மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Monday, May 29, 2006

„றஞ்சினி கவிதைகள்“ நூல் வெளியீட்டு விழா


„றஞ்சினி கவிதைகள்“ நூல் வெளியீட்டு விழா பல இலக்கிய ஆக்கதாரர்களை ஆர்வலர்களை, நண்பர்களை 29.05.2006, ஞாயிறு அன்று பெர்லின்-சூனபெர்க் வட்டாரத்தில் Kolonnen Strasse 43 இல் இருக்கும் இலங்கை இந்திய உணவகமான "மதுரா" வில் ஒன்றாகச் சந்திக்க வைத்தது. அத்தோடு பல பார்வை விமர்சனங்கள், பரிமாணங்கள் நிகழ்வை கலகலப்பாக மாற்றின. கலந்து கொண்டவர்கள் அனைவருமே உற்சாகமாக உரையாடலில் பங்கேற்றுக் கொண்டமை, இன்னும் நிகழ்வுகள் ஆயிரம் இங்கே நடத்தலாம் என்று நம்பிக்கை கொள்ளவைத்தது. விழாவின் தொடக்கத்தில் தலைமை தாங்கிய ராகவன் இலங்கையில் சண்டைக்காலத்திலும் சமாதான காலத்திலும் மரித்தோருக்கான இரு நிமிட மௌன அஞ்சலிக்கு எல்லோரும் எழுந்து நிற்க வேண்டிக்கொண்டவர், எழுந்து நின்றவாறு ஒரு பத்து நிமிடங்கள் குட்டித் தூக்கம் ஒன்றைப் போட்டுவிட்டார். இந்தா முடிகிறது, இந்தா முடிகிறது என்றும் எப்படா முடியும் இந்த மௌன அஞ்சலி என்றும் நாங்களும் ஒரு ஐந்து நிமிடமாகிலும் அமைதி இழந்து தவித்தோம். பொறுமையிழந்த நான்தான் இப்போது எல்லோரும் உட்காரலாம் என்று உரத்துச் சொன்னேன்.


இலங்கைக்குத் தன்னை நாடுகடத்தக் கூடாது என்று கோரித் தடுப்புக் காவலில் சாகும் வரை உண்ணாவிரதமிருந்து, அதனால் கேட்டல் புலன் பாதிக்கப்பட்டிருக்கும் சிவா என்கிற சிவபாதசுந்தரம் இப்போது ஜெர்மன் நாடகக் குழு ஒன்றில் அவைக்கு ஆற்றும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதனால் அவரது தொடக்கப் பேச்சு ஒரு அவை நிகழ்த்தலாகவே மாறிப்போனது. பெண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் அடுத்து உமா அவர்களும் றஜீன்குமார் மற்றும் சுசீந்திரன் ஆகியோரும் பல நோக்கு நிலைகளில் நின்று தங்கள் பேச்சினூடு சபையோரைக் கவர்ந்தனர். அப்போது தான் பெற்றுக் கொண்ட „றஞ்சினி கவிதைகள்“ நூலைப் பற்றிய தங்கள் அபிப்பிராயங்களை நடன ஆசிரியை வினோதா தம்பிப்பிள்ளை தொடக்கி வைத்தார். சபையின் மௌனம் கலைந்து ஜசிந்தா, இன்பா, ஈசன்,பரா என்று பலரும் கவிதைகளின் புரிதலின் தங்கள் பிரதிபலிப்புக்களை மனம் திறந்தனர். இடைவேளை, இரவுணவு, கலை நிகழ்ச்சிகள் என்று இந்த ஒன்றுகூடல் உற்சாகத்திலும் மகிழ்விலும் ஆனந்தம் கொட்டியது. தாருணி, திருமகள், சலட் மேரி, வினோதா, ஜசிந்தா, நந்தா, சர்மா எல்லோரும் இவ்வளவு நன்றாகப் பாடுகிறார்களே என்று என்னையும் என் தொண்டையையும் நினைத்து (இந்தத் தாழ்வுச் சிக்கலுக்கு ஏதேனும் மருந்து உண்டா?)கவலைப்பட்டேன்.


பெண்ணியம் அறிந்து பல் நிலைகளில் தம் வாழ்வை எதிர்கொள்ளும் பெண்கள் மீது வீசப்படும் கற்களை படிக்கற்களாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை உமா மிக நன்றாகச் சொன்னதோடு றஞ்சினி கவிதைகளின் பெண்ணிலைவாதக் கூறுகளின் எளிமை, தீவிரம், அனுபவ தீட்சண்யம் என்பவற்றை மாயா ஆஞ்ஜலோ, வெர்ஜீனியா வொல்வ் ஆகியோரின் கவிதை, கூற்றுக்களின் துணையோடு முன்வைத்தார். „ „கூண்டுப் பறவை ஏன் பாடுகின்றது என்பதை நான் அறிவேன்“ (I know why the caged bird sings) என்ற மாயா ஆஞ்ஜலோவின் புத்தக வரிகளும் றஞ்சினியின் கவிதைகளூடு வந்து சேரும் அனுபங்களின் சமாந்தரப் போக்கினையும் சொல்லியதோடு தான் விரும்பும் கவிதைகள் சிலவற்றை வாசித்தும் காட்டினார். ஈழத்தில் பெண் எழுத்தின் புதிய வரவுகளும், சிவரமணி, செல்வி, மைத்திரேயி போன்ற கவிஞர்கள் தம் தாயை நோக்கி எழுதியவற்றையும் „ நீ ஏன் இப்படி ஆனாய்“ என்ற கவிதையில் றஞ்சினி அவர்கள் சொன்தையும் ஒப்பீடு செய்து ஆசிய சமூகங்களில் தாய்-மகள் உறவின் பெண்ணிய வலுவினையும் அதன் பெறுதியையும் குறிப்பிட்டார். நூலாசிரியர் றஞ்சினி அவர்களும் சுசீந்திரனும் கவிதைகளை சிலவற்றை வாசித்த போது, ஏற்படுகின்ற உணர்வின் அனுபவம் தனித்துவமானது என்று தெரியவந்தது. புரிதலின் மந்திரம் தெரிந்தது போலும் தோன்றியது.
„(…) ஆகா என்ன சுகம், என்ன சுகம் அப்பனாகுதல் என்ன சுகம்(…)“ என்ற சிறகு முளைத்த கவிதை வரிகளின் மூலம் அறியப் பெற்ற றஜீன்குமார் („இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துப் புறநானூறு“ ) அவர்களின் விமர்சன உரை வரலாற்றின் பரப்பில் தமிழில் பெண் எழுத்துக்களின் தனித்துவத்தையும் தடங்கல்களையும் எடுத்துச் சொல்லியது.சல்மா, மாலதிமைத்திரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்றவர்களின் எழுத்தியக்கம் பதிக்கின்ற தடங்கள் பற்றியெல்லாம் பேசினார். ஒரு விமர்சனத்துக்கான முன்வரைவு என்று தன் குறிப்புக்களைக் குறிப்பிடுகிறார் றஜீன்குமார். நூலின் முதற் பிரதிகள் தேவகாந்த சர்மா, மல்லிகா, பரா,தாருணியா ஆகியோருக்கு வழங்கப்பட்டன. இக் கவிதை நூல் அழகாகவும் கைக்கடக்கமானதாகவும் செய்யப்பட்டுள்ளதால் வந்தவர்கள் அனைவருமே பெற்றுக்கொண்டனர்.


„கனகி புராணம்“ எழுதிய நட்டுவச் சுப்யையா என்று எழுதி வைக்கப்பட்டுள்ள சுப்பையாப்புலவர் அவர்களுக்கு ஈழத்தின் வரலாற்றெழுத்தியல் செய்த வஞ்சனை; புதுக்கவிதையின் வரலாறு, கவிதைகளின் இன்றைய சமூகப் பெறுமானம் என்றவாறாக நகர்ந்தது சுசீந்திரனின் பேச்சு. பெர்லின் வாழ், அறியப்பட்ட இலக்கிய ஆக்கர்கள் ,தீவிரமாக உழைப்பவர்கள்(ஊதிய வேலையில் படு சோம்பேறிகள்) மற்றும் ஆர்வலர்கள் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். கருணாகர மூர்த்தி, தமிழரசன் போன்றவர்களின் தலைகளும் தெரிந்தன. இப்படி நிகழ்வுகள் அடிக்கடி நிகழ வேண்டும் என்ற ஆதங்கத்தோடு நடு ராத்திரியில் மது-ரா விட்டு அவரவர் வீடுகளுக்கு வந்து சேர்ந்தோம். வாழ்க கவிஞர்கள்!!

0 Kommentare:

Post a Comment