மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Monday, March 13, 2006


நாம் தோற்றும் போகலாம்...

ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும் எழுத்தாளருமான தோழர் சி. புஸ்பராஜா அவர்களின் மரணம் எங்களை உலுக்கி விட்டது. இலங்கைத் தமிழர்கள் மீதான அடக்கு முறைக்கெதிராகத் துணிந்தெழுந்த அன்றைய இளைஞர்களில் முக்கியமானவர் தோழர் புஸ்பராஜா அவர்கள். அடக்குமுறை எவ்வுரு எடுத்த போதும் அதனை எதிர்த்து நிற்கும் போராளியாகவே புஸ்பராஜா என்றும் இருந்துள்ளார் என்பதை இன்று நாம் எண்ணிப் பார்க்கிறோம். “ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்” என்ற அவரது அனுபவ நூலாக்கம் எமது போராட்டத்தை எழுதிய நூல்களில் முதன்மையானதாக இன்று ஆகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் கவிதை, விமர்சனம், சிறுகதை, பேச்சு என்று அவரது ஆக்க முயற்சிகளின் தளம் புகலிடத்தில் விரிந்து அகன்றதாக இருக்கிறது. மேற்படி படைப்பாக்கங்கள் எம் சமூகத்தில் நிலவுகின்ற சாதியக் கொடுமைகளுக்கும் ஏனைய சமூக அநீதிகளுக்கும் எதிரான உள்ளடக்கங்களையே கொண்டிருக்கின்றன.

இலக்கியச் சந்திப்பில் புஸ்பராஜா அவர்களின் பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியது. சபாலிங்கம் அவர்கள் பாரிஸில் கொல்லப்பட்டபோது அஞ்சி ஒளிந்துவிடாமல் அதை இறுதிவரை கண்டித்தும் எதிர்த்தும் செயற்பட்டமை புஸ்பராஜாவின் துணிச்சலை எமக்கு என்றும் காட்டி நின்றது. “தோற்றுத்தான் போவோமா” என்ற சமகால அரசியல் இலக்கிய விடயங்களைத் தன்னகத்தே கொண்ட சபாலிங்கம் நண்பர்கள் வட்டம் சார்பாக வெளியிடப்பட்ட தொகுப்புநூல் இவரது ஓய்ந்துவிடாத தன்மையை வெளிக் காட்டியது.

நீண்ட காலம் பாரிஸில் வசித்த தோழர் புஸ்பராஜா அவர்கள் எந்த அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிந்து போகாது அரசியல் இலக்கிய கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்நின்று செயற்பட்டவர். மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க முடியாத சூழல் புகலிடத்தில் நிலவிய காலங்களில் எல்லாம் எல்லாக் கருத்துக்களையும் சொல்வதற்கு ஒரு இடம் வேண்டும் என்பதில் அவன் எம்மில் பலரைப் போல் பலமற்றவர்களின் பலமாக இருந்து செயற்பட்டவன்.


இவரது மரணம் விட்டுச் சென்றிருக்கும் இட்டுநிரப்ப முடியாத இடைவெளி எங்களால் உணரப்படுகிறது. துயருறுகின்ற அவரது துணை மீரா, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள், ஆத்ம நண்பர்கள் அனைவரோடும் எங்கள் ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்கின்றோம்.


Paris,10.03.2006 நண்பர்கள் வட்டம் - பிரான்ஸ்,இலக்கியச் சந்திப்பு நண்பர்கள்

0 Kommentare:

Post a Comment