மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Friday, December 21, 2007

Condolences-IV

பெண்கள் சந்திப்பு: அஞ்சலி

புகலிடத்தமிழர் வாழ்விடையே மாற்று அரசியலுக்கு உரமிட்டவர்களில் முக்கிய இடம் வகிப்பவர் பரா அங்கிள் அவர்கள். புகலிட இலக்கியம், பெண்ணியம், தலித்தியம் எனும் கருத்தாக்கங்கள் பற்றிய விவாதங்களை முன்னெடுத்தவர்களுள் அவரும் ஒருவர். ஈழத்தில் கருத்துச் சுதந்திர மறுப்பு, ஜனநாயக மறுப்பு குழி தோண்டி புதைக்கப்பட்ட போதிலும் சற்றே எனினும் சுதந்திரமாக மூச்சுவிடக் கூடியதாகவிருந்த புகலிடத்தில் இலக்கியசந்திப்புக்கும், கருத்துப் பகிர்வுகளையும் உயிர்ப்பிக்க, தனதுபங்கை இலக்கியச் சந்திப்புக்கு மட்டுமல்ல பெண்கள் சந்திப்பின் வளர்ச்சிக்கும் உந்துசக்தியாக செயற்பட்டவர் அவர். ஆரம்ப காலங்களில் வெளிவந்த பெண்கள் சந்திப்பு மலர்களின் வெளியீட்டு பணிகளுக்கு எமக்கு உற்சாகம் தந்து வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்பதை நாங்கள் ஒருபோதும் மறக்கமுடியாது. வெறும் எழுத்து என்ற மாத்திரத்தில் நிற்காது ஆயுத மொழியால் உயிர் பறிக்கப்பட்டவர்களிற்கு குரல் கொடுக்கவும் அவர் தவறவில்லை.
பேச்சுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லாத இந்த புத்திஜீவித வட்டத்துள் மனிதனாக மட்டுமல்ல தான் பேசுவதற்கும் தன்னுடைய வாழ்க்கை முறைக்கும் இடைவெளி அற்ற முறையில் வாழ்ந்து காட்டிய ஒரு பெரியவர் என்றால் மிகையாகாது. அவரது அமைதியான தோற்றமும் ஆணித்தரமான கருத்தும் அன்பான அரவணைப்பும் எல்லோர் மனதிலும் அவரை இருத்திவைக்கிறது. அவரது இழப்பு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல மாற்று அரசியல் பாரம்பரியத்தில் வந்த அனைவருக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து நிற்கும் எமது தோழர்களான மல்லிகா, உமா, சந்தூஸ் மற்றும் முரளி, தினேசா ஆகியோரோடும் அவர்களின் துயரங்களோடும் பங்கெடுத்து நிற்கிறது பெண்கள் சந்திப்பு. நினைவுகள் மாத்திரமே உயிர்த்திருக்க உயிர் நீத்துச் சென்ற எம் பரா அங்கிளுக்கு எமது கண்ணீர் கலந்த அஞ்சலிகள்!

பெண்கள் சந்திப்பு
++++++++++++++++++++++++++++++

Photo by Thamayanthi,Norway


தோழர் பராவின் இழப்பில் ஆழ்ந்த கவலை கொள்கிறோம். சமூகத்தின் மீது கரிசனையுள்ள , தொழிற்சங்க நடவடிக்கைகளில் அக்கறையோடு ஈடுபட்ட ஒருவராக இலங்கையில் அவரைக் கண்டிருகிறோம். புகலிடத்திலும் அவர் ஓய்ந்துவிடாது ஒரு சமூக செயற்பட்டாளராக , கருத்தொற்றுமை , கருத்து வித்தியாசங்களுக்கு அப்பால் மனிதநேய அடிப்படையில் எல்லாத் தளங்களிலும் நட்பினைப் பேணும் பண்பாட்டாளராக, சர்வதேச, இலங்கை இடதுசாரி அமைப்புக்களின் செற்பாடுகளில் அக்கறை கொண்டவராக அவரைக் கண்டிருக்கிறோம். ஈடு செய்ய முடியாத இந்த இழப்பின் துயரை அவரது மனைவி, பிள்ளைகள்,உறவினர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவருடன் நாமும் பகிர்ந்துகொள்கிறோம்.

சி.கா. செந்திவேல், பொதுச்செயலாளர் புதிய ஜனநாயகக் கட்சி, இலங்கை

+++++++++++++++++++++++++++

ஐரோப்பாவின் தமிழர் புகலிட வாழ்வில் அரசியல், கலாச்சாரத் துறைகளில் மாறுபட்ட கருத்துக்களை மிலேச்சத்தனமாக அடக்கி ஒடுக்குகின்ற அகங்காரப் போக்கு தலைவிரித்தாடியபோது அதற்கு எதிரான ஜனநாயக உரிமைகளை மதிக்கும் களத்தை நிர்மாணிப்பதில் பரா குமாரசாமி நிதானமாக உழைத்து வந்திருக்கிறார். அதி தீவிர அரசியல் பிரகடனங்களை முழக்கிவிட்டு செயல் முறையில் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிப்போடக்கூடத் திராணியற்றவர்கள் இலக்கிய சந்திப்பு போன்ற நிகழ்வுகளை அர்த்தமற்ற கூட்டமாக விமர்சித்த வேளைகளில் ஆர்ப்பாட்டமின்றி இலக்கிய சந்திப்பின் எல்லைக்குள் ஜனநாயக மரபினைப் பேணியதில் பராவின் உழைப்பு அளப்பரியதாகும்.
பரிகாசமான விமர்சனங்கள், மேதாவித்தனமான தீர்ப்புகள் ஆகியவற்றின் மத்தியில் பக்குவத்தோடும் பொறுமையோடும் இலக்கியச் சந்திப்பைத் தொடர்ந்து நடத்தியதில் அவர் திறமை மிக்கவராகவே இருந்திருக்கிறார்.
பெண்களை வீட்டில் சிறை வைத்துவிட்டு பெண்ணியம் குறித்து மேடைகளில் முழக்கியும் றீம் கணக்கில் எழுதித் தள்ளுகிற மகானுபாவர்களின் மத்தியில் பெண்களின் உரிமைகளை மதிப்பதில் அவர் நமக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறார். பெண்களை மதிப்பதிலும் அவர்களின் சுயாதிபத்தியமான சிந்தனைகளுக்கு முன்னுரிமை வழங்குவதிலும் பரா விசுவாசமாகவே செயற்பட்டிருக்கிறார். இலக்கியக் கூட்டங்களிலும் அரசியல் கூட்டங்களிலும் பராவையும் மல்லிகாவையும் இணைத்துப் பார்ப்பதே எப்போதும் உற்சாகம் தருவதாக இருந்திருக்கிறது. பரா தான் எழுதிய அரசியல் கட்டுரைகள், சிறுகதைகள் ஆகியன குறித்த விமர்சனங்களையெல்லாம் மிகுந்த அக்கறையோடு கேட்ட நாட்களை நான் நினைவு கூருகின்றேன். தொழிற்சங்கவாதியாகத் தன் தொழிலை இழந்து அரசியல் களத்திலேயே களைப்பின்றி செயற்பட்ட மனித உரிமை வாதியை நாம் இழந்திருக்கிறோம். தான் கூற வந்த விடயங்களை நேர்த்தியாகவும் கேட்போரை ஈர்க்கத் தக்கதாகவும் உரையாற்றுகின்ற இடதுசாரி அரசியல் லாவகம் அவரிடம் இருந்தது.
ஐரோப்பிய புகலிட வாழ்வில் ஒரு மூத்த இடதுசாரி அரசியல்வாதியை காலம் பறித்துச் சென்றிருக்கிறது. அவரது பிரிவால் வாடும் அவரது அருமைத் துணையான மல்லகாவிற்கும், சந்தூஷ், உமா, முரளி ஆகியோருக்கும் எனது மனம் நெகிழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன்.

மு.நித்தியானந்தன்

0 Kommentare:

Post a Comment