மிக விரைவில் சித்தன் கொட்டில் புதிய வடிவில்!!

Saturday, January 31, 2009

மனிதப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்து! -புகலிட அமைப்புக்கள்

மனித பேரவலத்தை தடுத்து நிறுத்த உடன் செயற்படுமாறு இலங்கை அரசிடமும் விடுதலைப் புலிகளிடமும் புலம் பெயர் அமைப்புக்கள் கோரிக்கை : முல்லைத்தீவிலுள்ள பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முதலிடம்!

முல்லைத்தீவில் இடம்பெறும் யுத்தத்தில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் பாதுகாப்பையும் நலன்களையும் எள்ளளவும் கருத்திலெடுக்காது உதாசீனம் செய்யும் இலங்கை அரசையும் விடுதலைப்புலிகளையும் இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கையின் வடபகுதியில் முளைவிடத்தொடங்கியிருக்கும் மனித பேரழிவை தடுப்பதற்கு, யுத்தத்தில் சிக்கித் தத்தளிக்கும் இரண்டரை லட்சம் பொதுமக்களின் பாதுகாப்பை உடனடியாக முதன்மைப்படுத்துமாறு இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் நாம் கோரிக்கை விடுக்கிறோம்.

சர்வதேசச் செஞ்சிலுவை சங்கத்தின் 28 ஜனவரி 2009 திகதியிட்ட அறிக்கை, முளைவிடத்தொடங்கியிருக்கும் மனித பேரவலம் தொடர்பில் பின்வருமாறு எச்சரிக்கை செய்கிறது :

“ நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டிருப்பதுடன், போதிய பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகளும் இல்லாததொரு சூழ்நிலையில் ஏராளமானவர்கள் காயப்பட்டும் இருக்கின்றனர்……. இரு தரப்பினருக்கும் இடையிலான யுத்தத்தில் பொது மக்கள் அகப்பட்டிருப்பதுடன், அம்புலன்ஸ்கள் வைத்தியசாலைகள் என்பன செல் தாக்குதலுக்குள்ளாகி காயமுற்றவர்களை அப்புறப்படுத்துவதில் ஈடுபட்டிருந்த பல தொண்டு நிறுவனப் பணியாளர்களும் காயமுற்றிருக்கின்றனர்.”

கடந்த சில மாதங்களாக திரும்ப திரும்ப இடப்பெயர்வுக்குள்ளாகி வருவதுடன், விமான தாக்குதல்கள் மற்றும் எறிகணை தாக்குதல்களிலிருந்து தப்பியோடி, போதிய உணவு மருத்துவ தங்குமிட வசதிகளின்றி சொல்லொணா துயரங்களை அனுபவித்து வரும் வன்னிப்பகுதி மக்களின் பாதுகாப்பையும் நலன்களையும் பற்றிய எமது ஆழ்ந்த கரிசனையையும் நாம் தெரிவிக்க விரும்புகின்றோம்.

முல்லைத்தீவில் தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு பொதுமக்களை பலவந்தமாக தங்களுடன் பின்வாங்குமாறு செய்ததற்கு விடுதலைப் புலிகளே பொறுப்பாவார்கள். இலங்கை இராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்குமிடையேயான நேரடி யுத்த களமுனைக்கு இடையே இரண்டரை லட்சம் பொதுமக்கள் சிக்கியுள்ளதாக செஞ்சிலுவை சங்கமும் ஜக்கிய நாடுகள் ஸ்தாபனமும் கணிப்பிட்டுள்ளன. இப்பகுதிகளிலிருந்து வெளியேற முயல்பவர்கள், இப் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தும் மற்றும் புலிகளால் கொலை செய்யப்படும் நிலை உள்ளதாக எமக்குக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் இலங்கை அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் „பாதுகாப்பு வலயம்” போதுமானதல்ல. பாதுகாப்புவலயத்திற்கு தப்பிவந்த பொதுமக்கள் கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்திற்கு ஆளாகவேண்டிய பேராபத்தை சந்திக்கின்றனர். விடுதலைப் புலிகள் பாதுகாப்பு வலயத்திற்கு அண்மையிலிருந்து தம்மீது தாக்குவதால் தாம் பதில் குண்டுத்தாக்குதல்கள் நிகழ்த்துவதாக அரசதரப்பு சொல்கிறது. அரசின் இந் நடவடிக்கை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாதது. எந்த விலை கொடுத்தேனும் தமது யுத்த நிகழ்ச்சி நிரலை கொண்டுசெல்ல முயலும் அரசின் முனைப்பையே இது காட்டுகிறது. தமிழ் பொதுமக்களின் நலனில் தாங்கள் கரிசனை கொண்டிருக்கிறோம், முல்லைத்தீவில் இருந்து தப்பி வருபவர்கள் மேல் தாங்கள் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை காட்டுவதற்கான உடனடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கு நேரும் பேராபத்தை அறிந்துகொண்டு, யாழ் பேராயர் வண. தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் அவர்கள் ஜனாதிபதிக்கு எழுதிய 25 ஜனவரி 2009 திகதியிட்ட கடிதத்தில் பின்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறார்:

“ விடுதலை புலிகள் பாதுகாப்புவலையங்களில் பொதுமக்கள் மத்தியில் நின்று ராணுவத்தின் மேல் எறிகணைகளையும் குண்டுகளையும் வீசுவதை தவிர்க்குமாறு அவசரமாக வேண்டுகிறோம். இது மென்மேலும் உயிர் இழப்புகளை அதிகரித்து மக்களின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும். பாதுகாப்பு வலையத்தை கண்காணிக்குமாறு நான் இரு தரப்பையும் கண்டிப்பாக வற்புறுத்துகிறேன்”.

விடுதலை புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதும், அவர்கள் தப்பி ஓடாமல் தடுப்பதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாததென்பதுடன், சர்வதேச போர் விதிகளை மீறும் செயலுமாகும். ஆனாலும் தனது பிரஜைகள் அனைவரதும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது இலங்கை அரசின் தலையாய கடமையாகும். ராணுவ நோக்கங்களை விட மக்களின் பாதுகாப்பே முதன்மை படுத்தப்பட வேண்டியது. அதிகரித்துவரும் பொதுமக்களின் உயிரிழப்புகள், காயப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று மருத்துவ உதவி பெறமுடியாத கையறு நிலை, யுத்தத்தில் சிக்குண்டு பீதியடைந்திருக்கும் பொதுமக்களின் அவலநிலை ஆகியவற்றை இலங்கை அரசு உடனடியாக கவனத்திலெடுத்து அதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

மனித பேரழிவுக்கான நிலை உருவாகியிருப்பதை பற்றி சர்வதேச சமூகம் உணர்ந்திருக்கிறதென்பது அவர்களின் அறிக்கைகளூடாகத் தெரிய வருகிறது. ஆனாலும் இலங்கை அரசின் மீதும் விடுதலை புலிகள் மீதும் தொடர்ந்த அழுத்தத்தை பிரயோகித்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச சமுகம் முன்வர வேண்டும்.
எனவே அய்க்கிய நாடுகள், அய்க்கிய நாட்டு அமைப்புகள், இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் அரசுகள், சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் மற்றும், தமிழ் நாடு அரசு ஆகியவற்றிற்கு நாம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம் :

மேலதிகமான நேர்த்தியான பாதுகாப்புவலையங்கள ஏற்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தல்;

பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற ஏதுவாக பாதுகாப்பு வாசல்களை ஏற்படுத்தி, பாதுகாப்பு வலயங்களுக்கு பொதுமக்கள் சென்றடைவதற்கு ஏதுவாக அப்பகுதிகளில் யுத்தத்தை நிறுத்த விடுதலை புலிகளையும் இலங்கை அரசையும் வற்புறுத்தி கோருதல்

யு.என்.எச்.சீ.ஆர்., செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு தங்குதடையற்ற போக்குவரத்து வசதிகள் செய்து அவர்கள் பொதுமக்களுக்கு முழுமையான சேவையை செய்ய அனுமதி வழங்குமாறு கோருதல்

அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு தப்பி வரும் பொதுமக்கள் மேல் அரச படைகளோ ஆயுத குழுக்களோ மக்களின் உரிமைகளை மீறும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் தடுத்தல்

இலங்கை அரசும் விடுதலை புலிகளும் ஜெனீவா சாசன விதிகளுக்கு அமைவாக பொதுமக்களை நடாத்த வேண்டுமெனவும், ராணுவத்தினரோ விடுதலைப்புலி இயக்கத்தினரோ சரணடைந்தாலோ அல்லது கைப்பற்றப்பட்டாலோ போர்க்கைதிகள் சம்பந்தமான சர்வதேச விழுமியங்களை பேணி அவர்களது உயிர்வாழும் உரிமை, மனிதாபிமானமாக நடத்துதல் போன்றவற்றை இருதரப்பினரும் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தல்.


ஒப்பம் :

இலங்கை ஜனநாயக ஒன்றியம்
புலம்பெயர்ந்த இலங்கையர்களின் சர்வதேச இணையம்
ஜனநாயகத்திற்கும் நீதிக்குமான குழு (ஐ.இ.)
தேனீ - இணைய சஞ்சிகை
உதயம் பத்திரிகை - அவுஸ்திரேலியா
பறை சஞ்சிகை - நோர்வே
உயிர்நிழல் - அரசியல் கலை இலக்கிய தமிழ் சஞ்சிகை, பிரான்ஸ்
உயிர் மெய் - அரசியல் கலை இலக்கிய தமிழ் சஞ்சிகை, நோர்வே
சுதந்திர ஊடகம், நோர்வே
தென் ஆசிய தோழமை கழகம், ஐ.இ.
தென் ஆசிய தோழமை முயற்சி, அமெரிக்கா
வைகறை - கனடா
சிறிலங்கா இஸ்லாமிக் போறம் -யு. கே
சிறிலங்கா சங்கம் ஸ்டுட்கார்ட்-ஜேர்மனி
சிறிலங்கா வட்டம் பேர்லின் ஜேர்மனி
கனேடிய ஜனநாயக அமைப்பு, கனடா

4 Kommentare:

 1. Sri Lanka said this war is to liberate Tamils from the clutches of the LTTE.
  Sri Lanka says, 95 percent of the war is complete.
  These Tamil civillians are citizens of Sri Lanka. Then, it is the resoponsibility of Sri Lanka to protect them and provide them with saftey, food & medicine.
  LTTE has invited UN to visit the area and judge for themselves.
  Why not government allow UN to visit the area?
  UN should give safe passage for these civilians. they should manage run and operate the camps for these IDPs.
  Please insist the Sri Lankan government it is its responsibility to safe guard the Tamils.

  ReplyDelete
 2. suseenthiran I personally trust your intention, but can not trust the people and the media who signed on this petition. You know well to whom their bells toll. தேனீ? SLDF? உதயம்? Give me a break! I do not see any sincerity in this request though it sings a sweet melody. When GoGL wins many in this group of groups will be "officiated" as the leaders of tamil people. Now we know why Jesus will be & should be resurrected in his second coming.

  ReplyDelete
 3. suseenthiran I personally trust your intention, but can not trust the people and the media who signed on this petition. You know well to whom their bells toll. தேனீ? SLDF? உதயம்? Give me a break! I do not see any sincerity in this request though it sings a sweet melody. When GoGL wins many in this group of groups will be "officiated" as the leaders of tamil people. Now we know why Jesus will be & should be resurrected in his second coming.

  ReplyDelete
 4. I cannot understand this view. If just few fighters can hold 2.5 lac people under ransom is unbeleivable. THere is no logic behind this writing.

  ReplyDelete