மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Sunday, September 18, 2005

பத்மநாப ஐயர்

புத்தகமே சாலத் தொகு...பொருள்தெரியும்!

பத்மநாப ஐயரை எண்பதுகளுக்கு முன்னர் நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவரது இலக்கிய சேவையென்பது அறுபதுகளிலேயே அறியப்பட்ட ஒன்றாக இருந்திருக்கிறது. எண்பதுகளுக்கு முன்னான இருபது வருட ஈழத்து இலக்கியக் காலம் என்பதே பல வகைகளில் ஆர்வத்திற்கும் ஆராய்விற்கும் உரியதாகும்.
சுதந்திர இலங்கையின் ஆரம்ப கால இலக்கியங்களின் கணிசமான பகுதி பாரதீயம், திராவிடவியம், காந்தீயம் என்பவற்றின் சாயல்களாகவும் இருக்கின்றன. பின்னர் ஐம்பதுகளில் ஏற்பட்ட திடீர் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் இலக்கிய வரலாற்றின் திருப்புமுனையாகவும் அதன் செல்திசையினைத் தீர்மானிக்கும் காரணிகளையும் கொண்டிருந்தன.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கமும் அதன் செல்வாக்கின் ஆரம்பமும் , S.W.R.D.பண்டார நாயக்காவின் புதிய கட்சியின் தோற்றமும், S.J.V.செல்வநாயகத்தின் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபிதமும் இலங்கையின் படித்த மேல்தட்டு வர்க்க, நடுத்தட்டு வர்க்க மக்களுக்கிடையில் நிலவிய இலக்கியநுகர்வு இலக்கியவாக்கம் என்பன முற்போக்கு பிற்போக்கு கன்னைகள் என்ற புதிய வகைப்படுத்தல் செய்யப்பட்டன. அதுமட்டுமல்லாது „தேசிய இலக்கியம்“ என்ற பிரக்ஞையின் தோற்றமும் அதன் அரசியற் பலமும் „தென்னிந்திய எழுத்துக்களே உன்னதமானவை“ என்ற ஒரு கருத்துருவை சந்தேகிக்க வைத்தது. திடீரென நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய இலக்கியங்களின் இறக்குமதித் தடையினால் தரமான தமிழ் இலக்கிய சஞ்சிகைகள், சிறுபத்திரிகைகள் இலங்கையில் கிடைப்பது மிக அரிதாகியது. இதுவரை இருந்து வந்த இலக்கிய ஒருவழிப்பாதை அப்போது தடைபட்டுப் போனது.
இந்தக்காலத்தில் தான் பத்மநாப ஐயர் போன்றவர்களின் இலக்கியப் பிரவேசமும் இன்றியமையாத அவர்களது சேவையும் பெரிதெனெக் கொள்ளப்படுகின்றன. தடைபட்ட ஒருவழிப்பாதை என்பது பத்மநாப ஐயர் போன்றவர்களால் இலக்கியப் பாலமாக ஈடு செய்யப்பட்டு இலங்கை இந்தியத் தமிழ் இலக்கியப் பரிவர்த்தனையை எள்ளுப்பொரி அளவிலேனும் நிவர்த்தி செய்தது. பத்மநாபஅய்யர் அவர்கள் புகழ்பெற்ற தரமான தெனிந்திய இலக்கிய சஞ்சிகைகளின் (மாத்தளை என்ற மத்திய இலங்கை நகரமொன்றில்) சந்தாதாரராக இருந்தாரென்பதும் அவற்றில் ஒரு பிரதி மட்டும் என்றில்லாது பல பிரதிகளை தருவித்து அவற்றை இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள நண்பர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் இலவசமாகச் சேர்ப்பிப்பாரென்றும் , தரமான நூல்கள், சஞ்சிகைகள் போன்றவற்றைக் கண்டவுடன் (முன்பின் யோசிக்காது) பல பிரதிகளை வாங்கி நண்பர்களுக்கு வழங்குவாரென்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இலங்கையில் வெளியாகிய நூல்களை இந்தியாவிற்குக் காவிச் செல்வதும் பின்னர் அங்கிருந்து பல நல்ல நூல்களை இலங்கைக்கு எடுத்து வந்து நண்பர்களுக்கு மத்தியில் பெரும்பாலும் இலவசமாக விநியோகிப்பதும் பத்மநாப அய்யரவர்கள் அடிக்கடி செய்தவையாம்.
„நல்லன எழுதுவதல்ல, அவற்றை மக்களிடம் கொண்டுசென்று கொடுப்பதுவே மகத்தான இலக்கிய சேவை“ என்ற பொருள்பட விபுலானந்த அடிகள் ஒரு கட்டுரையில் எழுதுகின்றார். இவ்வாறான சிறுதுளிச் சேவைகள் மூலம் இலங்கையின் பல எழுத்தாளர்களின் பெயர்கள், அவர்களது ஆக்கங்கள் இந்தியாவில் இருக்கின்ற சமகாலப் படைப்பாளிகளுக்கு அறிமுகமாயின, தெரியவந்தன. அவர்கள் எழுத்துக்களைத் தேடிப்படிக்கும் ஆர்வத்தைத் தூண்டின. அது மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் வாசிப்பின் தேர்வு மற்றும் தரம் பற்றிய பிரேமையும் இந்திய தமிழ் எழுத்தார்களுக்கிடையில் உருவாகியது. இப்படியாக இன்னும் பல்வேறு வகைகளில் ஒரு இலக்கிய நிலையமாக அறியப்பட்ட பத்மநாப அய்யரை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. அந்த அண்டையும் எனக்குக் கிடைக்கவில்லை. அவரது பெயரரையும் அறிய வாய்ப்பிருக்கவில்லை. அதற்கும் காரணமுண்டு. அப்பொழுதெல்லாம் கிராமங்கள் , அதற்குப் பின்னான பொழுதுகளைப் போல் ஒரு கடுகதியில் நகரப்போலி மயமாக்கப் படவில்லை. தமிழ் இலக்கியம் இலங்கையின் பண்டிதர்கள், தமிழாசிரியர்களிடமிருந்து அரசாங்க எழுதுவிஞைஞர்களிடமும் முற்போக்கு இளைஞர்களுக்கும் கைமாறிக் கொண்டிருந்து. அத்தோடு இதனை இப்படிப் பொதுமைப் படுத்தமுடியாதபடி பெரிய கல்லூரிகளும் அக் கல்லூரிகள் சார்ந்து புகழடைந்த நகரங்களும் தான் இலக்கிய வரலாற்றின் தரவுகளாக இருந்திருக்கின்றன. நகரமையச் சமாச்சாரம் தான் இலக்கியமாகவும் காணப்பட்டது. குக்கிராமங்களுக்குள் இந்த இலக்கிய வாடைகள் சென்றடையவில்லை. ஈழநாடு என்ற தினசரி வடமாகாணத்தில் கணிசமான அளவிலும், வீரகேசரி, தினகரன் போன்றவை முழு இலங்கையளவிலும் விற்பனையாகியது. நான் வாழ்ந்த கிராமத்திலும் மூன்று அல்லது நான்கு பேர் தினசரி பத்திரிகைச் சந்தாதாரராக இருந்திருக்கின்றனர். சுதந்திரன் என்ற தமிழரசுக் கட்சியின் பத்திரிகை வாரந்தோறும் அஞ்சல் மூலம் இரண்டொருவருக்குக் கிடைத்ததையும் அறிவேன். மேலும் கிராமப் பள்ளிக்கூட வாத்தியார்களுக்கு இந்த இலக்கிய விடயமெல்லாம் தெரியாத விசயமாக இருந்திருக்கிறது. நாங்கள் பலகாலம் வரை பன்னிரு திருமுறைகள், கம்பராமாயணம்-சுந்தரகாண்டம், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களின் இலக்கியவழி போன்றவற்றைக்க் கற்றுக்கொண்டிருந்தோம். இலக்கியத்தின் புதிய வரவுகள்; புதிய பெயர்கள் எங்களை அணுகவில்லை. எழுபதுகளின் ஆரம்பத்தில் தமிழ் பாடநூல்கள் பழந் தமிழ் இலக்கியத்தையும் புதிய இலக்கியங்களையும் சம அளவில் கொண்டிருந்தன. மகாகவி; மாயகோவ்ஸ்கி போன்ற பெயர்கள் பள்ளிச் சிறுவருக்கும் தெரியவந்தது.
பத்மநாப ஐயர் மத்திய இலங்கையின் மாத்தளையில் இருந்து பின் வட இலங்கை யாழ்ப்பாணம் தின்னவேலிப் பகுதியில் குடும்பத்துடன் வசித்திருந்திருக்கின்றார். அப்போதெல்லாம் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ; இலக்கிய ஆக்கதாரர்கள் பலர் இவருக்கு அயலவர்களாக இருந்திருக்கின்றனர். என்ன அவசரத்திற்கு வந்திருக்கின்றோம்…மனைவி என்ன அலுவல் சொல்லி விட்டாள்’ என்பதெல்லாம் மறந்து கலை இலக்கியக் காரரின் வீடுகளில் பலமணி நேரம் இலக்கிய „வாய் பார்த்திருந்த“ இந்த பத்மநாபன் பற்றி நண்பர்கள் கூறும் போது பத்மநாபஅய்யர் மீதும் அவரது துணைவி, காலஞ்சென்ற சொர்ணவல்லி அவர்கள் மீதும் பரிதாபம் தோன்றும். தொண்ணூறுகளில் பத்மநாபஅய்யர் இங்கிலாந்து வந்து விட்டார். இலண்டனில் நான் அவரைச் சந்தித்த போது ஆங்கிலத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களில் நூற்றுக்கும் அதிகமாகத் தேட்டித் திரட்டி யாருக்குக் கொடுக்கலாம் என்று வாடியபடி காத்திருந்தார். அவருடைய அரசியல் சார்புநிலையில் உடன்படாத போதும் அவரது நட்புப் பெரியது.

1 Kommentare: