல் கண்டுபிடிப்பு : ‘ என் தந்தை என்பவர் எவ்வளவு முட்டாள்’ என்பதே என்று பேச்சின் இடையில் சபையினர் சிரிக்கவேண்டுமே என்பதற்காக இப்படிச் சிலவற்றையும் எடுத்து விட்டிருந்தேன். என் பேச்சில் எனக்குத் திருப்திதான். ஆனால் தொடர்ந்து மேடையில் இருக்க முடியவில்லை. வீடியோ படப்பிடிப்புக்குப் பூட்டியிருந்த வெளிச்சப் போறணைகளால் நான் பாதி வெந்திருந்தேன். என் பேச்சு முடிய நான் கீழே இறங்கிவிட்டேன். கீழே இறங்கி வந்ததும் ஒரு வாட்டசாட்டமான கௌரவ மனிதர் ஒருவர் என் கைகளைப் பற்றி “ நான் உம்மோடு பேச வேண்டும்...வாரும் வெளியே போவோம்” என்றார். என்னைப் பாராட்டவே போகிறார் என்று நினைத்தபடி, சிரித்த முகத்துடன் சென்றேன். இல்லை அவர் என்னை இழுத்துச் சென்றிருக்க வேண்டும். மண்டபத்திற்கு வெளியேயும் ஆண்களின் கணிசமான கூட்டம். வெளியே வந்ததும் தூஷண வார்தைகளால் என்னை வையத் தொடங்கிவிட்டார். “ எங்க பிள்ளையள் எங்களுக்குப் பிறக்காம என்னடா வம்பிலா பிறந்தவர்கள்...?” என்று ஆரம்பித்து இலங்கையில் சிங்களவன் தமிழ்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறான் என்றெல்லாம் உரத்துக் கத்த ஆரம்பித்துவிட்டார். இதற்கிடையில் எங்கள் இருவரையும் சூழ பெருங்கூட்டம் கூடிவிட்டது. எனக்குத் தெரிந்தவர்களாய் யாரும் இல்லை. என் பக்கத்து நியாயத்தைப் பேசவும் பயந்தேன். எல்லோரும் எனக்கு அடிக்கத் தயாராகி விட்டார்கள். என்னை இழுத்து வந்தவர் சொல்வதின் நியாயம் தங்களுக்குப் புரிகின்றதாக எல்லோரும் வழிமொழிந்து நின்றனர். அவர் ஒரு கை வைத்துத் தொடக்கிவிட்டால் போதும், மிகுதி இருபது கைகளும் என்னைப் பதம் பார்க்கத் தயார். அந்த வேளையில் நாட்டியப் பயிலக ஆசிரியையின் கணவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து. “ இவரை நாங்கள் கூப்பிடாமலேயே தானாக வந்து மேடைஏறிவிட்டார் ” என்றும் சொல்லிவிட்டார். எனது நம்பிக்கைகள் சிதறின. எந்த வசைச் சொல்லும் எனக்குக் கோபமூட்டவில்லை. என் ரோச நரம்புகள் யாவும் செத்துக்கிடந்தன. என்னை அவர்கள் விடுவதாயும் இல்லை. ஓடவும் முடியாது. கூட்டத்தில் நின்ற ஒரு நியாயவாதி இப்படிக் கூறினனார்: “ எல்லோரும் ஏதோ ஒரு வகையில் பைத்தியக் காரர்கள் தான். ஆனால் இவருக்கு சற்று மிகை” என்ற கருத்துப்பட என்னைச் சுட்டிக் கூறினார். அப்பொழுது எனக்குத் தெரிந்த ஒருவர் சற்று தூரத்தே எம்மைக் கடந்து செல்லும் போது என்னை அடையாளங் கண்டவராய் “ என்ன பிரச்சினை ? “என்றார். இந்த நகரத்தின் ஒரு அறியப்பட்ட தமிழ்ப் புத்திஜீவி என்னை காப்பாற்றி விட்டார் என்றே நினைத்துக் கொண்டேன். அப்பாடா! என்னால் மூச்சு விட முடிந்தது.
“ நா ன் கலீல் கிப்ரானின் கவிதை ஒன்றை மேடையில் சொன்னேன்...” என்று சொல்லி முடிக்கவில்லை. அந்தப் புத்திஜீவி என்னிடம் திருப்பிக் கேட்டார்:
“ உனக்கேன் தேவையற்ற வேலை....முஸ்லிம் பிரச்சினையை இங்கே எதற்குப் பேசினாய்?”

6 Kommentare:

 1. நல்ல நகைச்சுவை. :)

  ReplyDelete
 2. அன்பு தங்கமணி,-/பெயரிலி
  மிக்க நன்றி. இக் கதையின் இறுதியில் எப்படி எழுதலாம் என்கிறீர்கள்?

  "இடுக்கியில் இருந்து நெருப்பில் விழுந்தேன்" என்று முடிக்கலாம் என்றிருந்தேன்.பின்
  "பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது" என்று எழுதிவைக்கலாமா என்று யோசித்துப் பின் எதையும் எழுதாமல் விட்டு விட்டேன்!

  ReplyDelete
  Replies
  1. “ உனக்கேன் தேவையற்ற வேலை....சாதிப் பிரச்சினையை இங்கே எதற்குப் பேசினாய்?”

   Delete
 3. சித்தரே!
  அந்த மாதிரியிருக்கு.
  ;-D

  ReplyDelete
 4. /"இடுக்கியில் இருந்து நெருப்பில் விழுந்தேன்" என்று முடிக்கலாம் என்றிருந்தேன்.பின்
  "பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது" என்று எழுதிவைக்கலாமா என்று யோசித்துப் பின் எதையும் எழுதாமல் விட்டு விட்டேன்!/

  இராமற்றை வில்லை ஆர் உடைச்சாத்தான் உங்களுக்கென்ன, நீங்கள் போனமா வந்தமா எண்டு உங்கட வேலையைப் பாத்திட்டு வந்திருக்கலாமெண்டு சொல்லுறன்

  ReplyDelete