மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Thursday, August 31, 2006

மறக்கக்கூடாததும் கண்டிக்க வேண்டியதும்:

வண்ணத்துப் பூச்சிகளையும் குண்டு வைத்துக் கொல்லும் குரூரம்...

12.08.2006ம் திகதி சனிக்கிழமை இரவு 9:30 மணியளவில் அரச சமாதான செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் கேதீஸ்வரன் லோகநாதன் அவர்கள் கொழும்பு புறநகர்ப்பகுதி தெஹிவளையில் அவரது வீட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். இலங்கையின் கடந்த 30 வருட வரலாற்றில் ஆயுதத் தமிழர் மற்றும் அரசபடைகளால் இதுவரை கொல்லப்பட்ட அறிவார்ந்தோர் பட்டியலில் இவரது பெயரும் இந்தக் கணம்வரை மட்டும் இறுதியாக இருக்கும். எல்லாக் கொலைகளையும் கண்டித்துக் கண்டித்து கண்ட மிச்சம் ஏதுமில்லை. ஆயினும் 'கொல்லாதே" என்று ஓலமிடுவதைத் தவிர வேறெந்த மார்க்கமும் இருப்பதாகவும் தெரியவில்லை.இருண்டதெல்லாம் பேய்;

சுயசிந்தனை என்பது சீர்குலைவு;

அறிவு என்பது ஆபத்து;

ஒரே தீர்வு கொலை

என்றாகிவிட்ட ஒரு சமூகத்தில் எல்லாவற்றுக்கும் அஞ்சும் சாவுக்குப் பயந்த கோழை மனோவியாதிக் கொலையாளிகள் தலைவர்களாகிவிடும் சமூகத்தில் பிணந்தின்னிக் கோட்பாடுகள்தான் மீதமிருக்கப் போகின்றன. கேதீஸ்வரன் லோகநாதனைச் சுட்டவர்கள் அப்படிச் சுட்டுக் கொன்றிருக்கத் தேவையில்லை. பலமாக ஊதிவிட்டிருந்தால் கீழே விழுந்து விடக் கூடியவர். ஆனால் குரூரங்களையே காட்டிக் காட்டித் தற்கொலைக்கு ஆள் தேடப் பழகிவிட்டவர்களுக்கு வண்ணத்துப்பூச்சியையும் குண்டு வைத்துத்தான் கொல்ல வேண்டும். அப்பொழுதுதான் எங்கும் பரந்த கொலைத் தொடர்புச் சாதனங்கள் அந் நியாயக்குழல் எடுத்து ஊதித் தள்ளலாம்.

உலகவங்கியின் ஆலோசகர் என்று எழுபதுகளின் தொடக்கத்தில் புகழ் பெற்றிருந்த இலங்கை வங்கியின் முன்னாள் மேலாளர் லோகநாதன் அவர்களின் மகனே கேதீஸ்வரன். கேதீஸ் அவர்கள் திம்புவில் நடந்த பேச்சுவார்த்தையின்போது தமிழர்கள் தரப்பில் கலந்து கொண்டவர்களில் ஒருவர். பின்னர் வடகிழக்கு மாகாணசபை அமைக்கப்பட்டபோது நிதியமைச்சராக இருந்தவர். இலங்கை சமூகவிஞ்ஞானிகள் சங்கம் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் போன்றவற்றில் இவரது புலமைத்துவ செயற்பாடுகள் அளப்பரியன. இங்கிலாந்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர் சிறுபான்மை இனங்களின் உரிமை தொடர்பாகப் பல சர்வதேசக் கருத்தரங்குகளில் பங்குபற்றியதுடன் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 1996இல் இவர் எழுதிய "Lost Opportunities" என்ற நூல் மிகக் காத்திரமானதொன்றாகும். இவர் இனப்பிரச்சினை பற்றிய மாதாந்த சஞ்சிகை ஒன்றை ஆங்கிலத்தில் வெளியிட்டதுடன் weekend express என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் சிலகாலம் பணியாற்றினார்.

சிங்கள இனவாதம் அரசியல் செல்லப்பிள்ளையாக தென்னிலங்கையில் வளர்கிறது. தோற்பது அரசாயினும் சாவது தமிழ் அல்லது முஸ்லிமாக இருக்கவேண்டும் என்று அது விரும்புகின்றது. எங்கள் கைகளில்தான் தமிழர்கள் சாகவேண்டும் என்று புலிகள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாரிடமும் எந்தக் கோரிக்கையும் வைப்பதில் நம்பிக்கையில்லை.

மக்களே இனிச் சுயசிந்தனை வேண்டாம்.

அறிவில் இருந்து விலகி ஓடுங்கள்.

வாழவேண்டும் என்ற கனவுகளைப் புதைத்து விடுங்கள்.

பாடையில் விட்டெறியுங்கள்.

நண்பர்கள் வட்டம் பிரான்ஸ்; இலங்கையர் வட்டம்-பெர்லின், ஜெர்மனி; International Network for Srilankan Diaspora, Germany)

13.08.2006

0 Kommentare:

Post a Comment