மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Tuesday, June 13, 2006

வாசுதேவனின் கவிதைத் தொகுப்புவாசுதேவனின் கவிதைத் தொகுப்பு:


தொலைவில்


பாரிஸ் அகிலன் என்ற புனைபெயரில் சில காலம் தொடர்ச்சியாகக் கவிதைகள் எழுதியர் வாசுதேவன். வாசுதேவனின் கவிதை உலகம் தத்துவ நதியில் கால் நனைத்துச் செல்வது. இன்றைய தன்னுணர்வுக் கவிதைகளின் கழிவிரக்கம், பச்சாதாபம், முரண்தொடைத் துயரங்கள் போன்ற சமாச்சாரங்கள் இவரது கவிதைகளில் இல்லை என்றே சொல்லலாம்.


உலக இலக்கியப் பரப்பில் சில தேர்தெடுத்த படைப்புக்களின் உட்பொதிந்த சுருக்கம், காட்சிகள் மற்றும் அதில் வருகின்ற பாத்திரங்களினது பெயர்கள் போன்றவை பொருத்தமான தருணங்களில் தவிர்க்கமுடியாத கூறாகி வாசுதேவனின் கவிதைகளில் இடம்பிடிக்கின்றன. இத் தேர்வு வெறும் தற்செயலானதும் அல்ல. கவர்சிக்காக அணியப்பட்டவையுமல்ல. மாறாக இக் குறிப்பான்கள் வாசுதேவனின் கவிதை உலகின் தத்துவநோக்கின் திசைவழியினை எமக்குச் சுட்டிநிற்கின்றன. சாமுவேல் பெக்கட்டின் „கோடோவிற்காகக் காத்திருத்தல்“; பிரீட்றிஷ் நீட்சேயின் „அவ்வாறு உரைத்தான் „ற்ஸரதுஸ்ட்றா“; ஹேர்மான் ஹெஸ்ஸவின் „சித்தார்த்தா“ ; காவ்காவின் „உருமாற்றம்“ பெறுகின்ற கரப்பான் பூச்சி; ஹெம்மிங்வேயின் „கிழவனும் கடலும்“ புதினத்தில் வருகின்ற சந்தியாகோ ; மு. தளயசிங்கத்தின் „மெய்யுள்“; „போர்ப்பறை“; Claud Debussy அவர்களின் நிலவொளி என்ற பியானோ இசை; வொன் கோஃ (-Van Gogh-வன்கோ) இன் ஓவியத்தில் இருந்து புறப்படும் காகங்கள் ; கள்ளுண்டு Ragge இசைக்கும் மொஸாட் என்றெல்லாம் கவிதைகளுக்குள் விரவி, கவிதைகளின் நிறைவான புரிதல் விரும்பின், எமது முன்னறிவைக் கேட்டுநிற்கின்றன.
சாமுவேல் பெக்கெட் அவர்களின் „கோடோவிற்காக் காத்திருத்தல்“ இரண்டாம் உலகமகா யுத்ததிற்கு பின்னர் எழுந்த முக்கிய நாடகங்களில் ஒன்று. எதற்காக நாம் காத்திருக்கின்றோம் என்று எமக்குத் தெரியாத போதும் நாம் காத்துக் கிடக்கின்றோம். காத்திருப்பு பயனுள்ளதுதானா என்பதற்கான விடையெதுவுமின்றியே காத்திருப்புக்கு நாம் தயாராகிவிடுகின்றோம். அந்த நாடகத்தில் எப்போதென்றும் இல்லாது, எங்கேயென்றுமில்லாது ஒரு தேடுவோரற்ற ஒரு வீதியோர மரநிழலில் வீடுவாசலற்ற இரண்டு கோமாளிகள் கோடோவுக்காகக் காத்திருக்கின்றனர். கோடோ வரவேண்டியது அந்த நாள் தானா, யார் இந்தக் கோடோ, அவன் எப்போதாவது வரக்கூடுமா என்பதெதுவும் தெரியாமலே இருவரும் காத்திருக்கின்றனர். இந்த நாடகம் 1950 களில் முதன் முதலில் மேடையேற்றப்பட்டபோது, இது எதனைப் பூடமாகச் சொல்கிறது என்பதில் புத்தி ஜீவிகளிடத்தில் மிகுந்த ஆர்வங் காட்டப்பட்டது. நாடகாசிரியர் பெக்கட் பொதுவாகவே எந்த அபிப்பிராயமும் சொல்லாதவர், பேட்டிகளையே விரும்பாதவர். இதற்குள் எதுவுமேயில்லை என்று சொல்லிவிட்டார். ஆனாலும் விமர்சகர்கள் இதக் காத்திருப்பவர்களாக உருவகப் படுத்துவது பிரான்சின் இடதுசாரிக் கட்சிகளே என்றனர். வாசுதேவனின் கவிதையிலும்
„…ஒரு தலை வளர்த்தவனுடனும்,
இன்னொரு தாடி வைத்தவனுடனும்
கரைகளில் நின்று ஊரிகளைச்
சேகரிப்பதில் களைத்துவிட்டேன்
அவர்கள் கூட இப்போது
கோட்டோவிற்காகக் காத்திருக்கிறாகள்.“

என்று எழுதுவதால் இது வாசுதேவனின், தற்கால அரசியல் பற்றிய தன்நிலை விளக்கமோ என்றும் ஊகிக்கப்படுவதற்கான தரவுகள் நிறையபவே காணப்படுகின்றன.

எவடம் ? எவடம்? புளியடி! புளியடி! என்பது சிறார்களின் விளையாட்டு. ஒரு பிள்ளை இரண்டு கைகளிலும் மண்ணை அள்ளி வைத்துக் கொண்டு கண்களை மூடவேண்டும். கைகளில் மண் உள்ள அந்தப் பிள்ளையின் மூடிய கண்களை இன்னொரு பிள்ளை இறுகப் பொத்தியவாறே திசைமாற்றித் திசைமாற்றிக் கொண்டலைந்தவாறே ஒரு இடத்தில் அந்தக் கையளவு மண்கும்பியைக் கீழே வைக்கச் சொல்லுவர். மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு கொண்டுவந்து அந்தப் பிள்ளையின் கண்களை விடுவிப்பர். இப்போது மண்கும்பி வைக்கப் பட்ட இடத்தை அந்தப் பிள்ளை கண்டுபிடிக்க வேண்டும். மண் கும்பியைக் கொண்டு அலைக்கழிக்கும் போது அந்தப் பிள்ளை எவடம்? எவடம்? என்று கேட்கும். புளியடி! புளியடி! என்று பதில் சொல்வார்கள் மற்றைய பிளைகள். இந்த விளையாட்டில் வருகின்ற புளியடி என்பது ஒரு போக்குக் காட்டுவதற்காகச் சொல்லப்படலாம். அந்தப் புளியடிக்கு எந்த அர்த்தமும் இல்லை.
எவடம் ? எவடம்? புளியடி! புளியடி! என்ற கவிதையுடன் ஆரம்பிக்கின்றது „தொலைவில்“ என்ற வாசுதேவனின் கவிதை தொகுப்பு. எவடம், எவடம் என்றே வட்டார வழக்கில் இது ஓசைபெறும். ஆனால் கவிதையில் இது எவ்விடம், எவ்விடம் என்று மாறும் போது குறை விழுகிறது. ஆனாலும் ஒரு சொல்; ஒரு கேள்வியின் பதில், தன் கருத்திழந்து தன் குறியீடிழந்து இடப்பெயர்வின் இன்றைய கொடூர யதார்த்தத்தை அறைகின்றது.

„…கண்மூடிக் கொண்டே நாம் கையிருந்த மண்ணிழந்தோம்…
புலம்பெயர் இருளில் தடம் இழந் திழந்து தவிப்பதுவன்றி…;
திக்கெல்லாம் பரந்து தொலைவதைத் தவிர…
கண்மூடி எங்கோ கைவிட்ட மண்ணைக்
கண்டடையோம் இனி…
போக்கிடம் நமக்கினிப் புளியடியே…“

போன்றவை முதற் கவிதையின் இடையிடை வரிகள்.

அனேக கவிதைகள் கருத்தாடலின் உப விளைவுகள் போலவும் அதன் பதிவுகள் போலவுங்கூட வாசகர்களால் உள்வாங்கப்படலாம்.

தத்துவவியலின் மீதான நாட்டமும் ஐரோப்பிய இலக்கியங்களை பிரெஞ்சு மொழியூடாக கசடறக் கற்றலின் முயற்சியும் இவரின் கவிதைகளுக்கு பெருமளவு ஊட்டத்தை நல்கியிருக்கின்றன. குறிப்பாக நீட்சேயின் கவிதைகளிலும் ஆக்கங்களிலும் வாசுதேவனின் நிறைந்த ஈடுபாடு மொழியின் செழுமைக்கு உரமூட்டியிருக்கின்றது. „Also sprach Zarathustra“ என்பது நீட்சேயின் „அதிமானுடன்“ பற்றிய எடுகோளினை வலியுறுத்த எழுந்த இலக்கியம். ஜெர்மன் தத்துவ ஞானி நீட்சே அவர்களின் தத்துவப் புத்தகம். கவித்துவத்தின் கொடுமுடி. கிறிஸ்தவ மதத்தைக் காட்டி மனிதகுலத்திற்குக் கருவில் இருந்தே ஊட்டிய அடக்கமும் பணிவும் அதன் வளர்ச்சியைக் குறுக்கிவிட்டது. இதனை நொருக்கிவிட நீட்சேயிடம் இருந்து புறப்பட்டுவருகிறான் ஸரத்தூஸ்த்ரா. உண்மையில் ஸரத்தூஸ்த்ரா என்ற ஒரு பாரசீகத் தீர்க்கதரிசி ஒருவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கிறார். தத்துவஞானி நீட்சே கூர்ப்பின் அடுத்தகட்ட மனிதனான அதிமானுடனின் வரவிற்கு கட்டியம் கூறும் தன் பிரசங்கியாக ஸரத்தூஸ்த்ராவை இலக்கியத்தில் உயிர்ப்பித்தார்.

ஸரத்தூஸ்த்ரா 10 வருட நாடோடிவாழ்விற்குப் பின் தான் பெற்றுக் கொண்ட அறிவினை மக்களுக்கிடையில் பகிர்ந்து கொள்வதற்கு மலையில் இருந்து கிராமம் நோக்கி இறங்கி வருகின்றான்.
கயிற்றில் நடக்கும் சாகச வித்தைகாணக் குழுமியிருந்த மக்களுக்கு மத்தியில் அவன் தனது „அதிமானுடனின் வருகை“ பற்றிப் பிரசங்கிக்கின்றான். கிராமத்து மக்களின் கவனத்தை அவனால் ஈர்க்கமுடியவில்லை. அவனைக் கேட்க மக்கள் தயாரில்லை. இதனால் அவன் மனிதர்களுக்கு மத்தியில் இனி இது பற்றிப் பேசுவதில்லை என்ற முடிவோடு மீண்டும் பயணப்படுகின்றான். மீண்டொருதடவை அந்தக் களைக் கூத்தாடியின் பிணத்துடன் அலைகிறான். „அவ்வாறுரைத்தான் ஸரத்தூஸ்த்ரா“ என்ற அந்த நீட்சேயின் நன்கு நூல்களும் கவித்துவத்தின் உச்சங்கள். அவற்றில் தேவாலயம்; அரசு; விஞ்ஞானம், கலை, எனும் வாழ்வின் அனைத்து அம்சங்களும் விமர்சனத்துக்குள்ளாகின்றன.
நீட்சேயின் மொழியின் ஆழத்தை அவரது ஆக்கங்களில் கண்டு தொடர்ந்து சிலாகிப்பவர் வாசுதேவன். அதனால் கவிதைகள் எல்லாவற்றிலும் நீட்சேயின் பாதிப்பினைக் காட்டமுடிகிறது.

இடையில் சேர்தவற்றையும் கொண்டு முடிவற்ற பயணம்.
பாதைகள் மனிதர்களிடமிருந்து தேர்வு.
தொலைந்தும் தொலைவு
கருவில் இருந்து கற்பிக்கப் பட்ட
ஆதிச் சோகம்: உயிரை விட்டுப் பிரிக்க முடியவில்லை.
தகரக் கூரையில் பெருமழை…தூக்கம் இல்லை.
வீட்டுப் பாடம் செய்யாது பள்ளி செல்லும் சிறுவன் மனோ நிலை
„…மொழியின் பெருவெளியில் தோல்வி கண்ட பிரக்ஞை…“
வயலில் இறங்காமல் வரப்பில் தடுமாறி நிரந்தரமற்ற எல்லைகளில் அலைவதும் தொலைவதும்..அதையே விரும்புவதுமாய்.
இருள் படமுன் வீடு செல்லும் எண்ணம்…தொலைபயணம்
என்ற வரிகள் நீளம் நீட்சேயின் மொழிவலுவைச் ச்ந்திக்க முடிகிறது.

நீட்சேயின் தலைப்பான „அவ்வாறுரைத்தான் ஸரத்தூஸ்த்ரா“ என்ற தலைப்பில்; நீட்சேயின் அதே புனைவடிவில்; தனது சுய வரலற்றினை ஒரு அரைச் சூட்சுமமான அழகிய மொழியில் நீள் கவிதையாகச் சொல்கிறார். அது இந்த நூலில் கம்பீரமாக எழுந்து நிற்கின்றது. நீட்சேயின் ஸரத்தூஸ்த்ராவின் வார்த்தைப் படிமங்களுடன்.

„யாதும் ஊரல்ல யாவருங் கேளீர்“ என்ற இன்னொரு கவிதையிலும்

„…ஊரற்றவர்களே, எவ்வூரும் உங்கள் ஊரல்ல
நீங்கள் ஊரற்றவர்கள் அவ்வளவுதான்…“
„…உங்களுக்கு ஊரிருந்தால் மட்டும் உரையுங்கள்
யாதும் ஊரென்றும் யாவருங் கேளிரென்றும்…“

இக் கவிதையிலும் இன்னும் ஒரு சில கவிதைகளிலும் புகலிட இலக்கியங்களுக்கே உரிய சில அடிப்படைப் பண்புகளைக் காணமுடிகின்றது. அ-காலம்; அ-தேசம்; அ-ஊர் அ-கதி போன்றவை மனிதத்திடம் நிகழ்த்தும் தாற்பரியங்களின் வெளிப்பாட்டுகள் அவை.

தொலைவில் என்ற கவிதையில்
தொலைவில் சத்தமின்றி உடைந்து நொருங்கிய யதார்த்தத்தின் இன்னமும் மிதக்கும் துண்டுகள் போல்…
பட்டுப்போன மரமொன்றின் கூடு போல்…
வேம்பு, பூவரசு வேங்கை, கிணறு கடதாசிப்பூ, சிதைந்தகதியால் வேலி இன்னமும் பயணப் பொதிக்குள்…

என்ற வாசகங்களைக் காணும் போது நமது சங்க இலக்கிய
„…அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றில்…“

என்ற விழுதூன்றிய வாழ்வு தொலைத்து வேரோடு கிழம்பிய மக்கள் அற்ற அணில் ஆடும் முற்றங்களும்,
வேதாளஞ் சேர்ந்து வெள்ளெருக்குப் பூத்து பாதாள மூலிபடர்ந்து கிடக்கின்ற வளவுகளும் மற்றும்
காற்றுக்கு வந்த சோகத்தில் சு வில்வரத்தினத்தின்
உயிர்ப்பிழந்து விறைத்த கட்டையெனக் கிடக்கின்ற குரலிழந்த கிராமத்துக் காட்சிகளும் எம் கண்முன்னே வருகின்றன.
(தொடரும்)

3 Kommentare:

 1. பொத்தக விமர்சனம் - சுகன்
  வண்ணான் குளத்தைத் துறந்து...

  தொலைவில்

  கவிதைகள்

  வாசுதேவன்

  வெளியீடு:காலச்சுவடு-நாகர்கோவில்-இந்தியா  சிறிது குற்றவுணர்ச்சியோடு அன்றேல் குற்றவுணர்ச்சி கொள்வதான பாவனையோடும் மாய்மாலத்தோடும் புகலிடத்தின் இலக்கிய வெளியில் அலைந்துழலும் வெள்ளாள வெள்ளைப் பிரதிகளிற்கு நம்மிடையே பஞ்சமில்லை.
  'புகலிடத்தின் புலவர் பெருமக்களிடம் விஞ்சி நிற்பது கவிமனமா? சாதிமனமா?' என ஓர் வழக்காடு மன்றமோ பட்டிமன்றமோ ஏற்பின் வழக்குரைஞர்களும் நீதிமான்களும் வெள்ளாளர்களாயிருக்குமிடத்து நியாயத் தீர்ப்பிற்குமிடமில்லை.

  நீங்கள் புலம் பெயர்ந்து வந்து இருபது, முப்பது வருடமானாலென்ன முப்பது, நாற்பது வருடமானாலெனன உங்கள் நினைவடுக்கில் வண்ணான் குளம், பறையனாலங்குளம், கரும்பனை,

  சீவற்தொழில், கள்ளு, கோயிற்தேர், பள்ளிக்கூடம், கொள்ளிக்குடம், முதலாவது இரண்டாவது மூன்றாவது துளைகள், கொத்துவதற்குக் குடிமகன் இவற்றை அடுக்கி இடுக்கி விரித்து விருத்தி செய்து கவனமாகப் பெயர்த்து வந்து உங்கள் கவிதைப் பக்கத்தில் விரவிட வேண்டும். மண்மணமும் 'CHANEL 5' சென்ற் மணமும் உங்கள் கவிதைக்கு வந்து விடும். ஒரு புலம்பெயர்ந்தோர் கவிதையைப் படைத்திடலாம்.

  'மன்னவனும் நீயோ! வளநாடும் உன்னதோ?'

  'பேயரசுசெய்தாற் பிணந்தின்னுஞ் சாத்திரங்கள்'

  போன்ற கவி அறச்சீற்றமெல்லாம் கவனமாகத் தவிர்க்கப்பட்டுத் தொற்று நீக்கப்பட்டு இனியவை இருபது கவிதைகளைத் தொகுத்தீர்களெனில் இரத்தமும் சதையும் சொட்டச் சொட்ட அச்சு அசலான புலம் பெயர்ந்தோர் இலக்கியம் இதோ சுடச் சுடத் தயார்.

  போர் என்றால் என்ன? சமாதானம் என்றால் என்ன? இலக்கியம் என்றால் என்ன? - கலிங்கத்துப்பரணி செயங்கொண்டார் மன்னிக்க, டால்ஸ்டாயும் மன்னிக்க!- 'போர் இலக்கியம்' என்றால் என்ன? புலம் பெயர்வு என்றால் என்ன? புகலிடம் என்றால் என்ன? இப்படியான என்ன என்ன என்னவைகள் எதுவும் குறித்து நீங்கள் கேள்வியெழுப்பக் கூடாது! ஆமெனில், போர் இலக்கியத்தின் தொடர்ச்சியாக நீங்கள் ஏந்தப்படுவீர்கள்... 'இம்போட்டன்' நீங்கள் வண்ணான் குளத்தையும் கொள்ளிக்குடத்தையும் கட்டையில் போகும் வரை மறக்கக் கூடாது. இந்தப் பாட்டையிலே இறுதியாக வந்து சேர்ந்திருக்கிறது - தொலைவில்- வாசுதேவன் கவிதைகள்- கா.சு வெளியீடு.

  நீங்கள் வண்ணானாக இருந்தால் உங்களுக்கு 'வண்ணான் குளம்' என்று பேசவும் எழுதவும் முடியுமா? வருமா? என்று கவிஞோரைப் பார்த்துக் கேட்கக்கூடாது. வண்ணானாக இருந்தாற் கேட்க வேண்டும் போல தோன்றுந்தான், ஆனால் எல்லோரும் தமிழர், இங்கு எல்லோரும் அகதிகள், கறுப்பர் என்று உங்கள் வாய் அடைக்கப்பட்டிருக்கும்.


  ஒரு குளம் வண்ணானுக்கு மட்டுமானதா? எல்லோருக்குமானது தானே என்றோ, வண்ணானிற்கு மட்டுமானதாக ஒதுக்கிவைத்திருப்பதைப் பற்றியோ, சமூகத்தின் கூட்டுச் சாதி மனம் தன்னை மேல் நிறுத்திக் கொள்வதைப் பற்றியோ, ஏன் தலைமுறையாக அத் தொழிலைச் செய்ய வேண்டுமென்றோ நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள்! கோப்பை கழுவ, கக்கூசு கழுவ இங்கு விதிக்கப்பட்டோமே என விதிவிதிர்த்துப் போவீர்கள். அவற்றை இலக்கியமாக்கி எழுதவும் செய்வீர்கள்.

  என் குலமென்ன? கோத்திரமென்ன? ஊர்ப் பெருமையென்ன? இப்படியாக வந்து விழுந்ததே என்று ஊர் அடையாளம் பேசுவீர்கள். ஊரைக் கவனமாகக் குறித்தும் கொள்வீர்கள். நீட்சே (பக்: 69) ஹெர்மன் ஹெஸ்ஸ (பக்:62) டியுபூசி (பக்:36) ஹெமிங்வே (பக்: 32) இவர்களிற்கு மேலும் பிரெஞ்சு இலக்கியப் பரிச்சயமும் தத்துவப் பரிச்சயமும் தர்க்கமும் இருக்கும் உங்களுக்கு. ஆனால் வண்ணான் குளதையும் (பக் :59) கொள்ளிக் குடத்தையும் (பக் :23 ) உங்கள் சாதிய நினைவடுக்கிலிருந்து அகற்றக்கூடாது. இலக்கிய வெளியில் வாசிப்பிற்காக வரும் தலித்துக்களை மிரட்டுவதற்க்கும் விரட்டுவதற்கும் இரண்டு சொற்கள் போதும்... வேண்டாம் ஒரு சொல்லே போதும்.அது வண்ணான் குளம்.

  சுகன் 15.06.2006

  ReplyDelete
 2. நியாயமான கட்டுடைப்பு!

  இத்தகைய எதிர்க் கேள்விகள்,கருத்துகளின்றி எந்தப் படைப்பும் முன்னேறமுடியாது!எந்தப்படைப்பு எவர் பக்கஞ்சார்ந்து அதிகாரங்களைக் காத்து வருவதென்பதை அப்பட்டமாகக் கட்டுடைக்கும் தங்கள் பார்வையும்,தார்மீக ஆவேசமும் மிகவும் நியாயமானது.

  தமிழ் மனதுக்குள் ஒழிந்திருக்கும் உயர் வேளாளச் சாதியத் தடிப்புக்கு ஒத்திசைவாகக் கட்டியமைக்கப்பட்ட மொழிக்"குறிப்பான்கள்"பற்பல சமயத்துள் மிகவும் ஒப்புவமைக்குக் "கவிஞர்கள் வாய் வழி" வந்து தொலைக்கிறது.இது காலாகாலமாகக் கட்டியொழுப்பப்பட்ட தமிழ்-இந்துத்துவ ஆதிக்கப்பண்பாட்டையொட்டி எழுப்பப்பட்ட அதிகாரமே!இதை உடைக்கும் தங்கள் எழுத்து மிகவும் அவசியமான தேவையே.

  குறிப்புக்கு-பதிவுக்கு நன்றி, சுகன்
  -சிறிரங்கன்

  ReplyDelete
 3. Atputhamaha eluthappatta tholaivil vimarsanatha please thodarungal.


  thanks

  ReplyDelete