மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Wednesday, October 11, 2006

தேர்தல் 2006: பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம்

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய பஞ்சாயத்துக்களுக்கான தேர்தல் இந்த அக்டோபர் மாதம் 15ம் திகதி நடைபெறுகின்றது. இத் தொகுதிகள் தலித்துக்களுக்காக ஒதுக்கப் பட்ட பஞ்சாயத்துக்கள் என்பதால் இம்முறையும் தலித் ஒருவரை தேர்தலில் நிற்கவைத்து, ஜெயிக்க வைத்து பின் பதவி விலகச் செய்து விடுவது என்ற வழமையான ஊர்த் திட்டத்தை நிறைவேற்ரப் போகின்றார்கள். இது வரை இந்த நடைமுறையை எந்தக் கொம்பராலும் முறியக்கமுடியவில்லை. இம்முறை இந்திய கம்யூனிஸ்ட்கட்சி(ம/லெ) நிறுத்தியிருக்கின்ற எதிர் வேட்பாளர்கள் சில இடங்களில், குறைந்தது 2 இடங்களிலாவது வெல்லக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. இந்த வேட்பாளர்களை தேர்தல் நடந்து முடியும் வரை பாதுகாப்பாக ஒளித்து வைத்திருக்கின்றார்கள். அத்தோடு உயிராபத்தான தேர்தல் பிரச்சாரம் வேறு செய்யவேண்டியிருக்கின்றது. மனிதநேய எழுத்தாளர்கள், கலைஞர்கள் பிரச்சாரத்தில் உதவுகின்றனர். கிராமத்தின் பிறமலைக் கள்ளர் சமுகத்தின் ஒரு பகுதியினரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து நிற்கின்றனர். இத் தோழர்களுக்கு முடிந்தவர்கள் உதவி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி

ஒருவருடத்திற்கு முந்திய ஒரு கட்டுரையின் இருதிப் பகுதியொன்று கீழே இணைக்கப்பட்டுள்ளது.

*****************************************************************
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம்

-சு.வெங்கடேசன்


பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத்தில் 17 முறை தேர்தல் அறிவிக்கப்பட்டும் ஒரு தலித் பஞ்சாயத்துத் தலைவராக முடியாததற்கான முக்கிய காரணம் அரசின் கண்ணோட்டமே. இங்கு தலைவிரித்தாடும் அப்பட்டமான சாதி வெறியையும், தீண்டாமையையும் சட்டத்தின் துணை கொண்டு இல்லாதொழிக்கும் கடமை அரசுக்கு உண்டு. ஆனால் அரசோ, தேர்தலை அறிவிப்பது, நடத்துவது, பதவி விலகலை ஏற்பது என்கிற எந்திரகதியான நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. சட்டத்தின் தலையீட்டால் தலித்துகள் அதிகாரத்தைப் பெறுவதற்கு துணை நிற்கும் பொறுப்பை அரசு தட்டிக் கழிக்கிறது. இங்கு பஞ்சாயத்துத் தலைவர் பதிவு நிரப்பப்படாமல் இருப்பதென்பது வெறுமனே அக்கிராமங்களின் பிரச்சனையல்ல. பரஸ்பரம் மதித்து இணங்கி வாழும் நாகரீக சமூகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும், ஜனநாயகத்தையும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையையும் சாதி வெறிக்கு கீழ்படுத்தும் போக்காகும். இந்த போக்கிற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கும் எண்ணம் துளி கூட அரசுக்குக் கிடையாது.
அதற்கு காரணம், இந்த பிரச்சனையில் கை வைத்தால் தமது பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கியில் சேதாரம் ஏற்படும் என்பதனால் இருபெரும் திராவிடக்கட்சிகளும் இதில் தலையீடு செய்ய மறுக்கின்றன. இவர்களின் கையில் அரசு இருக்கும் காலங்களில் அரசின் நடவடிக்கை மொண்ணையாக்கப்படுகிறது. இந்த மூன்று பஞ்சாயத்திலும் பஞ்சாயத்து தலைவர் தேர்ந்தெடுக்கப்படாததற்கான பிரதான குற்றவாளியாக மாநில அரசே இருக்கிறது.
இந்த பஞ்சாயத்துக்களில் இருக்கும் குறிப்பிட்ட சிலர் இந்த தேர்தலை நடத்தவிடாமல் செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். வழக்கம் போல் மௌன சாட்சிகளாக உறைந்து கிடப்பவர்களும் உள்ளனர். சாதிவெறி, அதனடிப்படையிலான அரசியல் லாபம், பதவி காண்டிராக்ட் போன்ற பல காரணங்களுக்காக இவர்கள் தலித் ஒருவர் தலைவராக்கப்படுவதற்கு எதிராக உள்ளனர். அரசின் நோக்கம் இவர்களின் நோக்கத்துடன் அடிப்படையில் ஒன்றாக இருப்பதால் இவர்களால் எதையும் துணிந்து செய்ய முடிகிறது. முறையாக தேர்தல் நடைபெற்ற பஞ்சாயத்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட சராசரி நிதியை விட இந்த மூன்று பஞ்சாயத்துகளுக்கும் கூடுதல் நிதியைப் பெற முடிகிறது. இந்த மூன்று பஞ்சாயத்துகளில் இருந்து வெளியூருக்கு வேலைக்குப் போயிருக்கும் தலித்துக்களையெல்லாம், தொடர்ச்சியாகக் கண்காணித்து வாக்காளர்பட்டியலில் இருந்து நீக்க முடிகிறது. பொது வேட்பாளர் என்ற பெயரில் ஒரு தலித்தை தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து இராஜிநாமா செய்ய வைக்க முடிகிறது. அவ்வாறு இராஜிநாமா செய்யும்பொழுது „இந்த பஞ்சாயத்து தலைவர் பதவி தலித்துக்கு ஒதுக்கியது தவறு. அவ்வாறு ஒதுக்கி சமூக அமைதியை கெடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று“, அவரை வைத்தே „சத்தியக் கடதாசி' தாக்கல் செய்ய முடிகிறது.
இவ்வாறு தலித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படாமல் தடுக்கும் பணியில் மும்முரமாக இருக்கும் இந்தப் பகுதியை சேர்ந்த ஒரு அமைப்பு மதுரையின் மையப்பகுதியில் இயங்கும் ஒரு அந்நிய நிறுவன அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளது. அந்த நிறுவனத்துடன் பல தன்னார்வக் குழுக்களும் சில தலித் அமைப்புகளும் தொடர்பு வைத்துள்ளன. அவர்களுக்கு எல்லாமே ‚புராஜெக்ட்' தான். பிரச்சனைகள் கலவரமாக்கப்படுகின்றன. கலவரங்கள் ஆவணமாக்கப்படுகின்றன. ஆவணங்கள் காசாக்கப்படுகின்றன. பெரியாரியத்தையும், மார்க்சீயத்தையும் மட்டைக்கு இரண்டு கீற்றாகப் பிரித்துப் பேசும் சில குத்தகை அறிவுஜீவிகள் இதுபற்றி மட்டும் வாய் திறப்பதேயில்லை. இங்கு உழைக்கும் வர்க்கத்தை சாதியைக் கொண்டு நிரந்தரமாக பிரிக்கும் சதிக்கு, சாதியைக் கடந்த ஒற்றுமையுடன் செயல்படும் தேசத் துரோகிகளை நம்மால் பார்க்க முடிகிறது.
எனவே பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத்திற்குப் பின்னால் சாதி வெறியும், மேலாதிக்கத் திமிரும் இருக்கிறது. அதே சாதீய பார்வையுடன் செயல்படும் அரசு நிறுவனம் இருக்கிறது. திராவிடக் கட்சிகளின் பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கிகளின் அடிப்படையிலான அரசியல் இருக்கிறது. அந்நிய நிறுவனங்களின் கைகளும் இருக்கிறது.
இந்த மொத்த உண்மைகளையும் கணக்கில் கொண்டுதான். இந்த பிரச்சனைக்கு எதிரான போராட்டம் கட்டமைக்கப்பட வேண்டும். இவைகளின் மையப்புள்ளியாக இருக்கிற சாதி வெறிக்கும், தீண்டாமைக் கொடுமைக்கும் எதிரான கருத்துப்பிரச்சாரம் இந்தப் பகுதியில் வலிமையாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். அதே நேரத்தில் சட்டத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட வேண்டும். இந்த இரண்டு சக்கரங்களின் மேலேறித் தான் ஜனநாயகத் தேர் இந்த பகுதிக்குள் நுழைய முடியும். ஆனால் இன்று இந்த இரண்டு பணிகளும் மிகமிக குறைவாகவே நடக்கிறது. தாங்கள் தான் தலித்துகளுக்கு ‚அத்தாரட்டி' என்று ஜம்பம் அடிப்பதை விட்டுவிட்டு செய்ய வேண்டிய பணிகளில் கவனம் செலுத்தினால் அதுதான் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் உண்மையான பங்களிப்பாக இருக்கும்.
இந்த பிரச்சனையையொட்டி ‚உசிலம்பட்டி வட்டாரத்தை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும்' என்று ஒரு சில தலித் அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றியும், பேசியும் வருகின்றன.
இந்த அணுகுமுறை எதிரிகளை வலுப்படுத்தவே கூடுதல் வாய்ப்பினை அளிக்கும். பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம் பஞ்சாயத்துக்கள் இருக்கும் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பட்டி, பொட்டுலுபட்டி என்ற இரண்டு பஞ்சாயத்திலும் தலித் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அங்கே பெரும்பான்மையாக இருப்பவர்கள் பிரமலைக்கள்ளர்கள் தான். அதே போல தத்களுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு ஒன்றிய கவுன்சிலருக்கான தேர்தலும் நடைபெற்றுள்ளது. அதே போன்று உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜோதில் நாயக்கனூர் பஞ்சாயத்தில் தலித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தத்களுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு ஒன்றிய கவுன்சிலருக்கான தேர்தலும் நடைபெற்றுள்ளது.
இந்த உண்மைகளையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்த பகுதி மக்கள் மத்தியில் ஜனநாயக எண்ணத்தையும், சாதி வெறிக்கு எதிரான பிரச்சாரத்தையும், தீண்டாமைக்கு எதிரான கருத்துக்களையும் தொடர்ச்சியாக கொண்டு செல்வதை விட்டுவிட்டு உசிலம்பட்டி வட்டாரத்தை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று சொல்வது என்பது. இந்தப் பகுதியில் இயங்கும் சாதி அமைப்புகளுக்கும், அது சார்ந்த அரசியலுக்கும் அதிர்ஷ்டத்தையே அளிக்கும். அவர்கள் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை மீண்டும் சாதி ரீதியாக ஒருமைப்படுத்திக் கொள்வதற்கு இதைவிட அவர்களுக்கு பயன்படப்போவது எதுவுமில்லை. எனவே இந்த கோரிக்கையானது தீண்டாமை கொடுமை ஒழிக்கப்பட வேண்டும்; உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையல்ல. மாறாக தங்களின் வாக்கு வங்கிகளை அடிப்படையாக கொண்ட கோரிக்கையாகும். தங்களின் வாக்கு வங்கியை சாதீ ரீதியாக ஸ்திரப்படுத்த நினைப்பவர்கள். அதன் இன்னொரு பகுதியாக எதிரியின் வாக்கு வங்கியையும் சாதிய ரீதியாக ஸ்திரப்படுத்துகிறார்கள் இது தங்களின் நலனுக்கான அரசியலே தவிர, ஒடுக்கப்பட்டோர் நலனுக்கான அரசியல் அல்ல.
இந்தப்பகுதியில் சாதிய அரசியல் நடத்தி வந்தவர்களைக் குறி வைத்துப் பிடித்துள்ளனர் இந்துத்துவா வாதிகள். அப்படிப்பட்டவர்களைக் கொண்டு புதியதொரு பார்வட்பிளாக் அமைப்பையே உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் தான். கடந்த ஆண்டு மதுரையில் ஷதிசூல் தீக்ஷா' வை இந்துத்துவா வாதிகள் நடத்தினர். அதில் வந்து பங்கேற்ற பிரவீன் தொகாடியா கோப்பாளையம் என்ற பெயரை தேவர்பாளையம் என்று மாற்ற வேண்டும் இல்லையென்றால் போராட்டத்தில் இறங்குவோம் என்று அறிவித்தார். தொடர்ச்சியாக இந்த அமைப்புக்கு நீதி ஆதாரங்கள் கணக்கின்றி வருவதை இதன் செயல்பாடுகளில் இருந்து பார்க்க முடிகிறது. கவணம்பட்டி தீண்டாமை பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சி தலையிட்ட பொழுது இந்த அமைப்பின் சார்பில் தான் மார்க்சிஸ்ட் கட்சியையும் பி.மோகன்,எம்.பி.யையும் தாக்கி மதுரை நகரமெங்கும் ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஒரு பக்கம் சாதிய அமைப்புகளின் புகலிடமாக உள்ள பகுதியில், இப்பொழுது மதவெறியர்கள் குறிவைத்து உள்ளே நுழைகின்றனர். பிரச்சனைகள் வெவ்வேறு கோணங்களில் மேலும் மேலும் தீவிரமடைகிறது.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காதது போலவே, சமீபத்தில் மதுரை - திருவேடகம் கல்லூரியில் இந்துத்துவா வாதிகள் பயிற்சி முகாம் என்ற பெயரில் துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சியை கொடுத்துள்ளனர். இவர்களின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. ஆனால் ஆயுத தடைச்சட்டத்தின் படியோ, குண்டர் சட்டத்தின் படியோ நடவடிக்கை எடுக்க வேண்டிய இவர்கள் மீது இன்று வரை எந்த சட்டத்தின் படியும் நடவடிக்கை இல்லை, எந்தவித விசாரணையும் இல்லை. அரசு சாதி விசயத்திலும், மத விசயத்திலும் பெரும்பான்மை வாதத்தை தான் கடைபிடிக்கிறது. எனவே சாதீயம், மதவாதம், இவற்றை நிலைநிறுத்தி குளிர்காய்கிற அரசு அதிகாரம் ஆகியவற்றிக்கு எதிரான போராட்டங்களை சகலமுனைகளிலும் கட்டவிழ்ந்து விடுவதே இன்றைய நமது தேவை.
தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக போராடுகிற அதே நேரத்தில் சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. வர்க்க ஒடுக்குமுறையும் சாதீய ஒடுக்குமுறையும் இணைந்து நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய சமூகத்தில் இரண்டுக்கும் எதிரான போராட்டமே மக்கள் விடுதலையை சாத்தியப்படுத்தும். ஒன்றைவிடுத்து ஒன்றை எதிர்ப்பதென்பது, எதிரியை புரிந்து கொள்ளாத பலஹீனத்தின் வெளிப்பாடாகவே முடியும். எனவே உண்மையான மக்கள் விடுதலையை நோக்கி சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக மார்க்சிஸ்ட் கட்சி போராடுகிறது. அதனால்தான் பொருளியல் கோரிக்கைக்காக சகலபகுதி மக்களையும் திரட்டி மார்க்சிஸ்ட் கட்சி போராடுகிறது. அதே நேரத்தில் கள்ளர் சீரமைப்பு துறையை மூடும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டபொழுதும், கள்ளர் மாணவர் விடுதிகளை பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் கொண்டுவர அரசு முயற்சி எடுத்த பொழுதும் அதற்கு எதிரான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது. பாப்பாபட்டி, கீறிப்பட்டி, நாட்டார்மங்கலத்தில் தீண்டாமையை கடைபிடிக்கும் சாதி வெறியர்களை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கட்சி போராடுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த அடிப்படை நிலைபாட்டை புந்து கொள்ôத தத் அமைப்புகளை சேர்ந்த சிலர் தங்களுடைய ஒருபக்க நிலைப்பாட்டை மட்டுமே அளவுகோலாக வைத்து மார்க்சிஸ்டுகளை அளக்க நினைக்கிறார்கள். அதனடிப்படையிலே குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். அளவுகோலையை குறையுடையதாக வைத்தக்கொண்டு அளப்பது அறடிவார்ந்த செயலல்ல என்பதை மட்டும் நாம் சொல்வைப்போம்.
தீண்டாமைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளையும், சாதீயத்துக்கு எதிரான கருத்துப்பிரச்சாரத்தையும் தீவிரமாக்கும் அதே நேரத்தில் நிலம் சார்ந்த கோரிக்கை தான் தலித் மக்களின் விடுதலைக்கான திறவுகோல். எனவே நிலத்தை பகிர்ந்தளிக்கக் கோரும் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைகிற பொழுதுதான் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் முழு அர்த்தம் பெறும். மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும், திபுராவிலும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டதன் மூலம் தீண்டாமைக்கு எதிரான பாய்சல் வேக சமூக முன்னேற்றத்தை இடது சாகளால் இந்திய மண்ணில் நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கிறது. அதே நேரத்தில் சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்ட நடவடிக்கைகளின் மூலம் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப முடிந்திருக்கிறது. இந்த அரசியல் பாதையே சாதீய சக்திகளை வீழ்த்தும், சுயநல சக்திகளை பின்னுக்குத் தள்ளும், தீண்டாமைக்கு எதிரான முழுமையான வெற்றியை நோக்கி சமூகத்தை கொண்டு செல்லும்.

0 Kommentare:

Post a Comment