மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Tuesday, December 25, 2007

பரா என்ற சிந்தனையாளனுக்கு எமது அஞ்சலி

சாதாரண மனிதர்களின் மரணம் தனி நபர்களின் இழப்பாகவே கருதப்படுகின்றது.

சமூக மாற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றியவர்களின் மரணம் ஒரு சமூகத்தின் இழப்பாகவும், வலியாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

தோழர் பாரா என்றும், பரா மாஸ்ரர் என்றும் இலங்கை தீவின் அரசியல் தளத்திலும், புலம் பெயர் அரசியல், இலக்கிய சூழலிலும் அறியப்பட்ட ஒரு சமூக அக்கறையாளரது மரணம் வெறுமனே தனிநபர்களின் இழப்பாக கருதி விடமுடியாது. இது ஒரு சமூகத்தின் இழப்பிற்கான வலியை எம்மிடையே உருவாக்கியுள்ளது.

இடது சாரிக்கொள்கை இளம் பருவக்கோளாறு என்ற கருத்தியலை உடைத்து
இளமை தொட்டு வாழ்ந்து முடிந்த காலம் வரை தான் கொண்டிருந்த இடது சாரிக்கருத்துக்களோடு சகல தளங்களிலும் தன்னை அடையாளப்படுத்தியவர் தோழர் பரா அவர்கள்.

மாக்சீய தத்துவம் என்பது வெறுமனே அறிக்கையிட்டு கொள்வதற்காக அல்ல. அது ஒரு சமூக மாற்றம் குறித்த செயற்பாட்டு தளத்திற்குரியது.

இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும், இன சமத்துவங்களையும், மனித நேயப்பண்புகளையும், மனித உரிமைகளையும், அதற்கான போராட்டங்களையும், சகல ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களையும் மாக்சீய தத்துவம் வலியுறுத்துகின்றது.

1920 களின் இறுதியிலும், 1960 களின் நடுப்பகுதியிலும் சர்வதேச சோசலிச முகாம்களிடையே ஏற்பட்டிருந்த தத்துவார்த்த முரண்பாடுகள் இலங்கை தீவின் இடது சாரிக்கட்சிகளிடையேயும்
பிளவுகளை ஏற்படுத்தியிருந்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சம தரையில் அவிட்டு விடப்படட்ட உருளைக்கிளங்கு மூடையைப்போல் இலங்கைத்தீவின் இடது சாரிகள் திசைக்கொன்றாக சிதறி செயலாற்றியிருந்தாலும்., இதனால் ஒன்று பட்ட ஒற்றுமையின் பலத்தை அவர்கள் இழக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழலுக்கு முகம் கொடுக்க நேரிட்டிருந்தாலும் இறுதி வரை தாம் கொண்டிருந்த தத்துவார்த்த சிந்தனைகளை முன்னெடுத்து சென்றிருக்கின்றார்கள்.

இன்று வரை இடது சாரி கட்சிகளின் மூத்த தலைவர்கள் பலரும் மரண அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மாற்றங்களுக்காக ஐனநாயக வழியில் உழைத்து வருகின்றார்கள். இது இடதுசாரிக்கொள்கையின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றது.

அந்த வகையில் இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஊடாக தொழிற்சங்க போராட்டங்களில் தன்னையும் முன்நிலையில் நிறுத்தி இடது சாரி சிந்தனைகளோடு பல போராட்டங்களில் தோழர் பரா அவர்களும் உறுதியாக ஈடுபட்டிருந்தவர்.

புரட்சிகர மாக்சீயக்க கட்சி, நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கம் போன்ற இடது சாரிக்கொள்கைகளை முன்னெடுத்து சென்ற அமைப்புகளோடு பிரதான உறுப்பினராக இணைந்து செயலாற்றியிருந்த தோழர் பரா அவர்கள் தென்னிலங்கை இடதுசாரி, முற்போக்கு சக்திகளுடனான உறவுகளை உரிய முறையில் பேணி வந்தவர்.

புலம்யெர்ந்து வாழ வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டிருந்த தோழர் பரா அவர்கள் புலம் பெயர் சூழலில் மாற்றுக்கருத்துடையவர்களின் எண்ணிக்கைப்பலம் என்பது குறைவான ஒரு காலச்சூழலில் சிந்தனை என்ற சஞ்சிகையை துணிச்சலோடு வெளியிட்டு தனது அரசியல் உறுதிப்பாட்டை பலத்த சவால்களுக்கு மத்தியில் வெளிப்படுத்தியிருந்தவர்.

புலம் பெயர் நாடுகளில் இன்று வரை தொடரப்படுகின்ற இலக்கிய சந்திப்புகளின் பிதாமகன் இவர்தான் என்பது மட்டுமன்றி, தான் மட்டுமன்றி தனது குடும்பத்தினரையே அரசியல், இலக்கிய துறைகளில் ஈடுபடுத்தியிருந்தவர்.

தோழர் பரா அவர்களின் மனைவி மல்லிகா அவர்களும், அவரது மகளான உமா அவர்களும்
புலம் பெயர் சூழலில் இன்று வரை நிகழ்ந்து வரும் பெண்கள் சந்திப்பிற்கு அத்தி வாரம் இட்டவர்கள் என்ற சிறப்பும் இவரது குடும்பத்தின் சமூக அக்கறையை அடையாளப்படுத்தியிருக்கின்றது.

தோழர் பரா அவர்களின் மகன் சந்தூஸ் அவர்கள் தனது தந்ததையின் வழியிலும், அரசியல் இலக்கிய நோக்கிலும் இன்று செயலாற்றி வருகின்றார். தனது தந்தையின் முயற்சிகளை முன்னெடுத்து செல்வார் என்ற நம்பிக்கை புலம் பெயர் சூழலில் இன்று பரவிப் பாய்ந்திருக்கின்றது.

தமிழ் தேசியம் என்பது இன்று தவறான முறையில் கொண்டு செல்லப்படுகின்றது. தமிழ் மொழியை பேசும் இஸ்லாமிய மக்களை விரோதித்து, அப்பாவி சிங்கள மக்களை எதிரிகளாக கணித்து தமிழ் தேசியம் என்பது பிற்போக்கு சகதிக்குள் விழுந்து புதைந்து விட்டது.

மாற்றுக்கருத்துடைய ஐனநாயக சக்திகளின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு தடை விதித்து தமிழ் தேசியம் என்பது தன்னாதிக்க மோகத்தில், தனித்தலைமை வெறியில் பிற்போக்கு சகதிக்குள் இருந்து செயலாற்றி வருகின்றது.

இவைகளை தனது விமர்சனப்பார்வைக்கு மட்டும் எடுத்துக்கொண்ட தோழர் பாரா அவர்கள் முற்போக்கு தமிழ் தேசியத்தை என்றும் ஆதரிப்பவராகவே இருந்திருக்கின்றார்.

தமிழ் தேசியம் என்பது பன்முகச்சிந்தனைகளை கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் தோழர் பாரா அவர்கள்.

ஈழப்போராட்ட வரலாற்றில் நல்ல இடதுசாரிச்சிந்தனைகளை அறுவடை செய்வதில் தவறுகள் நடந்திருக்கின்றன. ஆனாலும், சப்பாத்துகளுக்கு அளவாக கால்களை வெட்டிக்கொள்ளாமல் இன்றைய ஐதார்த்த சூழலுக்கு ஏற்றவாறு, அந்த அறுவடைகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

புலம்பெயர் சூழலில் இடது சாரி முற்போக்கு சிந்தனைகள் அறுவடைக்கு வருவதற்கு மூலகாரணமாக இருந்தவர்களில் தோழர் பரா அவர்கள் பிரதானமானவர்.

தோழர் பரா போன்றவர்களின் சிந்தனைத்தாக்கங்களில் அடிப்படையில் இருந்துதான் ஒன்றிலிருந்து இன்னொன்றாக பல்வேறு நவீன சிந்தனை போக்குகளும் புலம் பெயர் சூழலில் இன்று தோன்றியிருக்கின்றன.

தோழர் பரா என்ற சிந்தனையாளருக்கு எங்களது இறுதி மரியாதை!
அவரது குடும்பத்தவர்கள், உறவினர்கள், அரசியல், இலக்கிய நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறுகின்றோம்.

சர்வதேச பிராந்தியங்களின் ஒன்றியம்
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி! ஈ.பி.டி.பி

++++++++++++++

Dear Sivarajan,

The news of our friend Para's death was a terrible shock to me. I had no idea that his illness was so serious and had hoped to hear from Mallika that he was up and about again.

There is so little one can say, Sivarajan; please do let me know if there is anything I can do. I should be only too glad if I could express my sympathy in some practical way.

Yoganathan Putra, Mon, 17 Dec 2007 08:23:36

0 Kommentare:

Post a Comment