மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Thursday, June 28, 2007

A.J.Canagaratna


ஏ. ஜே - ஒரு விவாதம் தந்த உறவு


-சமுத்திரன்


இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு சர்வதேச அரசு சாரா நிறுவனத்தைச் சார்ந்தவர் தான் யாழ்ப்பாணம் செல்லவிருப்பதாகவும் அங்கு மனந்திறந்து கருத்துப் பரிமாறவல்ல சிலரைச் சந்திக்க விரும்புவதாகவும் என்னிடம் கூறி எனக்குத் தெரிந்த அத்தகையோர் யாராவது யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்களா எனக் கேட்டார். . அவரிடம் நான் யாழ்ப்பாணத்தில் ஏ.ஜே. கனகரத்தினா என்பவரைச் சந்திக்கும்படி கூறினேன். யாழ் சென்றபோது அவர் ஏ.ஜே யைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பைப் பற்றி என்னிடம் அவர் கூறிய வார்த்தைகளை நான் மறக்கவில்லை. „அந்த மனிதர் சுருக்கமாகவும் தெளிவாகவும் தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்தார் - யாழ்ப்பாணத்தில் அறிவாளர்களின் நிலைமை பற்றிக் கேட்டபோது, Intelectuals are an endangered species here“ (இங்கே அறிவாளர்கள் ஆபத்துக்குள்ளாகிவிட்ட ஒரு வகையினர் ) எனக் கூறினார்.
ஏ.ஜேயின் மறைவு ஒரு பாரிய இழப்பாகும். மிகக் குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும். இறுதிவரை சுதந்திரமான அறிவாளராக, கூர்மைமிகு விமர்சகராக வாழ்ந்தவர் அவர். அவருடன் நெருங்கிப் பழகியவர்கள், அவரது நீண்டகால நண்பர்கள் அவருடைய மனிதப் பண்புகள் பற்றி; அவர் தானாகத் தேர்ந்து வாழ்ந்த „புறத்தியான்“ வாழ்பாங்கு பற்றி எழுதியுள்ளனர். பேராசிரியர் சிவத்தம்பி ,கவிஞர் மு. பொன்னம்பலம் போன்றோர் ஏ.ஜேயுடன் நீண்ட கால உறவு கொண்டோர் என்பதை அவர்களின் சமீபத்திய கட்டுரைகள் காட்டுகின்றன. மு.பொ. வின் கட்டுரையில் ஏ.ஜே யின் நகைச்சுவை பற்றியும் அறியக்கூடிதாகவிருந்தது. ஏ.ஜேயுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை. அவருடன் தொடர்பு ஏற்பட்ட சில காலத்தில் நான் வெளிநாடுகள் சென்று வாழ நேர்ந்ததும் இதற்கு ஒரு காரணம். ஆயினும் நம்மிடையே ஒரு பண்புமிகு உறவு இருந்தது என்பேன்.
அந்த உறவுக்கு வழிவகுத்தது கருத்து ரீதியில் காரசாரமாக மாறிய ஒரு விவாதமாகும். 1980 இல் Lanka Guardian (LG) எனும் சஞ்சிகையில் தமிழ் முற்போக்கு இலக்கியம் பற்றி நான் எழுதிய கட்டுரை என்னை ஒரு பெரிய விவாதத்திற்குள் எடுத்துச் செல்லும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தக் கட்டுரையை நான் எழுதியதற்கான காரணம் அரசியல். அப்பொழுது நான் கொழும்பில் வாழ்ந்து வந்தேன். ஒரு தடவை யாழ் சென்றிருந்தபோது பேராசிரியர் கைலாசபதி, எழுத்தாளர்கள் டானியல், இரகுநாதன், போன்ற நண்பர்களுடன் வழமை போன்று உரையாடல்களில் ஈடுபட்டேன். யாழில் இலக்கிய விமர்சனங்கள் சற்று வலுப்பெற்றிருந்தனபோல் இருந்தது. அன்றைய பல்கலைக்கழகச் சூழலும் இதற்கு உதவியாக இருந்தது எனலாம். நண்பர்கள் நுஃமான், சித்திரலேகா மௌனகுரு போன்றோருடன் உரையாடியபோதும் இது தெளிவாயிற்று. இந்த விவாதங்கள் பல மட்டங்களில் வேறுபட்ட வடிவங்களில் இடம் பெற்றன. அப்பொழுது ஏ.ஜே உடன் எனக்குத் தொடர்பு இருக்கவில்லை. அவரை ஓரிரு தடவைகள் கண்டிருக்கிறேன். அவருடைய சில கட்டுரைகளையும் படித்திருக்கிறேன்.ஆனால் அவருடன் ஒரு சம்பாசனையில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.


நான் கொழும்பு திரும்பிய பின்னர் யாழில் அறிந்தவற்றைப் பற்றிச் சில நண்பர்களுடன் உரையாடினேன். அந்த நாட்களில் கொழும்பிலும் மலையகத்திலும் ஒத்த கருத்துடைய பல இடதுசாரி நண்பர்களுடன் மார்க்சிசத்தின் சம கால செல் நெறிகள் பற்றி, தமிழ் கலை இலக்கியப் போக்குள் பற்றிக் கலந்துரையாடல்களை நடத்தி வந்தோம். கைலாசபதி கொழும்பு வரும்போது என்னுடன் தொடர்புகொள்வார். நாம் இருவரும் பல பொழுதுகளை பயனுள்ள உரையாடல்களில் கழித்திருக்கிறோம். எனக்கு இடதுசாரி அரசியலிலும், மார்க்சிய அரசியல் பொருளாதாரத்திலும் ஆழமான ஈடுபாடு . கைலாஸ் ஒரு மார்க்சிய அறிஞர். அவருடனான நட்பு எனக்கு அறிவுரீதியில் பயனுள்ளதாக இருந்தது. இவையெல்லாம் நான் இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் LG இல் நான் எழுதிய கட்டுரையின் பின்னணியின் சில அம்சங்களைக் காட்டவே.
நான் எழுதிய கட்டுரை கைலாசின் நிலைப்பாட்டிற்குச் சார்பானதாகவும் அப்போது நான் சுயமாக ஏற்றிருந்த சோசலிச யதார்த்தவாதத்தின் போக்குடன் இணைந்ததாகவும் இருந்தது. கட்டுரையின் பிரதான நோக்கம் உருவவாதத்தை விமர்சிப்பதாக இருந்தது. இடது சாரி அரசியல் போக்குகளுடன் தம்மை இனங்காணாத சில எழுத்தாளர்களும் வெளிப்படையான வலது சாரிப் போக்குடைய சிலரும் தமிழ் முற்போக்கு இலக்கிய ஆக்கங்களை அழகியல் அற்ற வெறும் அரசியல் சுலோகங்கள் எனும் வகையில் சாடி விமர்சிக்கும் போக்கை மனதில் கொண்டே எனது முதலாவது கட்டுரை எழுதப்பட்டது. ஆயினும் அது பற்றிய விமர்சனம் நான் மேலே குறிப்பிட்ட வட்டங்களிருந்து வரவில்லை. பொதுவாக இடது சாரி அரசியலுக்குச் சார்பான சில இலக்கிய விமர்சகர்களிடமிருந்தே வந்தது.

எனது கட்டுரை பற்றிய ஒரு காரமான விமர்சனத்தை தனக்கே உரிய பாணியில் ஏ.ஜே எழுதியிருந்தார். அவருடைய கட்டுரையுடன் அவரது நெருங்கிய நண்பரும் இலங்கையின் தலைசிறந்த இலக்கிய விமர்சகர்களில் ஒருவரான றெஜி சிறிவர்த்தனா எனது கருத்துக்களை விமர்சித்து விவாதத்திற்கு அழைத்த ஒரு நீண்ட கட்டுரையும் LG இல் பிரசுரமாயின. ஏ.ஜேயின் கட்டுரையில் நான் உருவவாதிகளைத் தாக்கியது பற்றி, ஆக்க இலக்கியத்தின் சமூக உள்ளடக்கத்தின் முக்கியத்துவம் பற்றிக் கூறியது பற்றி மட்டுமன்றி மறைமுகமாகக் கைலாசபதியையும் தாக்கி எழுதியிருந்தார். 'சரிந்து வரும் பிம்பங்களுக்குச் சமுத்திரன் முண்டு கொடுக்கிறார்' எனக் கிண்டல் பாணியில் அவர் எழுதியது நான் கைலாசை ஆதரித்து எழுதியது பற்றியே என்பது தெளிவாயிற்று. தொடர்ந்த விவாதத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் உள்ளார்ந்த அரசியலினதும் தனி நபர்களுக்கிடையிலான முரண்பாடுகளின் தாக்கங்களும் இருந்திருக்கலாம் என நம்புகிறேன். கைலாசபதியை விமர்சித்த சிலர் அவருடைய கருத்துக்களை மாத்திரமின்றித் தனிப்பட்ட தாக்குதல்களிலும் ஈடுபடுவது அப்போது ஒரு வழக்கமாயிருந்ததைப் பலர் அறிவர்.
றெஜியின் கட்டுரை முழுக்க முழுக்கக் கோட்பாட்டு ரீதியானது. இலக்கியத் துறையில் நீண்டகால அனுபவமும் ஆழ்ந்த அறிவும் கொண்ட ரெஜியுடனும் „யாழ்ப்பாணத்தின் றெஜி சிறிவர்த்தனா“ எனச் சிலரால் அழைக்கப்பட்ட ஏ.ஜேயுடனும் மோதுவது என்பது எனக்கு ஒரு சவாலாயிற்று. ஆனால் அதிலிருந்து பின்வாங்குவதில்லை என முடிவெடுத்தேன். அதன் பயன் அந்த விவாதம் பலரை ஈர்த்த அதேவேளை எனது அறிவு வளர்ச்சிக்கும் ஒரு உந்தலாக உதவியது. விவாதத்தின் போது கொழும்பு சமூக விஞ்ஞானிகள் சங்கத்தில் நான் தீவிரமாக இயங்கிவந்தேன். அப்போது கலை இலக்கியத் துறையில் மிகவும் ஈடுபாடுள்ள சார்ள்ஸ் அபயசேகராவும் எனது நீண்டகால நண்பனும் தோழனுமாகிய கலாநிதி நியூட்டன் குணசிங்கவும் றெஜிக்கு நான் பதில் கொடுப்பதற்கு உதவிய சில நூல்களையும் கட்டுரைகளையும் தந்துதவினர். சார்ள்ஸ் அபயசேகரா அவர்கள் றெஜியின் சந்ததியினர் மாத்திரமின்றி அவருடைய நிலைப்பாடு சார்ந்தவராகவும் இருந்தார். அதேவேளை எனது கருத்துக்களுக்காக நான் வாதாடுவதை மிகவும் ஊக்குவித்தார். நியூட்டன் எனது நிலைப்பாட்டை ஆதரித்தார். சமவேளையில் அந்த விவாதம் LG இல் நேரடியாக பங்குபற்றாதவர் மத்தியிலும் இடம்பெற்றதெனலாம். சமூகவிஞ்ஞானிகள் சங்கத்தில் இந்த விவாதம் பலதடவைகள் இடம் பெற்றது. ஒரு கட்டத்தில் எனதும் கைலாசினதும் நண்பரான பேராசிரியர் சேனக பண்டாரநாயக்கா தானும் LG இல் இடம் பெறும் விவாதத்தில் பங்குபற்றப்போவதாக என்னிடம் கூறி ஒரு கட்டுரையையும் எழுதி அதை „சாகர“ என்னும் புனைபெயரில் பிரசுரிக்க முடிவுசெய்தார். அந்தப் புனைபெயரில் அவர் எழுதியது அதுதான் முதல் தடவை. சிங்களத்தில் „சாகர“ எனும் சொல்லுக்குச் 'சமுத்திரம்' எனும் அர்த்தமாகும்.
மொத்தத்தில் LG விவாதம் ஆக்கபூர்வமாக இருந்தது என்பதே எனது கணிப்பீடாகும். விவாதம் இடம் பெற்ற காலம், அன்றைய அரசியல் பின்புலம், மார்க்சியம் பற்றிய அன்றைய சர்வதேச ரீதியான விவாதங்கள், குறிப்பாக 1960 கள் -1970களின் செல்நெறிகளை கணக்கில் எடுக்காது நமது அன்றைய நிலைப்பாடுகளையோ LG இல் இடம்பெற்ற கருத்து மோதல்களையோ சரியாகப் புரிந்து கொள்ளமுடியாது.
எனது அரசியல் சிந்தனாவிருத்தியில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்குப் பலமாக இருந்தது. 1980 இல் நான் கட்சி அரசியலில் ஈடுபடாத போதிலும் 1960 களில் – 1970 களில் ஒரு மாஓயிஸ்டாக இருந்தேன். கலை இலக்கியம் பற்றிய எனது பார்வையின் உருவாக்கத்தில் போல்சுவிக்கட்சியின் சோசலிச யதார்த்தக் கொள்கையும் மாஓவின் கருத்துக்களும் முக்கிய பங்கு வகித்தன என்பது உண்மை. ஏ.ஜேயின் நிலைப்பாடோ இந்தப் போக்கின் விமர்சனத்தில், நிராகரிப்பில் வேரூன்றி இருந்தது. அது அன்றைய நிலை. விவாதம் ஓய்ந்தபின் ஏ.ஜேயை நேரில் சந்திக்க விரும்பினேன். நான் 1982 முற்பகுதியில் வெளிநாடு செல்வதற்கு முன் ஒருதடவை யாழ்ப்பாணத்தில் அவரைச் சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் LG விவாதம் பற்றி அவரும் பேசவில்லை. நானும் அதை எமது முதலாவது சந்திப்பிலேயே எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. இலங்கை அரசியல் பற்றிப் பேசினோம். அதில் நம்மிடையே கணிசமான ஒருமைப்பாடு இருந்ததை உணர்ந்தேன். அந்தச் சந்திப்புக்குப் பின்னர்தான் அவர் தொகுத்த அலைவெளியீடான „மார்க்கியமும் இலக்கியமும் சில நோக்குகள் „ என்ற நூலைப் பார்க்க நேரிட்டது. அதை வாசித்தபோது என் மனதில் தோன்றியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நான் ஏ.ஜேயைச் சந்திக்க முன் அந்த நூலைப் படித்திருந்தால் அநேகமாக நமது LG விவாதம் விட்ட இடத்திலிருந்து தொடங்கியிருக்கும். அது எப்படிப் போயிருக்கும் என்று சொல்வது கடினம். அனால் அது நடைபெறவில்லை. காலம் மார்க்சிய அறிவுத்துறையிலும் இடதுசாரி அரசியல் போக்குகளிலும் பலவிதமான மாற்றங்களைக் கண்டது. இன்றைய எனது நோக்கில் அந்த விவாதத்தின் சட்டகமயமாக்கலிலேயே பல மாற்றங்கள் தேவைப்படலாம்.
அடுத்த தடவை நான் ஏ.ஜேயைக் கண்டபோது துரதிஷ்டவசமாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். 1989இல் ஒரு ஐரோப்பிய நிறுவனத்தின் அபிவிருத்தித் திட்டத்தை மதிப்பீடு செய்யும் ஆலோசகராக யாழ் சென்றேன். அப்போ அங்கு நிலைமை மிகவும் மோசமாகவே இருந்தது. இந்திய –இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக வந்த இந்திய அமைதிப் படையுடன் தமிழ் மக்கள் உறவு கொண்டாடிய காலம் போய் யாழ்ப்பாணத்தில் மக்கள் பல இன்னல்களை அனுபவித்த காலம் அது. அங்கு எனக்குக் கிடைத்த அனுபவங்களையும் நான் கண்டவற்றையும் ஒரு நீண்ட கட்டுரையாக எழுதியிருந்தேன். (Seven days in Jaffna: Life under Indian Occupation, Race & Class, 1989)நான் அங்கிருந்தவேளை ஏ.ஜேயைச் சந்திக்க முயன்றேன். அப்போதான் அவர் திடீரென நோய்வாய்ப்பட்டாரென அறிந்தேன். நான் கொழும்புக்குத் திரும்பிய அதே விமானத்தில் அவரை அவருடைய சில நண்பர்கள் சிகிச்சைக்காகக் கொழும்புக்குக் கொண்டுசென்றனர். அந்த நண்பர்களில் ஒருவர் குகமூர்த்தியாகும். இவர் பின்னர் கடத்தப்பட்டுக் காணாமல் போய்விட்டார். அவருடைய அன்புகலந்த சிரித்த முகமும் அழகான பல்வரிசையும் சுருண்ட கேசமும் என் மனதில் நன்றாகப் பதிந்துள்ளன. மிகவும் சுகவீனமுற்றிருந்த நிலையிலிருந்த ஏ.ஜேக்கு என்னைச் சரியாக அடையாளம் காணமுடியவில்லை.
1994க்குப் பின்னர் பலதடவைகள் யாழ் செல்லும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இந்தக் காலத்திலேயே ஏ.ஜேயைக் கண்டு கலந்துரையாடும் வாய்ப்புக்கள் கிடைத்தன. எனக்கு நன்கு அறிமுகமான கிருஷ்ணகுமார் குடும்பத்துடன் ஏஜே வாழ்ந்துவந்தார். என்னை அங்கு முதலில் அழைத்துச் சென்றவர் இன்னொரு நீண்ட கால நண்பரான பேராசிரியர் சிவச்சந்திரனாகும். ஏ.ஜேயைச் சந்தித்தபோதெல்லாம் இலங்கை மற்றும் உலக அரசியல் பற்றிப் பேசினோம். பல வருடங்களாக எனது ஈடுபாடு அரசியல் பொருளாதாரத் துறையிலேயே ஆழமாகப் பதிந்துவிட்டது. இன்றைய மார்க்சிய விவாதங்கள் மற்றும் உலகமயமாகல் பற்றிய வியாக்கியானங்களும் நமது உரையாடல்களில் இடம் பெற்றன. காலம் எமக்கிடையில் ஒரு பொதுவான புரிந்துணர்வுள்ள பரப்பினைக் கொடுத்துவிட்டது போலும்.
LG இல் இடம்பெற்ற விவாதம் ஒரு மறக்க முடியாத அனுபவம். இன்று அதை மீள் உருவாக்க முடியாது. அதேவேளை அன்று நான் கொண்டிருந்த நிலைப்பாடு பற்றி நான் வருந்தவுமில்லை.
கடைசியாக நான் ஏ.ஜேயை 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரு தடவைகள் சந்தித்தேன். 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி யாழ் பல்கலைக் கழகத்தில் கலாநிதி எம். நித்தியானந்தம் எழுதிய „இலங்கையின் பொருளாதார வரலாறு: வடக்குக் கிழக்குப் பரிமாணம்“ எனும் நூலின் வெளியீட்டு விழாவில் நாம் இருவரும் நூல் விமர்சகர்களாகக் கலந்து கொண்டோம். எனக்கு முன்னர் உரையாற்றிய ஏ. ஜே தனது கருத்துக்களை மிகச் சுருக்கமாக ஒரு சில நிமிடங்களில் கூறிவிட்டு அமர்ந்துவிட்டார். ஆனால் அந்தச் சிறிய உரையில் மிகவும் தாக்கமான கருத்துக்களை முன்வைத்தார். எனது உரை சற்று நீண்டதாகவே இருந்தது. விமர்சனத்தைப் பொறுத்தவரை நம்மிடையே சில ஒருமைப்பாடுகளும் வேறுபாடுகளும் இருந்தன. மறுநாள் ஏ.ஜேயைச் சந்தித்தபோது நித்தியின் நூல் பற்றிய எனது மதிப்பீட்டைத் தான் விரும்பிக் கேட்டதாகவும் அதைக் கட்டுரையாக எழுதி கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்துவெளிவரும் ஒரு சஞ்சிகைக்கு அனுப்பினால் என்ன என்று கேட்டார். அதுவே நமது கடைசிச் சந்திப்பு. அதுவரையிலான நமது சந்திப்புக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
ஏ.ஜேயின் மரணம் பற்றிக் கேள்விப்பட்டபோது அந்தக் கடைசிச் சந்திப்பும் அவரைச் சந்தித்த எனது நண்பரிடம் அவர் யாழ்ப்பாணத்தில் அறிவாளர்களின் நிலை பற்றிக் கூறிய வார்த்தைகளும் நினைவுக்கு வந்தன. ஏ.ஜேயும் நானும் மீண்டும் சந்தித்தால் நம்மிடையே ஒரு பயனுள்ள கலந்துரையாடல் இடம்பெறும். ஒரு விவாதம் கூடத் தொடங்கியிருக்கலாம். அது காரசாரமாகவும் மாறி இருக்கலாம். ஆனால் நிச்சயமாக அது நாகரிகமான கருத்து மோதல்களின் வரையறைக்குள்ளேயே இடம் பெற்றிருக்கும். இது கற்பனைதான். ஆனால் நமது சமூகத்தில் சுதந்திரமான திறந்த விவாதங்களுக்கு உதவும் இடம் சுருங்கி மறைந்த துன்பியல் பற்றி அவர் கூறியது கற்பனையல்ல.

0 Kommentare:

Post a Comment