மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Tuesday, August 29, 2006

பத்திரிகையாளர் குருபரன் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்
இன்னும் எத்தனை பேர்.......
இன்னும் எத்தனை நாள்.........

இன்று 29.08.06, செவ்வாய்க்கிழமை, அதிகாலை 4.30 மணிக்கு நண்பர் நடராசா குருபரன் அவர்கள் கடத்தப்பட்ட சேதி அறிந்து அதிர்சியடைகிறோம். எண்பதுகளில் சரிநிகரில் கடமையாற்றத் தொடங்கிய காலத்தில் இருந்தே குருபரன் புகலிடத்தின் சமுக இயக்கங்களுடன் தொடர்பினைப் பேணி வந்தார்.அரசுக்கும் புலிகளுக்கும் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போது அவர் சூரியன் எவ்.எம் வானொலியின் சார்பில் ஐரோப்பிய நாடுகளிற்கு வந்தபோதெல்லாம் இலங்கையின் தற்போதைய அரசியல், சமுக, பொருளாதார நிலவரங்கள் மற்றும் அரசினதும் தென்னிலங்கை இனவாத சக்திகளினதும் திரைமறைவுத் திட்டங்கள் போன்றவற்றையெல்லாம் பற்றிக் கலந்துரையாடினார். இப்போது சூரியன் எவ்.எம் வானொலியின் செய்திப்பிரிவு மேலாளராக இருக்கின்றார். விமர்சனம், மாற்றுக் கருத்துக்கும் மதிப்பளித்தல், கொலைக்கலாசார சமுகத்தின் மத்தியிலும் துணிவுடனும் புத்தி சாதுரியத்துடனும் செயலாற்றக் கூடிய ஒரு பத்திரிகையாளனாக அவர் தன்னை வளர்த்துக்கொண்டிருந்தார். இலங்கையின் வடபகுதியில் இருக்கும் இணுவில் என்ற இடத்தினைச் சேர்ந்த இவர், மிக அண்மையில் காலமான பண்டிதர் நடராசா அவர்களின் மகன் ஆவர். மனைவியுடனும் தனது பெண்குழந்தையுடனும் கொழும்பில் வசித்து வந்த குரு இலங்கைச் செய்திகளை அழகிய தமிழில் அச்சொட்டாகக் கொடுப்பதில் ஒரு தேர்ந்த பயிற்சியினைப் பெற்றிருந்தார். சமீபத்தில் சூரியன் குரு என்றே உலகெங்குமுள்ள பரந்த தமிழ்த் தொடர்பூடகக் கேட்போரால் அறியப்பட்டிருந்தார்.
இவரைக் கடத்தியவர்கள், எந்த நிபந்தனையுடனாயினும் இவரை உயிருடன் விடுவிக்குமாறு இலங்கையில் இருக்கும் அனைவரிடமும் உலக அமைப்புக்கள் கோரவேண்டும். அவர்களுடன் நாமும் இணைந்து கொள்ளவேண்டும். அழுக்கு யுத்தம் (dirty war)நடைபெற்றுக் கொண்டிருக்கும் அந்த நாட்டில் மனித இறைமைகளைப் பற்றி இயந்திரங்களுக்குப் புரியவைக்க முடியுமா என்ன!

2 Kommentare:

  1. /இவரைக் கடத்தியவர்கள், எந்த நிபந்தனையுடனாயினும் இவரை உயிருடன் விடுவிக்குமாறு இலங்கையில் இருக்கும் அனைவரிடமும் உலக அமைப்புக்கள் கோரவேண்டும். அவர்களுடன் நாமும் இணைந்து கொள்ளவேண்டும். /
    அதே ஆதங்கமே எனக்கும் :-(((.

    ReplyDelete
  2. அவர் உயிருடன் திரும்பிய சேதி மிக மகிழ்வானது.அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாதீர்கள் என்று எழுத எனக்குத் திராணியும் இல்லை;மனமும் இல்லை.

    ReplyDelete