மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Thursday, January 17, 2008

சுகன் கவிதைகள்:அம்மா மீது மூன்று கவிதைகள்

அம்மாநான் முதன் முதலாகப் போகும் போது
உண்மையாக அழுதும்
திரும்பித் திரும்பி உன்னிடத்தில் வரும் போது
உண்மையாகவே கவலைப் பட்டும்
ஒவ்வொரு முறையும் போகும் போது அழுதும் இங்கு
வந்து சேர்ந்தபின் சந்தோஷப்பட்டும்
விரட்டிய அம்மா!

எல்லோருடைய சந்தோசக் கனவுகளும்
தகர்க்கப்பட்டு
அடையாளமில்லாது அழிக்கப்பட்டது

எப்படியும் கட்டாயம் திரும்பி வருவேன்
என நினைத்தது நினைவிருக்கிறது
அது எவ்வளவு காலமென
சரியாக நிச்சயிக்க இயலாத
ஆனால் சந்தோஷத்தோடு
திரும்பி வருவேன் என நினைத்தது
நினைந்து வருந்துவது கொடுமை
உலகம் அழிக!

(தாயகம் , 02.07.1993)

இந்தப் பிறவியில் நான் வரப்போவதில்லைகொஞ்சம் கொஞ்சமாக
நினைவுகள் மறந்து போகிறதா
அம்மா உங்களுக்கு!

கண் கலங்கி திருநீறிட்டு
வழியனுப்பிய ஒரு காலைப் பயணத்தின் பின்
என்றைக்குமாய்
நான் அன்று வாழ்ந்து
மறு நாள் இறந்தேன் தாயே!

நீ எங்கே இருந்தாலும் கொள்ளிவைக்க வந்திடென
இறுதியிலும் இறுதியாய்ச் சொன்னீர்களே!

கைகளை முன்னுக்குக் கட்டி
பின் புறமாக ஓடவிட்ட
மைதான விளையாட்டில்
நாங்கள் எல்லோருமாய் முதலில் வந்தோம்

பாதித் துண்டமாய் வெட்டியேற்றப்பட்ட
மண்ணுணிப் பாம்பின் மீது
மணற் குவியல்கள் நில்லாமல் கொட்டுகிறது
இந்தப் பிறவியில் நான் வரப்போவதில்லை!

27.08.1993


அம்மா


குளிர் கொல்ல உனதுடலை
சாக்குக் கொண்டு மூடுவாய் அம்மா
போர்வை போர்த்தி நான் பார்த்ததில்லை
தைப்பூசம் புதிர் கூட்ட
வயல் வெளிக்கு வருவேன் உன்னுடன்
பச்சையும் மஞ்சளும் கதிர் கனத்துச் சிரிக்கும்
எந்தப் பீவெள்ளம்
உன் பசி தாகம் தணிக்குதோ
என் அடுத்த பிறவி
அந்த வெள்ளத்திற்காகுக!

அம்மா
நிலம் தேய முலை உரசி
புண் வந்த ஆடு
இறந்து போனதோ!
நீயும் இறந்து போன
செய்தி வரும் விரைந்து

நாளை காலை
மறு நாள் காலை
விரைவாய் யாரும் எழுதுவர்
அல்லது எழுதார்

அம்மா இறந்த சேதி யாரேனும் எழுதுக
நான் நின்மதியை விரும்புகிறேன்

0 Kommentare:

Post a Comment