மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Tuesday, December 25, 2007


Sleep well Comrade!

பதினேழு வருடங்கள் முன்னதாக பெர்லின் இலக்கியச்சந்திப்பில்தான் பராவை முதன்முறையாகப்பார்த்தேன். முதல் தோற்றத்தில் அவர் எனக்கு யாழ்ப்பாணத்துச் சனாதனத்தமிழர் ஒருவர் போலவே இருந்தார். பின்னாளில் அவரது செயற்பாடுகளை அவதானித்தபோது வானத்துக்கும் பூமிக்குமிடையேயான அனைத்துப் பிரச்சனைகளுள்ளும் தன்னைப்பொருத்திக்கொண்டு அவற்றுக்கான தீர்வை நோக்கிப்போராடும் மிகுபிரக்ஞையும், துடிப்பும், சிந்தனையுமுள்ள ஒரு இளைஞன் அவருக்குள் இருப்பது தெரியவந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக அவர் தனது வதிவிடமாக பெர்லினைக் கொண்டதிலிருந்து அவருடனான என் ஊடாட்டம் சற்றே அதிகமானது. இடதுசாரி அரசியல் சம்பந்தமான ஆங்கிலச்சொல்லாடல்களில் எனக்கு அடிக்கடி மயக்கங்கள் ஏற்படும் போதெல்லாம் விளக்கங்கள் கோரி அவருக்குத்தான் மின்அஞ்சல் எழுதுவேன். மறுநாளே ஒரு நல்லாசிரியரைப்போல ஓர் சொற்களஞ்சியம் வழங்குவதைவிடவும் மிதமாக அச்சொல்லாடல்களுக்கு அதன் வேரிலிருந்தே விளக்கங்கள் தந்திருப்பார்.

இன்னும் அவரது மூன்று மொழிபேசும் ஆற்றலும் சளையாத உழைப்பும், தலைமை தாங்கும் இயல்பும் இலக்கியச்சந்திப்புகளுக்கு அப்பாலும் இங்கே தமிழ் சிங்கள சகோதரர்களை இணைக்கவும் கலந்துரையாடவும் எங்களுக்கெல்லாம் உதவியன.

திம்பு பேச்சுவார்த்தைகளை பெடியங்கள் முறிக்கவேண்டி வந்ததிலுள்ள நியாயத்தை அன்றே ஆமோதித்தவர் பரா. பின்னாளில் தமிழர் பிரச்சனைத் தீர்வுக்காக சர்வகட்சி மகாநாடொன்று கூட்டப்படுமென்றும், அதில் அனைத்துக்கட்சிகளும் சமர்ப்பிக்கும் தீர்வாலோசனைகள்
பரிசீலிக்கப்படும் என்கிற அரசின் வாக்குறுதியிலும், Dr. திஸ்ஸ விதாரணவின் உத்தேசத் தீர்வுவரைவில் இருந்த நல்ல அம்சங்களால் அதன் மீது அதீத நம்பிக்கையும் உற்சாகமும் கொண்டிருந்தார்.

சமூகவியக்கத்தின் இயங்கியலை அதன் சரித்திரங்களோடும் இளமையிலேயே புரிந்துகொண்டவர் பரா. சிலருக்கு நல்ல வாழ்வியல் சித்தாந்தங்கள், தத்துவங்கள் எல்லாம் தெரிந்திருக்கும்- ஆனாலும் நடைமுறை வாழ்வில் அவற்றையெல்லாம் கடைப்பிடித்து வாழுதல் இயலாமல் போகும். இனத்தில், ஜாதிகளில், மொழிகளில் கலப்பினை ஏற்படுத்துவது அவற்றுக்கிடையேயான சமத்துவத்தை வளர்ப்பதற்கான முதற்படி என்பதை பரா இளமையிலேயே தெளிந்துகொண்டதால் துணிந்து தானும் மல்லிகாவைக் கலப்புத்திருமணம்செய்துகொண்டு வாழ்ந்து பெற்ற தன் குழந்தைச் செல்வங்களையும் அவ்வாறே வாழக்கற்றுக்கொடுத்த ஒரு மாமனிதன்.

வாழ்வின் அந்திம கணம்வரை துறுதுறுப்பாயிருந்து பாடல்களில்கூட துள்ளிசையையே விரும்பிக்கேட்ட அவரது உற்சாகத்தோற்றத்துடன் மரணத்தை எவராலும் இணைத்துச் சிந்தித்திருக்கவே முடியாது.
பராவின் 'புன்சிரிப்பை' இனிமேல் பார்க்கமுடியாது, 'கிண்' குரலை இனிக்கேட்கமுடியாது என்கிற ஆயாசம் தவிப்பு எமக்குள் இருந்தாலும் தூங்க எப்போதும் அடம்பிடிக்கும் ஒரு குழந்தை திடீரென ஒருநாள் தனாகவே போய்த்தூங்கியதைப்போல யாருக்கும் எந்தக் கஷ்டமும் கொடுக்காது முன்சமிக்கைகள் ஏதுமின்றித் தானாகவே விரும்பிப்போய் ஆனந்த சயனத்தில் ஆழ்ந்துவிட்டார்.
தோழருக்கு அதுதான் ஆனந்தம் என்றால் எமக்கும் அது ஆனந்தம்..... ஆனந்தமே!

பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின்.
+++++++++++++++++++++++++++


பரா மாஸ்டரோடு பழகிய நினைவுகளுடன்......

இளமை முதுமை சிறியோர் பெரியோர் என்ற எந்த வரைமுறைகளுக்குள்ளும் அகப்படாமல் அற்புதமாகப் பழகும் ஒரு துடிப்பான இளைஞனை நாம் இழந்தது என்னளவில் பேரிழப்பாய்த் தெரிகிறது. எனக்கும் என்போன்றோருக்கும் எவ்வளவு பழகியும் பழகியதுபோதாதென்ற வெறுமைதான் நினைவில் வந்து வந்து உதைத்துதள்ளும்.
'ஏதேதோவெல்லாம் நிறையப் பேசியிருக்கவேண்டும்; பேசவில்லையே' என்ற உணர்வும் எண்ண அலைகளும் மனதை வதைத்துச் செல்கின்றன.
ஒரு தம்பதியின் இலட்சியம் எது என்பதை அவர்கள் வாழும் நாட்களில் கண்டுகொண்டுவிடலாம்.
பரா மாஸ்டரின் குடும்பம் என்னை இரசிக்கவைத்தது. பரா மாஸ்டரினதும் மல்லிகாவினதும் சமூக அறிவியல் அக்கறையானது இரு பிள்ளைகளையும் அதே சமூகப்பொறுப்பில் ஈடுபட வைத்தது. நான் எதிர்பார்க்கும் குடும்பவாழ்வை பரா மாஸ்டர் அடைந்துகொண்டார். ஒரு மனிதர் தன்னை அரசியலில் தெளிவுள்ளவராக ஆக்கிக்கொள்ளவேண்டியது கடமைகளில் மிகவும் முக்கியமான கடமையாகும். அதனைத் தன்குடும்பக் கடமையாகக்கொண்டு வாழ்ந்தமை அற்புதமான பெரும்படைப்பாகும்.

சராசரி மனிதருக்கு இருக்கவேண்டிய மானிடக் கடமையின் பொறுப்பு இறுதிவரைக்கும் அவரைவிட்டு விலகாமலே இருந்தது.
பெர்லின் வந்த நாட்களில் இருந்து தொடர்ச்சியாக நடைபெறும் இடதுசாரி அமைப்புக்களின் சர்வதேச மே தினத்தில் கலந்துகொள்ளாமல் விட்டதென்றால் அது மிகச்சுகயீனம் அல்லது அவர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பமாகவே இருந்திருக்கும்.
ஜனவரி 9ம்தேதி என்றால் அவரை Rosa Luxemberg, Karl Liebknecht அவர்களின் சமாதிகளை நோக்கிய நினைவு நாள் ஊர்வலத்தில் சந்திக்கலாம். தை மாதக் குளிருக்குள் பரா மாஸ்டரின் வருகை இனி இல்லாதபோது , ஆயிரக்கணக்கான பூக்களுக்குள் சிவப்புப் பூ ஒன்று Rosa Luxemberg அவர்களுக்கு குறைந்து விடப்போவது உண்மைதான். ஆனாலும் தோழமையுடன் அவர் பங்கு குறையாது பூச்சொரியவே செய்யும். தொடர்ச்சியாக இந்த ஊர்வலங்களில் அவர் கலந்துகொண்டமை உடல் ரீதியில் சாதாரணமானதாகவே நினைத்திருந்தேன்; இப்படியொரு இழப்பிற்குப்பின்தான் அவரின் வயதை இப்போது எண்ணி வியப்படைகிறேன். 67,68 வயதளவில் பெர்லின் வந்து இறுதிவரை துடிப்பான மனிதராக எம் வாழ்நாளில் கண்டமை எமக்கெல்லாம் ஒரு கொடுப்பனவே.

தனிப்பட்டமுறையில் இலங்கையின் நிர்வாக அரசியலில் , மற்றும் அதன் தீர்வுமுறைமைகளில் அவருடன் எனக்குச் சிறிய அளவில் கருத்து முரண்பாடு இருந்ததுதான். அது எனது புரிதலின் இடைவெளியாகக்கூட இருக்கலாம். பேசித்தீர்வு காணக்கூடிய நட்பும் நிதானமும் கருத்துக்களை மதிக்கும் பக்குவமும் அவரிடம் இருந்தமை அவரின் அரசியல் சமூக அக்கறைகளின் தெளிவைக் காட்டிநின்றதை அறிவோம்.

தன் வாழ்நாளில் நாட்டுக்கோ சமூகத்திற்கோ பாரமாக அதாவது பிற்போக்குத்தனமாகவோ, விரயமாக நேரங்களைச்செலவிட்டே வாழ்ந்தோம் என்றில்லாமல் ஒவ்வொரு சுவடுகளும் மனிதர்களின் மலர்ச்சிக்கான வாழ்வை நோக்கிய பணிகளுக்காய் , செயலாய் , எழுத்தாய், சிந்தனையாய், வாசிப்பாய் அமைந்தது என்பதை எண்ணுகையில் அவரின் களைப்பு புரிகிறது.

பல்துறைச் சிந்தனைக் கலைஞனின் இழப்பில் துயருறும் நண்பர்கள், துணைவி மல்லிகா, அன்பு அப்பாவின் பிரிவில் ஏங்கும் உமா, சந்துஷ் மற்றும் முரளி, தினேஷா , சிந்துவுடன் எனது துயரைப்பகிர்கின்றேன்.

செ. தனபாலன்
, பெர்லின்.

0 Kommentare:

Post a Comment