மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Thursday, April 12, 2007

Amol Pathare : "The Power of Language"


குறும்படம்: "மொழியின் பலம்"

சென்னையில் உள்ள கோதே நிறுவனம் (Goethe Institute)/ மக்ஸ் முல்லர் பவன் (Max Mueller Bhavan) சென்றவருடம் நிகழ்த்திய இந்தியக் குறும்படப் போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 96 குறும்படங்கள் தேர்வுக்காகக் கிடைக்கப் பெற்றன. „மொழி“ என்ற தலைப்பின் கீழ் குறும்படங்கள் வேண்டப்பட்டன. இந்தியக் குடும்பங்களில் பலமொழி வழக்கு; மழலைமொழி; சமிச்சை மொழி; விலங்குகளின் பரிவர்த்தனை; பக்த மொழி என்று நிறைய விடயங்களில் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டிருந்தனவாம். அவற்றுள் மும்பாயைச் சேர்ந்த அமல் பாத்தரே அவர்கள் தயாரித்த „மொழியின் பலம்“ ( „The Power of Language“) என்ற ஒரு நிமிடக் குறும்படத்திற்கு முதற்பரிசு கிடைத்தது. பரிசாக பத்தாயிரம் ரூபா ரொக்கப் பணமும் ஜெர்மனி-பெர்லினில் பெப்ரவரி 2007 இல் நடைபெற்ற பெர்லின் திரைப்படவிழாவில் கலந்து கொள்வதற்கும், 3 மாதங்கள் ஜெர்மனியில் தங்கியிருந்து ஜெர்மன் மொழி பயிலவும் பரிசில் வழங்கப்பட்டது. இம்முறை பெர்லின் திரைப்படவிழாவில் இந்தியாவே கௌரவ விருந்தினர்.
அமல் பாத்தரே அவர்கள் 24 வயது இளைஞர். அவர் தயாரித்த இன்னொரு குறும்படம் இந்தியாவில் வளரிளம் பருவத்தினர் „போர்னோ“ படங்கள் பார்ப்பது பற்றியது.

பெற்றோர் வீட்டில் இல்லாதபோது பையனொருவன் தன் பருவ நண்பர்களுடன் „போர்னோ“ சஞ்சிகை, DVD போன்றவற்றை பார்த்துக் கொண்டிருக்கும் போது இடைநடுவில் வந்து விடுகின்றர் பெற்றோர். கண்டித்த தந்தையும் அதனைப் பையன்களிடமிருந்து பறித்து அவரே மறைவாக பார்த்துக் கொண்டிருக்கும் போது அவரது வயதான தந்தையிடம் (பையனின் பாட்டன்) அசடு வழியவேண்டியிருகின்றது. இப்போது பாட்டனும் ஆவல் கொண்டு போர்னோ திரைப்படத்தை தனியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். கதவிடுக்கின் மறைவில் பையனும் சேர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதை வயசான பாட்டனால் அறிய முடியவில்லை.
இவரது படங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. இது தன் சுய அனுபவம் என்கிறார் நண்பர் அமல். மும்பாயில் சுறாபி என்ற மராட்டிய வானொலியொன்றில் அறிவிப்பாளாராப் பணிபுரிகின்றார். பல நல்ல குறும்படங்களைத் தரும் ஆவலும் முனைப்பும் அமலிடம் இருக்கின்றது.சிறுவயதில் இருந்தே நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றார். மராட்டிய மொழியில் கவிதைகள் எழுதுகின்றார். என்றாவது ஒரு நாள் தான் "ஒஸ்கார்" விருது பெறவேண்டும் என்பது தன் வாழ்வின் கனவாகும் என்றும் சொல்கின்றார்.
„மொழியின் பலம்“ என்ற குறும் படமும் மற்றைய தேர்வுசெய்யப்பட்ட படங்களும் பார்ப்பதற்கு: „மொழியின் பலம்“

0 Kommentare:

Post a Comment