மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Tuesday, April 10, 2007

ஒக்கேனெக்கல்

தர்மபுரியில் இருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் இருக்கின்றது ஒக்கெனெக்கல் என்ற எல்லைக்கிராமம்.
 
மேற்குமலைத் தொடரின் பிரம்மகிரியில் இருந்து ஊற்றெடுத்து வடமேற்கில் இருந்து தென்கிழக்கு நோகி ஓடிவருகின்ற காவேரி ஆறு கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டினுள் புகுந்துகொள்ளும் இடம் தான் இந்த ஒக்கெனெக்கல்.

காவேரி நதி ஒக்கெனெக்கலில் ஒரு பிரமாண்டமான பாறைச் சமவெளியில் இளவேகத்தில் நகர்ந்து, பரந்து வெடித்துக் கிடக்கும் பாறைகளின் இடுக்குகளில் செங்குத்தாக விழுந்தோடி மேட்டூர் அணை நோக்கிச் செல்கிறது. ஐக்கிய அமெரிக்க கனேடிய எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து மேலே கிழம்பும் நீர்த்திவலைப் புகைபோலவே இங்குள்ள பாறைகளும் நீர்ப்புகை கக்குகின்றன.
  
„ஒகை“ என்றால் கன்னடமொழியில் புகை என்பதால் புகைக் கல்- „ஒகேகல்“ என்ற வழக்கு காலப்போக்கில் „ஒக்கேனெக்கல்“ ஆகியது என்று சொல்லப்படுகிறது. „ஒக்கேனெக்கல்“ செல்லும் கடவு எல்லையில் சிறு தொகை அறவிட்டுத்தான் உள்ளே அனுமதிக்கின்றனர். அங்குள்ள வனம் பாதுகாக்கப்படுகின்றது.
பாதைகள் மலைமேட்டுப் பகுதியில் இருந்து வளைந்து வளைந்து சீர்தளம் செல்கின்றது. பிளாஸ்டிக் கழிவுகளை வீசாதீர் என்றும் வேண்டப்பட்டிருகின்றது.
காவேரி நதி நகரும் நீர்ச் சமவெளியில் நீண்டு வளர்ந்து பெருத்து நிமிர்ந்த காட்டு மரங்கள் பாறைபிளந்து வேரூன்றித் தம்மைப் பலப்படுத்தி நிற்கின்றன. வேர்கள் பின்னிப் படர்ந்து பருத்து தம்மை அசைக்கமுடியாதென்று இறுமார்ந்திருக்கின்றன. நதியின் நீரோடுவெள்ளம் மரங்களின் பாதம் நனைத்துச் செல்கின்றது. சமதளப் பாறைகள், ஓடைகள், வானை மறைக்கும் மரங்கள், வண்டல்மண், நீருக்குப் பச்சையேற்றிய நிழல், இலைகளின் இடைவெளிகளுக்குள்ளால் தன்னைத் திணித்து நிற்கும் சூரியக்கதிர்கள், சிறிய புற்தரைகள் மீதும் , வளர்ந்த கற்கள் மீதும் உருண்டு திரியும் குட்டிக் குரங்குகள் இவற்றோடு தான் எங்கு பார்த்தாலும் திடீரென ஒரு மூர்க்க வேகத்துடன் சுமார் 20 மீட்டர் உயரத்தில் இருந்து பல்வேறு இடங்களில் குத்தெனக் கீழிறங்கி ஒன்று கலந்து ஒரு 15 மீட்டர் இடைவெளியிருக்கும் இரு பெரும் பாறைமலை ஆழத்தில் இங்கித அழகுடன் நகர்ந்து செல்கிறது காவேரி நதி.
  நதிக்கரை ஓரத்தில் பரிசல் துறைகள். பரிசல் எனும் ஓடம் மூங்கில் வரிச்சுக்களால் வட்டமாக இழைக்கப்பட்டு அதற்கு நீர்புகா உறையிட்டு அதற்கும் மேல் தார் பூசியிருக்கின்றார்கள். முற்காலத்தில் எருமைத்தோல் இதற்குப் பயன்பட்டதாம். ஒரு அகன்ற கடகம் போன்றது இந்தப் பரிசல். சுமார் 30 கிலோவுக்கு மேல் பாரமுடையது. இந்தப் பரிசல் தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றதாக அறிகின்றோம். பரிசல் ஓட்டிகள் அதனைச் செலுத்தும் இலாகவமே தனி இரசனைகுரியது. சுமார் 500க்கு மேற்பட்ட பரிசல் படகுகள் இங்கே சேவையில் உள்ளன. பரிசலில் செல்லும் வழியில் அதற்குள் இருந்தபடியே அருவிகளில் எங்களை நனைத்துக் கொள்ளவும் முடிகின்றது.
 
விரும்பின் சில இடங்களில் இறங்கி நீராடவும் முடிகின்றது. அருவிகளின் வேகம் எங்கள் உடலின் பாகங்களை உதைத்துருவிப் பிசைந்து விடும்போது இதமாகத்தான் இருக்கின்றது. பரிசல் கடைகூட நதியில் உலாவுகின்றது. வெய்யிலும் களைப்பும் அதிகமானால் கொறிக்கவும் சுவைக்கவும் விரும்பிய சிற்றுண்டிகள், பானங்கள், மற்றும் தொப்பிகள் என்று பலவும் வாங்கிக்கொள்ளலாம். பன்னிரண்டே வயதுடைய சிறுவன் ஒருவன் மலைமீது ஏறி நீரில் குத்தித்துச் சாகசம் காட்டுகின்றான்.
 
நீண்டு செல்லும் இருபக்க மலைப்பாறைகள் ஓரங்களில் மணற்திடல்களூம் இருக்கின்றன. ஒரு மணற்திடலில் மதியப்பொழுதில் குடிக்கத் தென்னங்கள்ளும் கிடைக்கின்றது. கம்பராமாயணத்தின் „உண்டு ஆடும்“ படலத்தின் „ வெண்ணிற நறநிறை வெள்ளமென்னவும்“ என்ற பாடலை உரக்கப் பாடியபடியே எங்கள் பரிசல் பயணம் தொடர்ந்தது. பரவலாக எல்லா இடங்களிலும் மீன் பிடிகின்றனர். 3 அல்லது 4 வகை மீன்கள் அதிகம் உண்டு. எதிரே இருக்கும் மணற்றிடர் ஒன்றில் உடனேயே மீனை நன்றாக அந்த ஆற்று நீரில் கழுவி விரும்பிய காரம் போட்டு வறுத்துத் (பொரித்துத்) தருகின்றனர். ஆர்வ மேலீட்டில் மீன் கழுவப்படும் அந்த அயலிலேயே நண்பர்கள் அனைவரும் நீரில் குதித்து விட்டோம். மச்ச கந்தர்களாக மாறிக்கிடந்தோம். பரிமள கந்தர்கள் ஆக்கிவிடலாம் வாருங்கள் என்று வித விதமான வேகத்திலும் உயரத்திலும் அருவிகள் விழும் இடங்களுக்குக் கூட்டிச் சென்றார் எங்கள் பரிசலோட்டி. பாறைகள் எதுவும் கரடானதாக இல்லை.
 
பல ஆயிரம் வருடங்கள் பாயும் நீர் கற்களையும் பாறைகளையும் அழுத்தமாக்கி விட்டிருகின்றது.நதியோடும் திசையில் பரிசலில் பயணப்படும் போது ஆழமற்ற மணற்தேக்கத்திற்கு வருகின்றோம். ஆழமற்ற அந்தப் பகுதி குழந்தைகள் குளிக்கவும் குதூகலிக்கவும் பொருத்தமான இடம். இந்தியாவின் அரிய பொக்கிஷம் ஒக்கெனெக்கல். அந்தப் பிரதேசத்தில் பனங்கள்ளும் கிடைக்கின்றது என்று பரிசல் ஓட்டி வெங்கடேசன் சொன்னார். அதற்காகவும் மீண்டும் அந்த அருவிப் பக்கம் போகத்தான் வேண்டும்.
Posted by Picasa

1 Kommentare:

 1. நல்லதொரு அனுபவ பதிவு...

  நானும் சென்ற வாரம் சென்றிருந்தேன்...பதிவெழுதலாம் என்று நினைத்தபோது நீங்கள் எழுதிவிட்டீர்கள்...

  எனக்கு தோன்றிய விஷயங்கள்

  1. ஒக்கேனக்கல்லை அடைந்தவுடன் நடைய கட்டவேண்டிய இடம் மீன் மார்க்கெட்

  2. அங்கே மீன் வாங்கி வறுவலுக்கு கொடுத்துவிட்டு கிளம்பவேண்டியது அருவிப்பக்கம்

  3. அங்கே மஸாஜ் எடுத்துக்கொண்டு ( பொன்னாங்கன்னி மூலிகை எண்ணை வாங்குவதென்றால் வாங்கிக்கொண்டு) பிறகு நடையை கட்டவேண்டிய இடம் அருவி..

  4. அருமையான மஸாஜிங் அருவி குளியல்...பிறகு நேராக சாப்பிட செல்லலாம்...அருமையான மீன் வருவல் மற்றும் குழம்பு...(வேண்டுமானால் அரிசி மட்டும் கீழேயே வாங்கி செல்லலாம்)

  5.பிறகு ப்ரொஸீட் டு பரிசல்...பரிசல் பயணம் அருமையானது...மிகவும் ரம்மியமாக இருக்கும்...(மொத்தமாக ஒரு மணி நேரம் எடுக்கும்)

  6. பரிசல் பயணம் முடிந்தபின் நேராக காரை நோக்கி நடக்க வேண்டியது தான்...தூக்கம் சொக்கினால் அப்படியே காரில் ஒரு தூக்கம் போட்டுவிட்டு வண்டியை எடுக்கலாம்..இல்லை என்றால் ஒரு ட்ரைவரை அழைத்து செல்லலாம்...

  எனக்கு இப்போது மீண்டும் தூக்கம் சொக்க ஆரம்பிக்குது...

  ReplyDelete