மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Sunday, July 02, 2006

பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) அவர்கள் மறைவு!

மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் அவர்கள் காலமாகிவிட்டார் என்று அறிகிறோம். சில வருடங்களுக்கு முன்பு தான் ‚எனது இலக்கியப் பாதி’ என்று சிட்டி அவர்களே குறிப்பிடும், இவருடன் இலக்கிய இரட்டையராக இருந்து, தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும் (1977); தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் (1989) என்ற நூற்களை எழுதிய சோ. சிவபாதசுந்தரம் அவர்களும் லண்டனில் காலமானார்.
சிட்டியின் முதற் சாதனை என்று நாங்கள் இப்போது அறியக்கிடப்பது கு.ப.ரா அவர்களுடன் இணைந்து 1935 இல் எழுதி, பாரதி ஒரு உலக மகா கவி என்று முதலில் நிலைநாட்டிய „கண்ணன் என் கவி“ (1937) என்ற நூலே. பாரதி பற்றி எழுதப்பட்ட நூல்களில் „கண்ணன் என் கவி“ என்ற இந்த நூலும் மற்றும் வ. ரா அவர்களால் எழுதப்பட்ட „மகாகவி பாரதியார்“ என்ற நூலும் மிகவும் பிரமிக்கத் தக்கவை. சிறுகதை ஆசிரியரான சிட்டி அவர்கள் இந்த நூலின் மூலம் தான் சிறந்த ஒப்பியல் முறைத் திறன் ஆய்வாளராக அறியப்பட்டார். இந் நூல் இலங்கை எழுத்தாளர்களுக்கு திறனாய்வின் தொடக்க ஆதர்சமாக இருந்திருக்கின்றது.
சோ. சிவபாதசுந்தரம் அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர். மணிக்கொடி காலத்தின் ஈழத்துச் சஞ்சிகையான ஈழகேசரியின் ஆசிரியராக இருந்தவர். வ. ரா (வ. ராமசாமி அய்யங்கார்) வுக் கூடாகத்தான் சிட்டிக்கும் சிவபாதசுந்தரத்திற்கும் நெருக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு. வ. ரா. பலகாலங்கள் இலங்கையின் தினசரியான வீரகேசரின் ஆசிரியராக இருந்தவர். ஆரம்பத்தில் சோ. சிவபாதசுந்தரம் அவர்களுடனேயே கொழும்பில் ஒன்றாகத் தங்கியிருந்திருக்கின்றார். இந்தியாவில் சிட்டி அவர்களுடனான தனது இலக்கிய முயற்சிகள் பற்றி சோ. சிவபாதசுந்தரம் அவர்கள் ஒரு செவ்வியில் குறிப்பிட்டவைகளப் படித்த ஞாபகம் இருக்கின்றது. எந்தப் பத்திரிகை என்பது இப்போது ஞாபகத்தில் இல்லை.

0 Kommentare:

Post a Comment